தமிழகத்தில் 2005-ம் ஆண்டு அதிமுக எம்.எல்.ஏ. சுதர்சனம், கொடூரமாக கொலை செய்யப்பட்டு அவரது வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொலை, கொள்ளை சம்பவத்தைத் தொடர்ந்துதான் ‘பவாரியா கொள்ளையர்கள்’ பற்றி தமிழகம் அறிந்தது.
யார் இந்த பவாரியாக்கள்?
- பவாரியாக்களின் பூர்வீகம் ராஜஸ்தான்.
- பவாரியாக்கள் நாடோடி பழங்குடிகள்; ஆங்கிலேயர் ஆட்சியில் குற்றப்பரம்பரை சட்டத்தின் கீழ் ஒடுக்குமுறையை எதிர்கொண்டவர்கள்.
- பவாரியாக்களின் முதன்மை கலாசாரம் வேட்டையாடுதல்.
- ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைகளால் நாடு விடுதலைக்குப் பின்னர் கொலை, கொள்ளையையே தொழிலாகக் கொண்ட சமூகம்.
பவாரியாக்களின் ‘தொழில்முறை’ கொள்ளை, கொலை
- வட இந்தியாவில் இருந்து தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு லாரிகளில் பொருட்கள் ஏற்றிச் செல்வர்.
- அந்த மாநிலங்களில் இருந்து திரும்பி வரும் போது தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகில் தனியாக உள்ள பங்களா வீடுகளைக் குறி வைப்பர்.
- கொள்ளையடிக்க திட்டமிடும் பங்களாக்களில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் வாகனத்தை நிறுத்தி வைப்பர்; அந்த வாகனத்துக்கு துப்பாக்கியுடன் ஒரு கொள்ளையன் காவல் இருப்பார்.
- இரும்புக் கம்பிகள் அல்லது கோடாரிகளால் பங்களாக்களின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைவர்.
- -அப்போது யார் எதிர்த்தாலும் மிக கொடூரமாக தாக்கி அல்லது சுட்டுக் கொலை செய்வர்.
- தங்களை சுற்றி வளைத்து யாரும் பிடித்துவிடாமல் இருக்க உடலில் எண்ணெய் அல்லது வழுக்கும் திரவங்களைப் பூசிக் கொள்வர்.
தமிழகத்தில் பவாரியாக்களின் ‘சம்பவங்கள்’
- தமிழ்நாட்டில் 1995 முதல் 2005-ம் ஆண்டு வரை பவாரியா கும்பல் அட்டூழியம் தலைவிரித்தாடியது.
- தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளில் 24 கொள்ளைச் சம்பவங்களை பவாரியாக்கள் மேற்கொண்டு ரூ. 2 கோடிக்கும் அதிகமான ரொக்கம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தனர்.
- பவாரியாக்களின் கொள்ளை தாக்குதல்களில் தமிழ்நாட்டில் மட்டும் 13 பேர் கொலை செய்யப்பட்டனர்; 63 பேர் படுகாயமடைந்தனர்.
- 1995 ஜூன் 7: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் ரூ.50,000 கொள்ளையடிக்கப்பட்டு, ஒருவர் கொலை செய்யப்பட்டார்; 3 பேர் காயமடைந்தனர்.
- 2001: அவிநாசி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் மூன்று கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
- 2002 செப்டம்பர் 12: சேலத்தில் 2 பேரை கொலை செய்து கொள்ளையடித்தனர்.
- 2003: வட தமிழ்நாட்டில் 4 கொள்ளைச் சம்பவங்களில் 3 பேர் கொலை செய்யப்பட்டனர்.
அதிமுக எம்.எல்.ஏ. சுதர்சனம் படுகொலை
2005ஆம் ஆண்டு ஜனவரி 8-ந் தேதி அதிமுக எம்.எல்.ஏ. சுதர்சனம், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே பங்களாவில் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மகனும், மருமகளும் படுகாயமடைந்தனர். பங்களாவில் இருந்த 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இதையடுத்து காவல்துறை அதிகாரி ஜாங்கிட் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இக்கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்றது.
இந்த கொலை, கொள்ளைச் சம்பவத்தில் பதிவான
குற்றவாளிகளின் கைரேகைகள் மூலம், ஏற்கனவே பிற மாநிலங்களில் பதிவாகி இருந்த குற்றவாளிகளின் கைரேகைகள் ஒப்பீடு செய்யபப்ட்டன. இப்படியான விசாரணையில்தான், தமிழகத்தை உலுக்கிய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது “பவாரியா கொள்ளையர்கள்” எனத் தெரியவந்தது.
வட இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் ஓமா என்ற ஓம்பிரகாஷ் பவாரியா உட்பட 9 முக்கிய கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த பவாரியா கொள்ளையர்களை அடிப்படையாக வைத்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற திரைப்படம் வெளியானது. இதில் பவாரியா கொள்ளையர்களை தேடி கைது செய்யும் நாயகனாக நடிகர் கார்த்தி நடித்திருந்தார்.
நவம்பர் 24-ல் குற்றவாளிகளுக்கான தண்டனை
அதிமுக எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கில் ஓமா பவாரியா உட்பட சிலர் சிறையில் இறந்தனர்; எஞ்சியவர்கள் ‘ கொலை குற்றவாளிகள்’ என சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் நேற்று நவம்பர் 21 தீர்ப்பளித்தது. இவர்களுக்கான தண்டனை நவம்பர் 24-ந் தேதி அறிவிக்கப்படும்
