அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. பாஜகவில் பல கட்சிகள் உள்ளது என கூட்டணி குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. தொடர்ந்து மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
ஒருபக்கம் அதிமுக பாஜக கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி சொல்ல, இன்னொரு பக்கம் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக உள்ளது என்று டிடிவி தினகரன் கூறி வருகிறார்.
இந்தநிலையில் இன்று (ஜூலை 29) திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
என்டிஏ கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள்?
அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. பாரதிய ஜனதா கட்சியில் பல கட்சிகள் உள்ளன. தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் உள்ளது. தேர்தல் அறிவித்த பிறகு யார் யார் இருக்கிறார்கள் என்று சொல்கிறோம்.
திமுக கூட்டணிக்கு பாமக வந்தால் விசிக வெளியேறிவிடும் என்று சொல்கிறார்கள்… அதேபோல பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் வந்தால் அதிமுகவின் நிலைபாடு என்ன?
கற்பனையான கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.
காங்கிரஸ் தலைமையில் தவெக இணைந்து மூன்றாவது கூட்டணி உருவாகும் என்று சொல்கிறார்களே?
யூகத்தின் அடிப்படையில் எதுவும் சொல்ல முடியாது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதம் இருக்கிறது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது.