ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அதிகபடியான குளறுபடி இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
பகுஜன் சமாஜ் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் 2024ஆம் ஆண்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 10 வழக்கறிஞர்கள் உட்பட மொத்தம் 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
தலைமறைவாக உள்ள ‘சம்பவ’ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கடந்த ஓராண்டாக தேடி வருகின்றனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது செம்பியம் போலீசார் 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் வழக்கை போலீசார் முறையாக விசாரிக்கவில்லை எனக்கூறி ஆம்ஸ்ட்ராங் சகோதரர் கீனோஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
சிபிஐக்கு மாற்றியது ஏன்?
நீதிபதி பிறப்பித்த அந்த 21 பக்க உத்தரவில்,
‘ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மாநில காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைக்கும், முதல் தகவல் அறிக்கைக்கும் இடையில் அதிகப்படியான முரண்பாடுகள் உள்ளன.
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தவர்களை அடையாளம் காட்ட முடியும் என பல சாட்சிகள் இருந்த போதும் குற்றவாளியை அடையாளம் காண்பதற்கான அணிவகுப்பு போலீசாரால் நடத்தப்படவில்லை.
மற்றொரு குறிப்பிடத்தக்க கவலை என்னவென்றால், குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபர்களான A2 (‘சம்பவ’ செந்தில் அல்லது செந்தில்குமரன்) மற்றும் A18 (‘மொட்டை’ கிருஷ்ணன் அல்லது கிருஷ்ணகுமார்) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும் தலைமறைவாகவே உள்ளனர்.
வழக்கின் விசாரணை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, ஊடகங்கள் மற்றும் அரசியல் காரணங்களால் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என நீதிமன்றம் கருதுகிறது
முக்கிய குற்றவாளி தொடர்ந்து கைது செய்யப்படாமல் இருப்பது, விசாரணை குறித்த சந்தேகத்தை இயல்பாகவே எழுப்புகிறது.
சாட்சியங்களை அடக்குதல் அல்லது அழித்தலுக்கான சாத்தியக்கூறுகளை புறக்கணிக்க முடியாது
விசாரணை, குற்றத்தை பற்றி மட்டுமே உள்ளது. கொலைக்கான நோக்கம், பின்னணி மற்றும் சதி உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தப்படவில்லை.
கொலையான நபரின் சமூக முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ள வேண்டும். அதனால் இந்த வழக்கில் நியாமான, பாரபட்சமற்ற விசாரணை தேவை.
அனைத்து முக்கிய சாட்சிகளின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், மனுதாரரான ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர், ஆம்ஸ்ட்ராங்குடன் தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியாகவும் நெருங்கிய தொடர்புடையவர்கள் மற்றும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதை அறிந்தவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவில்லை அல்லது இறுதி அறிக்கையில் சேர்க்கப்படவில்லை என்று கூறுகிறார்.
இந்த காரணங்களால் செம்பியம் காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்படுகிறது.
அரசியல் செல்வாக்கு உள்ளிட்ட அழுத்தம் இல்லாமல் சுதந்திரமான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்காக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.