இந்தியாவின் பணக்கார முதல்வர்கள் பட்டியலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல் இடத்தில் உள்ளார்.
ஜனநாயக சீர்திருத்த இயக்கம் இந்த ஆண்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த புள்ளி விபரங்கள் அனைத்தும் தேர்தலின்போது பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்த தகவல்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல் இடத்தில் உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ.931 கோடியாகும். சந்திரபாபு நாயுடு அரசியலுக்கு வருவதற்கு முன்னரே பால் நிறுவனம் ஒன்றை தொடங்கினார். சந்திரபாபு நாயுடு அரசியலுக்கு வருவதற்கு 7 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய அந்த நிறுவனம் தற்போது பல இடங்கிளில் கிளை பரப்பி ரூ.931 கோடி சொத்து மதிப்பை பெற்றுள்ளது.
இந்த நிறுவனத்தில் பெரும்பாலான பங்குகள் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினர் வசம் உள்ளது. ஆனால் சந்திரபாபு நாயுடு பெயரில் எந்த சொத்தும் இல்லை. அவர் மனைவி புவனேஸ்வரிக்கு 24.37 சதவிகித பங்குகள் உள்ளன. அவரது மனைவி பெயரில் உள்ள சொத்துக்கள் அவருக்கு சொந்தமானதாகவே கணக்கிடப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடு குடும்பத்தினரின் மொத்த பங்குகள் 41.3 சதவிகிதம் உள்ளது. கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் அந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.6,755 கோடியை எட்டியது. இது 1,81,907 பங்குதாரர்களை கொண்டது.
தமிழக முதல்வர் ஸ்டாலின்
இந்த பணக்கார முதல்வர் பட்டியலில் நமது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் 14வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 8.88 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி 38 கோடியே 39 லட்சம் சொத்துகளுடன் பட்டியலில் 6வது இடத்தை பிடித்துள்ளார்.
கடைசி இடம்
இந்த பட்டியலில் ரூ.15.38 லட்சம் சொத்துகளுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடைசி இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.