தமிழக அரசு, புதிய டிஜிபியை நியமிக்காமல் பொறுப்பு டிஜிபியை நியமனம் செய்தது ஏன்? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டார். இதற்கு எதிராக மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குநர் ஹென்றி திபேன், உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
டிஜிபி நியமன விவகாரங்களில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு பொறுப்பு டிஜிபியை நியமித்துள்ளது; இது நீதிமன்ற அவமதிப்பாகும் என அதில் ஹென்றி திபேன் சுட்டிக்காட்டிக் காட்டி இருந்தார்.
இந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பிஆர் கவாய் தலைமயிலான பெஞ்ச் இன்று (செப்டம்பர் 8) விசாரணை நடத்தியது. இன்றைய விசாரணையின் போது, தமிழ்நாடு அரசு ஏன் பொறுப்பு டிஜிபியை நியமித்தது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் இன்றைய விசாரணையின் போது மனுதாரர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் நித்யா ராமகிருஷ்ணன் மற்றும் வழக்கறிஞர் எஸ். பிரசன்னா ஆகியோர் ஆஜராகினர். அப்போது, தமிழக டிஜிபி நியமன நடைமுறைகளை ஒரு மாதத்துக்குள் மாநில அரசு முடிக்க உத்தரவிட வேண்டும் என நித்யா ராமகிருஷ்ணன் வலியுறுத்தினர்
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, டிஜிபி பதவிக்கான அதிகாரிகள் பெயர் பட்டியல் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது அரசியல் சாசன அமைப்பு. அதற்கான பொறுப்புகளையும் அறிவோம். ஆகையால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று அந்த ஆணையத்துக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் ஒப்புக் கொள்ள கூடாது என்றார்.
இதனையடுத்து டிஜிபி பதவிக்காக தமிழ்நாடு அரசு அனுப்பிய அதிகாரிகள் பரிந்துரை பட்டியலை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் விரைவாக பரிசீலித்து ஒப்புதல் அளிக்க வேண்டும்; இதனடிப்படையில் தமிழ்நாடு அரசு, புதிய டிஜிபியை நியமிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பொறுப்பு டிஜிபி விவகாரம்- பின்னணி என்ன?
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால், ஆகஸ்ட் 31-ந் தேதி ஓய்வு பெற்றார். இதனையடுத்து தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டார்.
2006-ம் ஆண்டு பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் டிஜிபி நியமனம் தொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி இருந்தது. அதில், தகுதியின் அடிப்படையில், சீனியர் அதிகாரியை டிஜிபியாக நியமிக்க வேண்டும்; இது வெளிப்படையாக இருக்க வேண்டும்; எந்த காரணத்தை முன்வைத்தும் பொறுப்பு டிஜிபியை நியமனம் செய்யக் கூடாது என்பதுதான் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள். இந்த வழிகாட்டுதல்களை தமிழக அரசு மீறிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில்தான் உச்சநீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பி உள்ளது.