சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் முதல் முறையாக ரசிகர்கள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் ரசிகர்கள், பல்வேறு பொருட்களை எடுத்துச் செல்ல வழக்கம் போல தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக வாட்டர் பாட்டில்கள். பவர் பேங்க் உள்ளிட்டவைகளை எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்படுவது வழக்கம். தற்போது முதல் முறையாக விசில்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை தேர்தலில் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் சேப்பாக்கம் மைதானத்துக்குள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தவெக ஐடிவிங் வெளியிட்ட எக்ஸ் பதிவு: இத்தனை ஆண்டுகளாக இல்லாத புது விதியாக, இப்போது சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் கொண்டு வர தடை விதித்திருக்கிறார்கள். ஏன்?
சேப்பாக்கத்தில் விசில் சத்தம் கேட்டாலே சிலருக்கு “ஜூரம்” வந்துவிடுகிறதோ? விளையாட்டு மைதானம் என்பது மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இடம். அங்கே போய் விசிலுக்குத் தடை விதிப்பது என்பது, மக்களின் கொண்டாட்ட உரிமையைப் பறிக்கும் செயல்.
மைதானத்திற்குள் வரும் விசிலைத் தடுத்துவிடலாம், ஆனால் மக்களின் மனதிற்குள் ஒலிக்கும் மாற்றத்திற்கான விசிலை யாரால் தடுக்க முடியும்? சின்ன சின்ன விஷயங்களில் கூட இப்படி கெடுபிடி காட்டும் இந்த நிர்வாக முறையை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. மக்களின் கொண்டாட்டங்களைச் சீண்டும் இத்தகைய “விசித்திர” விதிகள், உண்மையில் ஆட்சியாளர்களின் தோல்வி பயத்தையே காட்டுகிறது. நீங்கள் பிடுங்குவது விசிலை அல்ல, ரசிகர்களின் உரிமையை!
நாளை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் மக்கள் போடப்போகும் “வெற்றி விசில்” சத்தத்தில், இப்போதைய ஆட்சியாளர்களின் தூக்கம் நிச்சயம் கலைந்து போகும்!
