துக்ளக் ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தி “ஒரு அரசியல் வியாபாரி- பொலிட்டிக்கல் புரோக்கர்; அதிமுக அழிய வேண்டும் என நினைப்பவர்” என்று அதிமுகவின் மாநிலங்களவை எம்.பி.யான முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மிக கடுமையாக ஒருமையில் விமர்சித்துள்ளார்.
விழுப்புரம் பகுதியில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் சிவி சண்முகம் பேசியதாவது: குருமூர்த்தி என ஒரு.. இருக்கிறார்.. பொலிட்டிக்கல் புரோக்கர்.. அரசியல் வியாபாரி.
அதிமுக, திமுக.. ஏதாவது ஒரு கட்சியை அழிக்கனும்னு நினைக்கிறவர்.. அதிமுகவை பாதுகாக்க நினைக்கிறவர் இல்லை.. அதிமுகவை அழிக்க நினைக்கிறவர்..
எங்க தைரியத்தை பற்றி பேச குருமூர்த்திக்கு யோக்கியதை இல்லை.. நாங்க எல்லாம் பேசுனா தாங்க மாட்ட..
எப்ப பார்த்தாலும் அதிமுக, நான்காக போயிருச்சு.. ஐந்தா போயிருச்சு.. எல்லோரும் ஒன்றிணையும்னு பேசுறது..
அதிமுக எத்தனையா போனா உனக்கு என்ன நோவுது? அது எங்க பிரச்சனை? உனக்கு என்ன கவலை? அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவங்களை எப்படி கட்சியில சேர்க்க முடியும்? அதை நாங்க பேசிக்கிறோம். நீ யாரு? எங்களை இணைய, இணைக்க சொல்றதுக்கு? அதிமுக தலைமை கழகத்தை காலால் எட்டி உதைத்த துரோகிகளை கட்சியில சேர்க்கனுமா? நீ யாரு அதை சொல்றதுக்கு? இவ்வாறு சி.வி. சண்முகம் கூறினார்.
2017-ல் அதிமுகவில் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய போது அவருக்கு ஆலோசகராக இருந்தவர் குருமூர்த்தி. அப்போது அதிமுக அணிகளைச் சேர்ந்த தலைவர்கள், குருமூர்த்தி வீட்டுக்குப் போய் ஆலோசனை கேட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் அதிமுக தலைவர்களை பொதுவெளியில் இழிவாகவே பேசினார் குருமூர்த்தி. தற்போதும் அதிமுக ஒன்றுபட வேண்டும் என சொல்லி வருகிறார். இந்த நிலையில் குருமூர்த்தியை மிக கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுகவின் மூத்த தலைவரான சிவி சண்முகம் எம்.பி.
