விசில் புரட்சி தேர்தல்.. ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க.. தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. விஜய் பேச்சு-முழுமையாக!

Published On:

| By Mathi

Vijay TVK Speech

தமிழக வெற்றிக் கழகத்தின் 234 வேட்பாளர்களை அறிவித்த அக்கட்சியின் தலைவர் விஜய், இந்த தேர்தல் விசில் புரட்சி தேர்தல் என்றும் தமக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.

சென்னையில் இன்று மார்ச் 29-ந் தேதி தவெகவின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியீட்டு நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது: இந்த கூட்டத்துல, வேட்பாளர்களை அறிமுகப்படுத்துற கூட்டம் அப்படின்னு சொன்னாங்க. ஆனா என்ன பொறுத்தவரைக்கும், இது நம்ம மக்களுக்கான காப்பாளர்களை அறிமுகப்படுத்துற கூட்டம்.

ADVERTISEMENT

அப்படித்தான் இதை நான் சொல்லணும். நம்ம கட்சிக்காரங்களுக்கு தேர்தல் ஃபேஸ் பண்ண எக்ஸ்பீரியன்ஸ் (Experience) எல்லாம் இல்லை அப்படின்னு சொல்லுவாங்க. நம்மளுடைய வேட்பாளர்கள் எல்லாருமே ரொம்ப சாதாரணமான குடும்பத்துல இருந்து வந்திருக்காங்க, அவங்க பின்னாடி பெரிய பேக்கிரவுண்ட் (Background) எல்லாம் இல்லை அப்படின்னு சொல்லுவாங்க.

அவங்க எல்லாருக்கும் ஒண்ணு சொல்றேன், ஒரு எம்.எல்.ஏ (MLA)-னா எப்படி இருக்கணும்னு நான் சொல்றேன். ஒரு எம்.எல்.ஏ-ன்றது சும்மா அனுபவத்தை வச்சுக்கிட்டு கொள்ளையடிக்கிறவங்களா இருக்கக்கூடாது. சும்மா அனுபவத்தை வச்சுக்கிட்டு சட்டவிரோதமா கல் குவாரில ஈடுபடுறவங்களா இருக்கக்கூடாது. சும்மா அனுபவத்தை வச்சுக்கிட்டு கேள்வி கேட்கிற பிரஸ் ரிப்போர்ட்டர்ஸ (Press Reporters) தாறுமாறா தாக்குறவங்களா இருக்கக்கூடாது.

ADVERTISEMENT

இன்னும் ஓப்பனா சொல்லணும்னா, இந்த திமுக-வுல இருந்து வந்த ஒரு எம்.எல்.ஏ மேல கொள்ளையடிச்ச கேஸ் இருக்குது, போதைப்பொருள் கடத்தல் கேஸ் இருக்குது, திருட்டு கேஸ் எல்லாம் இருக்குது. திருட்டு கேஸ்ல எல்லாம் ஜெயிலுக்கு போயிட்டு வந்த ஒருத்தர் இருக்கிறாரு. நீங்க கூட யோசிக்கலாம் அவர் யாருன்னு… அந்த எம்.எல்.ஏ யாருன்னு உங்களுக்கு யோசிக்கத் தோணும்.

இன்னொரு குளூ (Clue) வேணா நான் தரேன். அந்த திருட்டு கேஸ்ல உள்ள போயிட்டு வந்தவரை, யாருக்கு எதிரா இந்த திமுக தேர்தல்ல நிக்க வச்சாங்க தெரியுமா? இன்னைக்கு அவங்க கூட்டணியிலேயே மூச்சுக்கு முன்னூறு தடவை முட்டுக்கொடுக்கிற ஒரு மிகப்பெரிய தலைவருக்கு எதிரா! அந்தத் தலைவரைத் தோற்கடிக்கணும்னுதான் 1996-ல அவருக்கு ஆப்போசிட்டா (Opposite) இந்த எம்.எல்.ஏ-வை நிக்க வச்சாங்க. மரியாதை நிமித்தமா அந்தத் தலைவர் பேரை இங்க நான் சொல்ல வேணாம்னு நினைக்கிறேன்.

ADVERTISEMENT

சோ (So), இப்படியெல்லாம் இருக்காங்க எம்.எல்.ஏ-க்கள், நான் லிஸ்ட் போட்டு சொன்ன மாதிரி. ஆனா எம்.எல்.ஏ-க்கள்னா சும்மா இல்லை, ஒரு தொகுதிக்கான, அந்த மக்களுக்கான எல்லைக் காப்பாளர்கள்; அப்படி இருக்கணும்.

களத்துல மக்களோட மக்களா நிக்கிற மாதிரி ஆளுங்களைத்தான் நான் செலக்ட் (Select) பண்ணிருக்கேன். நான் வந்து எல்லா இடத்துலயும் எல்லா நேரத்துலயும் ஒரே நேரத்துல நான் போய் நிக்க முடியாது இல்லையா? அதனால என் சார்பா, என்னுடைய பிரதிநிதிகளா நானே பார்த்து பார்த்து என்னுடைய வேட்பாளர்களை செலக்ட் பண்ணிருக்கேன். நம்மளோட அக்கா, நம்மளோட தங்கை, நம்மளோட அண்ணா, தம்பி அப்படின்னு சொல்லி நம்மளோட வேட்பாளர்களை செலக்ட் பண்ணி இன்னைக்கு உங்க முன்னாடி நான் ஒப்படைக்கிறேன். மக்களே, அவங்களை எம்.எல்.ஏ ஆக்க வேண்டியது உங்களுடைய பொறுப்பு.

கட்சி ஆரம்பிச்சு கிட்டத்தட்ட ஒரு மூணு வருஷத்துக்கு மேல ஆச்சு. இன்னமும் ஒரு கூச்சல் சத்தம் அடங்குன மாதிரியே எனக்குத் தெரியல. “விஜய்க்கு என்னப்பா செல்வாக்கு இருக்குது? கூட்டத்தை வச்சு சொல்றீங்களா? அதெல்லாம் வேடிக்கை பார்க்க வர்ற கூட்டம்ப்பா… கூட்டம் வந்துட்டா உடனே அவர் பெரிய ஆளா? கூட்டம் ஓட்டா மாறுமா? ஓட்டு சீட்டா மாறுமா? அதெல்லாம் எப்படி மாறும்? அதெல்லாம் மாறாது…” இப்படி வன்மத்துல கேள்வி கேட்கிறவங்களுக்கு நான் ஒன்னே ஒன்னு சொல்றேன்…

இந்தத் தேர்தல் வந்து எல்லாரும் சொல்ற மாதிரி தேர்தல் எல்லாம் கிடையாது, இது வந்து இருமுனைப் போட்டி மட்டும்தான். மக்கள் கூட்டணியான நமக்கும் ஸ்டாலின் சார் கூட்டணிக்கும் மட்டும்தான் இந்தத் தேர்தல். அதென்னப்பா ஸ்டாலின் சார் கூட்டணி பேரா மக்கள் நல கூட்டணியா? மொத்த பேக்கேஜும் அங்கதானே இருக்குது.

ரிசல்ட் என்ன தெரிஞ்சதுனால என்னமோ அவர் அந்தப் பழைய மக்கள் நலக் கூட்டணியாவே மாத்திக்கிட்டாரோ என்னமோ எனக்குத் தெரியல. உடைஞ்ச கிளாஸ ஒட்ட வெச்ச மாதிரி, கிழிஞ்சத் துணியத் தச்ச வெச்ச மாதிரி, இது வந்து ஒரு ஒட்டுப்போட்ட ஒரு கூட்டணி அவ்வளவுதான்.

அதனால, நீங்க ஆல்ரெடி டிசைட் பண்ணி வைச்சிருக்கிற மாதிரி உங்களோட ஓட்ட சிந்தாம சிதறாம நம்மளுடைய டிவிகே வேட்பாளர்களுக்கும் நம்மளுடைய டிவிகே விசில் சின்னத்துக்கும் தயவு செஞ்சு ஓட்டு போட்டுருங்க.

வேட்பாளர்கள் உறுதி மொழி

இப்ப நம்மளுடைய வேட்பாளர்கள் எல்லாரும் நான் சொல்றத கொஞ்சம் ரிப்பீட் பண்ணுங்க.

மக்களுக்காக…

மக்கள் பணிக்காக மட்டுமே…

நான் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.

நான் ஜெயிச்சு வந்தப் பிறகு…

மக்கள் பணத்தில் ஒரு பைசா கூட தொடமாட்டேன்.

ஊழல் கரைப் படியவே விடமாட்டேன்.

பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன்.

போதையில்லாத் தமிழகத்தை உருவாக்குவேன்.

சட்டம் ஒழுங்கைச் சரி செய்யத் துணை நிற்பேன்.

ஒருநாளும் மக்கள் விரோதச் செயலில் ஈடுபட மாட்டேன்.

இது சத்தியம்.

தேங்க்யூ…

மக்களே, இது வந்து உறுதிமொழி எல்லாம் கிடையாது, இது உத்தரவாதம்.

இந்தத் தேர்தல் பாமரர்களுக்கும் அதிகார மமதை கொண்ட ஒரு குடும்பத்திற்குச் சேவகம் செய்யும் அடிமைகளுக்கும் நடக்குறத் தேர்தல். ஏழைகளுக்கும் ஏமாற்றுப் பேர் வழிகளுக்கும் நடக்குறத் தேர்தல். உழைக்கிற மக்களுக்கும் உழைப்பைச் சுரண்டுறவங்களுக்கும் நடக்குறத் தேர்தல்.

நல்லவங்களுக்கும் நாட்டை நாசப்படுத்துறவங்களுக்கும் நடக்குறத் தேர்தல். மக்கள் பணத்தைச் சுரண்டும் ஊழல் லஞ்சத்தை ஒழிக்க வந்தவங்களுக்கும் ஊழல்லையே ஊறிப்போனவங்களுக்கும் நடக்குறத் தேர்தல். மக்கள் சக்திக்கும் மக்கள் விரோத சக்திக்கும் நடக்குறத் தேர்தல்.

சுருக்கமாச் சொல்லணும்னா டிவிகே-வுக்கும் திமுக-வுக்கும் நடக்குறத் தேர்தல். இந்த விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்குற ஆரோக்கியமான ஜனநாயகப் போட்டிக்கான ஒரு தேர்தல்.

இப்படி இந்தத் தேர்தல் இருக்குறதுனால நம்ம கட்சி வேட்பாளர்களைத் தமிழ்நாட்டோட ஒவ்வொரு சாமான்ய குடும்பத்துத் தோழர்களா இருக்குற மாதிரி தான் நான் செலக்ட் பண்ணிருக்கிறேன். நம்ம வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போடுறது நமக்கு நாமே ஓட்டுப் போடுற மாதிரி. உங்களுக்கு நீங்களே ஓட்டுப் போட்டுக்குற மாதிரி.

மன்னராட்சிகிட்ட இருந்து மக்களாட்சி மீட்குறதுக்கு ஓட்டு போடுற மாதிரி. நான் வேற நம்ம வேட்பாளர்கள் வேற எல்லாம் இல்ல, நான் எப்படி உங்க வீட்ல உங்க குடும்பத்துல ஒருத்தனோ, அதே மாதிரி தான் நம்ம வேட்பாளர்களும் உங்க குடும்பத்துல இருக்கிற ஒருத்தர்.

அதனால, நம்ம வேட்பாளர்களை MLA ஆக்குறது உங்க ஒவ்வொருத்தர் வீட்லயும் ஒரு MLA இருக்குற மாதிரி. இத ‘இதயத்தில் உங்கள் விஜய், இல்லம்தோறும் நம்ம MLA’ னு கூட சொல்லலாம்.

உங்க குரலுக்கு ஓடி வர்ற மாதிரி ஆட்களைத் தான், இன்னும் சொன்னா உங்க குரல் கேட்குறதுக்கு முன்னாடியே உங்க மனசப் புரிஞ்சிக்கிட்டு ஓடி வந்து உங்க தேவைகளைத் தீர்க்குற மாதிரி ஆளுங்கத் தான் நான் செலக்ட் பண்ணிருக்கேன்.

உங்களை நம்பி எல்லாத்தையும் விட்டுட்டு நான் எப்படி வந்தேனோ, அப்படித்தான் உங்களை நம்பி நம்ம வேட்பாளர்களையும் ஒப்படைக்கிறேன். தமிழ்நாட்டுல இருக்கிற 234 தொகுதிலயும் நம்ம வேட்பாளர்கள் தான் MLA ஆனாங்கன்ற செய்தி மே 4-ஆம் தேதி உலக சாதனை செய்தியா இருக்கணும்.

மக்களே! உங்களை நம்பி அரசியலுக்கு உங்களுக்காக நீதி கேட்க வந்த உங்கள் விஜய்க்கு இழைக்கப்படுற அநீதிக்கு எதிராக, அதிகாரத்தின் துணையோடு உங்களுக்கான நமக்கான நீதியை வென்றெடுக்க எங்க எல்லாருக்கும் நம்ம தமிழ்நாட்டோட எதிர்காலத்துக்காக ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க.

நான் வந்து நம்ம விமன்ஸ் டே அன்னைக்கு பெண்களுக்கான சில நம்முடைய TVK விஷன் அண்ட் அஜெண்டா சொன்னோம். அந்த மாதிரி இன்னைக்கு நம்ம TVK விஷன் அண்ட் அஜெண்டா ஃபார் யூத்.

யூத் அவங்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை தேர்தல் வாக்குறுதிகள்னு சொல்லக்கூடாது, நம்ம TVK வோட உத்தரவாதங்கள்னு சொல்லணும். இன்னும் சொல்லப்போனா இந்த அண்ணனோட, உங்க அண்ணனோட கேரண்டினு கூட சொல்லணும்.

தேர்தல் வாக்குறுதிகள்

என்னோட தம்பி தங்கைகளே, உங்களுக்காக இந்த அண்ணனோட உத்தரவாதங்களை கொஞ்சம் வாசிக்கலாமா?

  1. போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு
    தமிழ்நாட்டை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றும் தொலைநோக்கு பார்வையுடன், தமிழ்நாடு போதைப்பொருட்கள் உள்வரவு தடுப்பு மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் கடுமையான சட்டங்களுடன், ‘டிரக் அப்யூஸ்’ (Drug Abuse) ஐ கையாள்வதற்காக சமூக காவல் (Community Policing) உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளையும் அதற்கான முழு அர்ப்பணிப்புடன் கூடிய பிரத்யேக அணுகுமுறைகள் மேற்கொள்ளப்படும்.

போதைப்பொருட்கள் நடமாட்டத்தால் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்து பொது விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதனைத் தடுக்கவும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் நிறுவப்படும்.

  1. கல்வி உத்தரவாதம் திட்டம்
    தமிழ்நாட்டில் எந்த ஒரு இளைஞரும் நிதிப் பற்றாக்குறையால் கல்வி பெற முடியாமல் போகவே கூடாது. எனவே இளைஞர்களின் கல்வியை உறுதி செய்ய 12-ஆம் வகுப்புக்கு பிறகு PhD வரை கல்வி பயில ரூபாய் 20 லட்சம் வரை பிணையம் இல்லா (Collateral-free loan) கடன் பெறுவதற்கான உத்தரவாதம் வழங்கப்படும்
  2. தமிழ்நாடு ஆள்சேர்ப்பு பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை சட்டம் (TRATA)
    அரசு வேலை என்பது பல லட்சம் இளைஞர்களின் கனவாக இருக்கும்போது அதில் ஏற்படும் குறைகளைக் களைய, TRATA அதாவது ‘Tamil Nadu Recruitment Accountability and Transparency Act’ வாயிலாக அனைத்து மாநில அரசு பணியிடங்களுக்கும் ஒரு நிலையான ஆள்சேர்ப்பு கால அட்டவணை உருவாக்கப்படும். காலக்கெடுவிற்கு மேல் எந்த ஒரு தாமதமும் ஏற்படாத வண்ணம் TNPSC மற்றும் TRB, TNEB அறிவிப்பு முதல் நியமனம் வரையிலான முழு ஆட்சேர்ப்பு சுழற்சியையும் 365 நாட்களுக்குள் முடிக்க சட்டப்படி கட்டமைக்கப்படும்.
  3. வேலைவாய்ப்பு தாமத சூழல் நிதி உதவி. 29 வயதிற்கு மேலும் வேலை வாய்ப்பில் தாமதமாகும் சூழல் உருவானால் மாதந்தோறும் பட்டதாரிகளுக்கு மாதம் ₹4000 ரூபாயும் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ₹2500 ரூபாயும் இளைஞர் நல நிதியாக வழங்கப்படும். இது இளைஞர்களின் வேலைவாய்ப்பைத் தேட உதவும் ஓர் ஊன்றுகோலாக அமையும்.
  4. அடுத்தது வெற்றி தொழிற்பயிற்சி உத்தரவாதம். ஆண்டுதோறும் 5 லட்சம் இன்டர்ன்ஷிப் பயிற்சிகளை வழங்க நமது அரசு தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் (MSMEs) கூட்டாக இணைந்து செயல்படும். அதன்படி பட்டதாரிகளுக்கு மாதம் ₹10,000-மும், ITI டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ₹8,000-மும் மாநில அரசே வழங்கும். இது வணிக நிறுவனங்களுக்கான பணியமர்த்தல் செலவைக் குறைத்து உள்ளூர் ஆட்களை பணியமர்த்த அவர்களை ஊக்குவிப்பதாக அமையும்.
  5. அடுத்தது வெற்றி தொழில் முனைவோர் திட்டம். நமது இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக மட்டுமே இருக்கக் கூடாது; அவர்களை வேலை வழங்குபவர்களாகவும் மாற்றுவதே எங்கள் தொலைநோக்குப் பார்வை. அதற்கான திட்டமே இந்த வெற்றி தொழில்முனைவோர் திட்டம். நேர்மையான தொழில்முனைவோரை உருவாக்கும் இத்திட்டத்தின் கீழ் ரூபாய் 25 லட்சம் வரை கொலாட்ரல் ஃப்ரீ லோன் (collateral-free loan) பெறுவதற்கான உத்தரவாதம் வழங்கப்படும்.
  6. நமது ஊரில் நமக்கே வேலைவாய்ப்பு திட்டம். நமது ஊரில் நம்முடையவர்களுக்கே அதாவது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வேலைவாய்ப்பு என்பதை உறுதி செய்வதே நமது அரசின் நோக்கமாகும். அதற்காகவே Tamil Employment Credit System உருவாக்கப்படும். அதன்படி தனது பணியாளர்களில் 75% தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளும் தனியார் நிறுவனங்களுக்கு மாநில ஜிஎஸ்டி (SGST) மீது 2.5% மானியமும், மின் கட்டணங்கள் மீது 5% மானியமும் மற்றும் அரசு கொள்முதலில் முன்னுரிமையும் வழங்கப்படும்.
  7. அடுத்தது இளைஞர்கள் பங்களிப்பில் நமது நல்லாட்சி. ஒவ்வொரு கிராம ஊராட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிலும் ‘முதல்வர் மக்கள் சேவை நண்பர்’ என்ற புதிய பதவி உருவாக்கப்படும். அதன் மூலம் இளைஞர்களுக்கு அவர்களின் வசிப்பிடத்திலேயே 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி மக்களுக்கு 100% அரசு சேவைகளை அவர்களின் வீட்டு வாசலிலேயே கிடைக்க வழிவகை செய்யப்படும். நல்லாட்சிக்காக இளைஞர்களுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையிலான மாநிலத்தின் மிகப்பெரிய கூட்டு இணைப்பாக இது அமையும். இத்திட்டத்தில் பங்காளராக பணியாற்றும் இளைஞருக்கு மாதந்தோறும் ₹18,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும்.
  8. அடுத்தது தமிழ்நாடு இளைஞர் ஆலோசனைக்குழு (Tamil Nadu Youth Advisory Council). பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் இளைஞர்களை நேரடியாகப் பாதிக்கும் விஷயங்கள் குறித்து இளைஞர்கள் தங்கள் கருத்துக்கள், கவலைகள் மற்றும் பரிந்துரைகளை முதலமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் தெரிவிப்பதற்கான ஒரு தளமாக தமிழ்நாடு இளைஞர் ஆலோசனைக்குழு நிறுவப்படும். இந்த முயற்சியைச் செயல்படுத்தும் இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழும்.
  9. கடைசியாக படைப்பாளி தொழில் முனைவோர் திட்டம் (Creator-preneur திட்டம்).
  10. தமிழ்நாட்டின் வரலாறு, பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் முன்னேற்றம் குறித்த அம்சங்களை உலக அரங்கில் பரப்பி, தமிழ்நாட்டை ஒரு உலகளாவிய படைப்பாளி மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு ‘தமிழ்நாடு படைப்பாளி தொழில் முனைவோர் திட்டம்’ என்பது தமிழ்நாடு அரசுக்கும் நமது மாநில இளைஞர்களுக்கும் இடையேயான ஒரு மாற்றத்தை உருவாக்கும் டிஜிட்டல் கூட்டாண்மையாகும். இத்திட்டம் 1,50,000 படைப்பாளி தொழில் முனைவோருக்கு தொடக்க மூலதனம் வழங்கும். இத்திட்டத்திற்கு ஆதரவாக நமது இளைஞர்களுக்கு நவீன காலப் பயிற்சி அளிக்க 500 ‘படைப்பாளி பள்ளிகள்’ (Creator-preneur Schools) நிறுவப்படும். நம் மாநிலத்தின் மீது ஈர்ப்பு கொண்ட இளைஞர்களை ஊக்குவித்து, நம் தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்யவே இம்முயற்சி.

பெண்கள் அஜெண்டா மாறி, இது நம்ம இளைஞர்களுக்கான நம்ம அஜெண்டா. இன்னும் நம்ம விவசாயிகள், மீனவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்களுக்கான வாக்குறுதிகள் எல்லாம் இன்னும் ரெடியாகிட்டு இருக்கு, கூடிய சீக்கிரமே அதை அறிவிப்போம். உங்க எல்லாருக்கும், நம்மளுடைய ஜென்-சி நண்பர்களுக்கும் ஒரே ஒரு விஷயம் நான் சொல்றேன், ஏப்ரல் 23-ஆம் தேதி சும்மா காலங்காத்தால பக்காவா ரெடியாகிட்டு, ஓட்டர் ஐடியை கையில எடுத்துக்கிட்டு, முதல் ஆளா பூத்ல போய் நின்னு, விசில் சின்னத்துக்கு நேரா இருக்கிற அந்த பட்டனை ஒரு அழுத்து அழுத்துங்க. உங்க வீட்ல இருக்கிற ஒவ்வொருத்தரையும் அழைச்சிட்டு போங்க.”

வெளிநாடு/வெளியூர் வாழ் தமிழர்களுக்கு வேண்டுகோள்
“சப்போஸ் வெளிநாட்டுல இருந்து நீங்க இங்க சென்னையில இருக்கீங்கன்னா, ‘என்னடா இது வீக் டேயா போச்சு, நம்ம வெளிநாட்டுக்கு, வெளியூருக்கு போகணுமா, ஓட்டு போடணுமா’ அப்படின்னு அசால்ட்டா இருந்திராதீங்க. இப்பவே அட்வான்ஸா உங்களுடைய டிக்கெட்டை புக் பண்ணி வச்சுக்கங்க. இது ஒரு தலைமுறைக்கான ஒரு தேர்தல்; உங்களுக்கான தேர்தல்.

எவ்வளவு பெரிய வசதியான வாழ்க்கையா இருந்தாலும் எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு உங்களுக்காக மட்டுமே நான் வந்திருக்கேன். உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்துறதுக்காக மட்டுமே வந்திருக்கேன், அத்தனை வலிகளையும் தாங்கிக்கிட்டு. அத்தனை வலிகளையும் தாங்கிக்கிட்டு உங்களுக்காக மட்டுமே நான் வந்து நின்னுகிட்டு இருக்கேன். உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்துறதுக்காக மட்டுமே வந்திருக்கேன். ஒருநாளும் பொய் சொல்லி உங்களை நான் ஏமாத்த மாட்டேன்.

டிவி கே (TVK) vs திமுக (DMK)

இந்த நாலு முனை போட்டி, 40 முனை போட்டின்னு எத்தனை முனை போட்டின்னு எத்தனை உருட்டு உருட்டுனாலும், இங்கே இரண்டு முனை போட்டிதான். ஒன்னு – டிவி கே (TVK), இன்னொன்னு – திமுக (DMK). மக்கள் விரோத ஆட்சி நடத்துற ஸ்டாலின் சார் வேணுமா, மக்களை நேசிக்கிற விஜய் வேணுமா – அவ்வளவுதான் இந்த தேர்தலே!

அதனால உங்க விஜய்க்கு, உங்க அண்ணனுக்கு, உங்க தம்பிக்கு, உங்க பிள்ளைக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க. தயவு செஞ்சு விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க. இது வந்து ஒரு ‘விசில் புரட்சி’ தேர்தலா இருக்கணும். யார் வேட்பாளரா இருந்தாலும் அந்த வேட்பாளர் வேற, இந்த விஜய் வேற அப்படின்னு நினைச்சிராதீங்க. கான்ஃபிடென்ட்டா இருங்க, நல்லதே நடக்கும்; வெற்றி நிச்சயம். இவ்வாறு விஜய் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share