தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் 16-ஆவது சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 10, 2026 அன்று முடிவடைகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவிருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரித்தல், பிரச்சார அட்டவணை என பிஸியாக இருக்கின்றன.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 26ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
ஆனால் 2026 தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.
இந்தநிலையில், வரும் ஞாயிறு (மார்ச் 15) அல்லது திங்கள் (மார்ச் 16) அன்று தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவிருப்பதாகவும், ஏப்ரல் 23 அல்லது 24 ஆகிய ஏதேனும் ஒரு தேதியில் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
அதுபோன்று மேற்கு வங்கத்தில் கடந்த முறை 5 கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில், இந்த முறை 2 அல்லது 3 கட்டமாக தேர்தலை நடத்தி முடிக்க திட்டமிட்டிருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன.
