8 தொகுதிகளை விசிக ஏற்றது ஏன்? ராஜ்யசபா சீட் எப்போது? புதுச்சேரியில் காங்கிரஸ் குளறுபடிகள் என்ன? திருமாவளவன் பேட்டி- முழுமையாக!

Published On:

| By Mathi

VCK Thirumavalavan Interview

விடுதலை சிறுத்தைகளின் நலன் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு நாம் அங்கம் வகிக்கும் கூட்டணியின் நலன்களும் முக்கியமானது என்பதையும் கருத்தில் கொண்டு திமுக கூட்டணியில் 8 இடங்களைப் பெற்றிருக்கிறோம் என்று அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.

சென்னையில் இன்று மார்ச் 24-ந் தேதி திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. விசிகவுக்கு 6 தனித் தொகுதிகள், 2 பொதுத் தொகுதிகள் என மொத்தம் 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. கூறியதாவது: மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 6 இடங்கள் தனித் தொகுதிகள், இரண்டு இடங்கள் பொதுத் தொகுதிகள்.

நேற்று நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலை குழுக் கூட்டத்தில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைப் பெற வேண்டும் என்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினரை வருகிற 2028-லே காலியாக உள்ள இடத்தில் வழங்க வேண்டும் என வலியுறுத்தவும் தோழர்கள் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினர். அந்தத் தீர்மானம் குறித்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களிடத்திலே நாங்கள் கலந்து பேசினோம்.

ADVERTISEMENT

23 கட்சிகளுடன் மெகா கூட்டணி

23 கட்சிகள் இடம்பெற்றுள்ள ஒரு மெகா கூட்டணி, ஏழு எட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து கட்டுக்கோப்பாக இயங்கி வருகிற கூட்டணி, கருத்தியல் சார்ந்து இயங்குகிற கூட்டணி. தமிழ்நாட்டில் மட்டுமல்ல அகில இந்திய அளவில் மதவெறி சக்திகள், சாதிவெறி சக்திகள், வலதுசாரி சக்திகள் வலுப்பெறுவதைத் தடுக்க வேண்டும்; நாட்டையும் மக்களையும் மதவாத வெறுப்பு அரசியலிலிருந்து பாதுகாக்க வேண்டும் எனவும் உறுதியேற்றுச் செயல்படுகிற கூட்டணி. இந்தக் கூட்டணியின் வெற்றியை முன்னிறுத்தி அனைத்து கோணங்களிலும் நல்லது கெட்டது போன்றவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து, விடுதலை சிறுத்தைகளின் நலன் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு நாம் அங்கம் வகிக்கும் கூட்டணியின் நலன்களும் முக்கியமானது என்பதையும் கருத்தில் கொண்டு இந்த முடிவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உடன்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தோடு நாங்கள் பயணிப்பதற்கு, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பயணிப்பதற்கு முதன்மையான காரணம், இடதுசாரி ஜனநாயக அரசியல் தமிழ் மண்ணில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான். வலதுசாரி பிற்போக்கு அரசியல் காலூன்றி விடக்கூடாது, வலுப்பெற்று விடக்கூடாது; அது தமிழ்நாட்டிற்கும் நல்லதல்ல, இந்திய தேசத்திற்கும் நல்லதல்ல என்கிற பார்வையிலிருந்துதான் என்பதை அவ்வப்போது நாங்கள் தெளிவுபடுத்திருக்கிறோம், உறுதிப்படுத்தி இருக்கிறோம். அதே அடிப்படையில்தான் இந்தப் பேச்சுவார்த்தையையும் நாங்கள் நடத்தி முடித்திருக்கிறோம்.

200-க்கும் அதிகமான இடங்களில்

எனவே, 8 தொகுதிகளில் இன்றைக்குக் கையெழுத்திட்டு இருக்கிறோம். 200-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தக் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்கிற வேட்கையோடு, தீவிர முனைப்போடு விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் பணிகளை முன்னெடுப்போம். தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு இந்தக் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

ஒருபுறம் வலதுசாரிகள், அதாவது சங் பரிவார்களின் தலைமையிலான வலதுசாரிகள்; இன்னொருபுறம் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மாமேதை மார்க்ஸ் போன்ற மாமனிதர்களின் அரசியலைத் திரித்துப் பேசி, திராவிட அரசியலுக்கு எதிராகக் களமாடுகிறோம் என்கிற பெயரில், சமூக நீதி அரசியலுக்கே வேட்டு வைக்கும், உலை வைக்கும் முயற்சியில் ஈடுபடுகிற திரிபுவாத சக்திகள். ஆகவே, வலதுசாரி சக்திகளையும் திரிபுவாத சக்திகளையும் வீழ்த்த வேண்டிய பொறுப்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு யாரையும் விடக் கூடுதலாக இருக்கிறது என்று நாங்கள் உணர்கிறோம்.\

இடதுசாரி அரசியலை பாதுகாக்க..

தற்காலிகமாக இந்தத் தேர்தலில் எங்களுக்கு என்ன லாபம் என்று கணக்குப் போட்டு, அதன் மூலம் வலதுசாரிகள் வலுப்பெறுவதற்கு இடம் கொடுத்துவிட்டால், பிறகு தமிழ்நாட்டு அரசியலில் சாதிவெறியர்களும் மதவெறியர்களும் தான் கொட்டமடிப்பார்கள்; அவர்களின் கைகள் ஓங்கும். விளிம்புநிலை மக்களுக்காகப் போராடக்கூடிய இடதுசாரி சக்திகள் பின்னுக்குத் தள்ளப்படும் நிலை உருவாகும். என்னுடைய பார்வையில் இன்றைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குத் தந்திருக்கிற 8 தொகுதிகளும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தந்திருக்கிற 10 தொகுதிகளும் சேர்த்து, 18 தொகுதிகள் இடதுசாரி அரசியலைப் பாதுகாப்பதற்காகப் போராடக்கூடிய இயக்கங்களுக்கு திமுக வழங்கியிருக்கிறது என்றுதான் நான் புரிந்து கொள்கிறேன்.

விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் லீக், முஸ்லிம் அமைப்புகள் – சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கிற சக்திகள் – ஆக, இந்தக் கட்சிகளுக்கெல்லாம் ஒதுக்கப்பட்டிருக்கிற இந்த இடங்கள் மேலோட்டமாகப் பார்த்தால் எண்ணிக்கையில் குறைவு என்று தோன்றும். ஆனால், எல்லாத் திசைகளிலும் நாம் கூட்டிக் கழித்துக் கணக்குப் போட்டுப் பார்த்தால் வெற்றி ஒன்றே இலக்கு; வெற்றியை அடிப்படையாகக் கொண்டே இவற்றை நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். ஒன்று இரண்டு தொகுதிகளுக்காக முரண்பட்டு, கூட்டணிக்குள்ளே சலசலப்பை உருவாக்கி, வெற்றிக்கான வாய்ப்புகளை நாம் சேதப்படுத்தி விடக்கூடாது என்கிற பொறுப்புணர்வோடுதான் இந்த நிலைப்பாட்டை நாங்கள் எடுத்திருக்கிறோம். இதில் எங்களுக்கு மனநிறைவு உள்ளது.

எட்டு என்பதே எட்டிப்பிடி என்பதற்கான ஒரு சைகை தான். எங்கள் இலக்கை எட்டிப்பிடிப்பதற்கான ஒரு இடமாக இதைப்பார்க்கிறோம். எட்டுவோம், எங்கள் இலக்கை எட்டுவோம், வெற்றியை எட்டுவோம், நாங்கள் தமிழகத்தில் தவிர்க்க முடியாத ஒரு சக்தி என்பதை நிலைநாட்டுவோம்.

பானை சின்னத்தில் போட்டி

விசிக, அங்கீகரிக்கப்பட்ட மாநிலக்கட்சி தான். அங்கீகரிக்கப்பட்ட மாநிலக்கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த சின்னம் எங்களுக்கான சின்னம், ஆகவே அந்த சின்னத்தில் தான் நாங்கள் போட்டியிடுவோம். சின்னம் குறித்து எந்த கேள்வியும் இப்போது இல்லை.

விசிகவுக்கு ராஜ்யசபா சீட்

ராஜ்யசபாவை நாங்கள் வெளிப்படையாகப் பேசினோம். அது நியாயமானது தான், உங்களுக்குத் தருவதற்கான எல்லா தகுதியும் அல்லது எல்லாவிதமான முகாந்திரமும் உள்ளது. அது பற்றி இப்போதைக்கு முடிவெடுக்க முடியாத நிலை இருக்கிறது. ஏனென்றால் இந்த தேர்தல் முடிந்து விட்டது. நான்கு இடங்களும் நிரப்பப்பட்டுவிட்டது. 2028-ல் நான்கு இடங்கள் அல்லது ஆறு இடங்கள் காலியாகும். அல்லது அதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காலியாகும். எனவே இப்போதைக்கு அதை பேசுவதிலே எந்தப் பொருளுமே இல்லை என்று நாங்கள் அதற்கு உரிய அழுத்தம் கொடுக்கவில்லை. கேட்டு இருக்கிறோம், பரிசீலிப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

பலவீனமான கட்சி இல்லை

விசிக சிதைக்கப்படும் அளவுக்கு பலவீனமான கட்சி இல்லை என்று நான் நம்புகிறேன். மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிற ஒரு மாநிலக் கட்சி. அவ்வளவு இலகுவாக யாராலும் இந்தக் கட்சியைச் சிதைத்து விட முடியாது. அதற்கு ஒருபோதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடங்கொடுக்காது. எங்கள் சுயநலத்தை விட, எங்கள் கட்சியின் நலன்களை விட, தனிநபர் நலன்களை விட, சமூக நலன்கள், மாநில நலன்கள், தேச நலன்கள் ஆகியவற்றை நாங்கள் முன்னிறுத்திப் பார்க்கிறோம். ஆகவே மற்றவர்களுக்கு எங்கள் நிலைப்பாடு பலவீனமாக இருக்கலாம், ஆனால் எங்களுக்குத் தெரியும் எங்கள் பலம் என்ன பலவீனம் என்ன என்று எல்லாவற்றையும் கணக்கில் கொண்டுதான் நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். எங்களோடு இருக்கிற எல்லோரும் மனநிறைவோடு இடங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற விட்டுக்கொடுக்கும் உளவியலோடுதான் இதை நாங்கள் அணுகுகிறோம். மற்றவர்களைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. எங்களுக்கு இவ்வளவு இடங்கள் வேண்டும் என்று நாங்கள் அடம்பிடிக்கவில்லை, பிடிவாதம் செய்யவில்லை. மற்றவர்களுக்கு என்ன தரப்போகிறீர்கள் என்றெல்லாம் நாங்கள் ஒப்பீடு செய்யவில்லை. மற்றவர்களுக்கு எத்தனை தொகுதிகளைத் தந்திருக்கிறீர்கள் என்று நாங்கள் ஒப்பீட்டு எந்த விவாதத்தையும் நடத்தவில்லை.

திமுகவின் இடத்தில் இருந்து விசிக பார்க்கிறது

திமுக இருக்கிற இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருந்து எல்லாவற்றையும் நாங்கள் சீர்தூக்கிப் பார்க்கிறோம். திமுகவுக்கு அந்தப் பொறுப்பு இருக்கிறது, எங்களுக்கு அந்தப் பொறுப்பில்லை என்று நாங்கள் அதைத் தட்டிக்கழிக்க முடியாது. கூட்டணிக்குத் திமுக தலைமை தாங்குகிறது என்றாலும் கூட அந்த இடத்திலிருந்து திமுக எப்படி எல்லாவற்றையும் அணுகுகிறதோ அதே போல விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அந்த இடத்திலிருந்து எல்லாவற்றையும் நாங்கள் சீர்தூக்கிப் பார்க்கிறோம். அந்த அடிப்படையில் தான் எங்களோடு பயணிக்கக்கூடிய எல்லோருக்கும் மனநிறைவான இடங்களைத் தர வேண்டும் என்பதையும் கூட நாங்கள் சுட்டிக்காட்டியிருக்கிறோம். ஆகவே இந்த முடிவில் யாரும் எங்களை வீழ்த்துவதற்கோ பலவீனப்படுத்துவதற்கோ ஒருபோதும் இடமில்லை, அந்த அளவுக்கு இடங்கொடுக்கிற அளவுக்கு நாங்கள் பலவீனமாகவும் இல்லை.

புதுச்சேரியில் என்ன நடக்கிறது?

புதுச்சேரியில் தனித்துப் போட்டி என்று நாங்கள் அறிவித்திருக்கிறோம். 3 தொகுதிகளில் நாங்கள் நாமினேஷன் செய்திருந்தோம். ஏன்3 தொகுதிகளில் நாமினேஷன் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது என்றால், வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு கடைசி நிமிடம் வரையில் கூட்டணி உறுதிப்படவில்லை. திமுக, காங்கிரசுக்கு இடையே கிட்டத்தட்ட 7 நாட்கள், 8 நாட்கள் இடைவிடாமல் பேச்சுவார்த்தை நடந்து கொண்டே இருந்தது. அந்தப் பேச்சுவார்த்தையில் எண்ணிக்கையே முடிவாகவில்லை. இந்த நிலையில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடிந்துவிடும் என்பதனால், முன்னெச்சரிக்கையாக நாங்கள் மூன்று தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தோம். உசுடு தொகுதியிலும், நெட்டப்பாக்கம் தொகுதியிலும் – தனித் தொகுதிகள் இந்த இரண்டிலும் எமது கட்சியின் முன்னணித் தோழர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார்கள்.

வேட்பு மனுத் தாக்கல் செய்த காங்கிரஸ்

அதேபோல உழவர்கரை பொதுத்தொகுதி; கடந்த ஆண்டு எங்களுக்கு காங்கிரஸ் அந்தத் தொகுதியைத்தான் ஒதுக்கியது. தனித் தொகுதியை நாங்கள் கேட்டோம்; ‘இல்லை, இல்லை உழவர்கரையை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று போனமுறை காங்கிரஸ் எங்களுக்கு அந்தத் தொகுதியைத் தந்தது. ஆகவே, இந்த முறையும் 6,000-க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்ற தொகுதி என்பதனால், இந்த முறையும் அந்தத் தொகுதி எங்களுக்கு வேண்டும் என்று மூன்று தொகுதிகளை எழுதிக் கொடுத்திருந்தோம். கடைசியாக வேட்புமனுத் தாக்கல் முடிந்த பிறகு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதிதான் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த ஒரு தொகுதியிலும் காங்கிரஸ் சார்பிலே வேட்புமனு தாக்கல் செய்தவர்கள், தனி தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள், திரும்ப பெறுவதற்கு தயாராக இல்லை. அது இன்னும் இழுபறியாகத்தான் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் தனித்து சுயேச்சையாக போட்டியிட்டால் அல்லது காங்கிரஸ் சார்பிலே போட்டியிட்டால் கூட்டணியில் என்ன பொருள் இருக்கிறது, என்ன அர்த்தம் இருக்கிறது என்கிற கேள்வி எழுகிறது. ஆகவேதான் அந்த மூன்று தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று அறிவித்திருக்கிறோம். திமுக தரப்பிலே எங்களுக்கு சொல்லப்பட்டிருக்கிற தகவல் வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் இருக்கிறது, எனவே பொறுமையாக இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்திருக்கிறார்ர்கள். நாங்கள் பொறுத்திருக்கிறோம்.

எல்லா தொகுதியிலும் காங்கிரஸும் மனு செஞ்சிருக்கு, அவங்க எப்படி திரும்ப பெறப்போகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த நிலையில் தான் நாங்கள் தனித்துப்போட்டி என்று அறிவித்திருக்கிறோம். பேச்சுவார்த்தையில் மறுபடியும் ஒரு சுமுகமான தீர்வு காண இடம் இருக்கிறது.

அது நாளைக்கோ நாளை மறுநாளோ கூடிப் பேசுவோம். அந்தப் பேச்சுவார்த்தையில் தான் இறுதி முடிவு செய்யப்படும். கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் அவரவர் விரும்புகிற தொகுதிகளை எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் கேட்கிற தொகுதியை மற்ற கட்சிகளும் கேட்பார்கள். மற்ற கட்சிகள் கேட்கிற தொகுதிகளை நாங்களும் கேட்டிருப்போம். எங்களுக்கு இடையிலே ஒருவருக்கொருவர் புரிந்துணர்வோடு ஒப்பந்தத்தை மேற்கொள்வோம்.

காங்கிரஸோட அணுகுமுறையில் எங்களுக்கு ஒரு அதிருப்தி இருக்கிறது என்பதை நான் வெளிப்படையாக சொல்ல விரும்புகிறேன். புதுச்சேரியில், புதுச்சேரியில் கடைசி நிமிடம் வரை வேட்பு மனு தாக்கல் செய்கிற வரைக்கும் கூட ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை என்று சொன்னால், எப்படி எங்களைப் போன்ற அமைப்புகள் ஒரு முடிவு எடுக்க முடியும்? ஒரு தொகுதி என்று ஒதுக்கிய பிறகு வெளிப்படையாக நாங்கள் கூட்டணி முடிவுக்கு ஏற்ப, ஒப்பந்த முடிவுக்கு ஏற்ப செயல்படத் தயாராக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு, உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு கூட்டணிக்குத் தலைமை தாங்குகிற காங்கிரஸுக்கு புதுச்சேரியைப் பொறுத்தவரையில், அது 16 இடங்களில் போட்டியிடுகிறது, காங்கிரஸிற்கு உள்ளது. ஆகவே அங்க ஒரு குழப்ப நிலை இன்னும் நீடிக்கிறது. அதிலே இன்னும் சொல்லப்போனால், திமுக போட்டியிடக்கூடிய ஒரு நாலைந்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுமா என்கிற சந்தேகம் உருவாகியிருக்கிறது. அவர்கள் ஃப்ரெண்ட்லி ஃபைட்டிங் (Friendly fighting) என்கிற பெயரில் நீங்களும் நில்லுங்கள், நாங்களும் இந்த நான்கு இடங்களில் நிற்கிறோம், யார் வெற்றி பெறுகிறார்களோ தேர்தலுக்குப் பிறகு நாம் ஆட்சி அமைக்கும் போது ஒப்பந்தம் செய்து கொள்வோம் என்பதை போன்ற வாதங்களைச் செய்கிறார்கள் என்றும் கேள்விப்படுகிறோம். ஆகவேதான் எங்கள் தோழர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நாங்கள் தனித்து போட்டி என்று அறிவித்திருக்கிறோம்.

செய்தியாளர்களின் கேள்விகளும் திருமாவளவன் பதில்களும்

கேள்வி: காங்கிரஸ் வந்து ஆட்சியில இல்ல, பல மாநிலங்கள்ல ஆட்சியை இழந்திருக்காங்க. ஆனா மறுபுறம் இருக்கக்கூடிய பாஜக மாநிலம் பல்வேறு நாடுகள்ல, மாநிலங்கள்ல ஆட்சி பண்றாங்க, நாடாளுமன்றத்துல 10 வருஷமா ஆட்சியில் இருக்காங்க. அந்த கட்சி கூட்டணிக்கு மதிப்பு கொடுத்து இந்த 10 தொகுதிகளை குறைச்சிக்கிறாங்க. ஆனா காங்கிரஸ் அவங்களுடைய நிலையை அறியாம தொடர்ச்சியா கூட்டணிக் கட்சிகள்ள அழுத்தம் போட்டு தங்களை நிரூபிச்சுக்க முயற்சி பண்றாங்கன்னு நினைக்கிறேன்.

பதில்: இந்தக் கேள்விக்கு நீங்க காங்கிரஸ் தலைவரிடம் தான் விடையை எதிர்பார்க்க வேண்டும். இதிலே நாங்கள் கருத்து சொல்ல எதையும் விரும்பவில்லை.

கேள்வி: காங்கிரஸ் தலைமையில தலையிடாம இருக்குற டெல்லி தலைமை இதை வேடிக்கை பார்க்குதா?

பதில்: அவங்க பொதுவா டெல்லியில இருந்துதான் எல்லா முடிவும் எடுப்பாங்க. மாநிலங்கள் அளவில் அது பாண்டிச்சேரியா இருந்தாலும், தமிழ்நாடா இருந்தாலும் இறுதி முடிவு எடுக்கிற நிலை தேசிய கட்சி என்கிற முறையில் காங்கிரஸ் டெல்லியிலிருந்துதான் கடைசி நிலைப்பாட்டை அறிவிப்பார்கள், முடிவை அறிவிப்பார்கள். காங்கிரஸ் தலையிடாமல் இருக்கிறது என்று சொல்ல முடியாது. காங்கிரஸ் தலையிடுகிறது. ஆனால் புதுச்சேரியிலே இன்னும் ஒரு குழப்ப நிலை இருக்கிறது என்பதனால்தான் நாங்கள் இதை தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share