ADVERTISEMENT

எப்ஸ்டீன் கோப்புகளில் ராகுல் – ஸ்டாலின் பெயர் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? 

Published On:

| By Minnambalam Desk

எப்ஸ்டீன் கோப்புகளில் எதிர்க்கட்சித் தலைவர்களின் பெயர்கள் இருப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். பாஜகவும் தொலைக்காட்சி ஊடகங்களும் என்ன செய்திருக்கும்?

சாகரிகா கோஷ்

ஒரு கற்பனையான சூழலை எண்ணிப் பாருங்கள். ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், அபிஷேக் பானர்ஜி, மு.க. ஸ்டாலின் அல்லது வேறு ஏதேனும் ஒரு எதிர்க்கட்சித் தலைவரின் பெயர் இடம் பெற்றிருப்பதாக வைத்துக்கொள்வோம்.

ADVERTISEMENT

அல்லது, ஒரு எதிர்க்கட்சித் தலைவர் தண்டனை பெற்ற ஒரு பாலியல் குற்றவாளியுடன் பல நட்புரீதியான மின்னஞ்சல்களைப் பரிமாறிக்கொண்டார் என்று கற்பனை செய்து பாருங்கள்.

அப்போது எழக்கூடிய கொந்தளிப்பையும், நிலவக்கூடிய அதீத பதற்றத்தையும் எண்ணிப் பாருங்கள். ஆளும் பாஜக எக்கச்சக்கமான செய்தியாளர் சந்திப்புகளை நடத்தியிருக்கும். அதிகாரத்திற்கு வளைந்து கொடுக்கும் தற்போதைய ஊடகங்களும், “பாரம்பரிய” ஊடகங்களும், கோட்-சூட் அணிந்த தொலைக்காட்சி நெறியாளர்களும், செய்தித் தலைப்பு எழுதுபவர்களும் 24 மணிநேரமும் தீவிரமாகச் செயல்பட்டிருப்பார்கள்.

ADVERTISEMENT

எதிர்க்கட்சிகளைச் சாடும் தடியை பாஜகவிடமிருந்து வாங்கிக்கொண்டு அவர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்திருப்பார்கள். நெறியாளர்கள் கத்தித் தீர்த்திருப்பார்கள். அந்த மின்னஞ்சல்களின் ஆபாசமான விவரங்கள் தலைப்புச் செய்திகளாகத் தடித்த எழுத்துகளில் வெளிவந்திருக்கும். எதிர்க்கட்சியின் தோல்விகளைப் பறைசாற்றும் விவாதங்களும், தலையங்கங்களும் அவர்களின் அரசியல் அஸ்தமனத்தை மீண்டும் மீண்டும் அறிவித்திருக்கும்.

ஆனால் இன்று என்ன நடக்கிறது? நரேந்திர மோடியின் அமைச்சர்களில் ஒருவரான ஹர்தீப் சிங் பூரி – பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் – ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்குக் கடிதங்கள் எழுதியது அம்பலமாகியுள்ளது. ஆனால், பல இந்திய ஊடகங்கள் இது குறித்த விவகாரங்களை எழுப்பவோ, நியாயமான கேள்விகளைக் கேட்கவோ விருப்பமில்லாமல் தயங்குகின்றன.

ADVERTISEMENT

அந்த மின்னஞ்சல்களில் (2014இல் அனுப்பப்பட்டவை, எப்ஸ்டீன் 2008இலேயே சிறார் விபச்சாரக் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்ட பிறகு), பூரி அவரை “ஜெஃப்” என்றும், “எனது நண்பர்” என்றும் குறிப்பிடுகிறார். எப்ஸ்டீனின் “அற்புதமான மனிதர்களைத் தேர்ந்தெடுக்கும் ரசனை”யைப் புகழ்கிறார். “மகிழ்ச்சியாக இருங்கள், அதற்கு உங்களுக்குப் பிறருடைய ஊக்கம் தேவையில்லை” என்றும் கூறுகிறார். பூரி எப்ஸ்டீனின் “சொகுசுத் தீவை”க் குறிப்பிட்டுக் காட்டி, “அன்புடன்” (warmly) என்று முடித்திருக்கிறார்.

இதைத் தொழில்முறைத் தொடர்பு என்பதைவிட, ஆர்வமான, உணர்ச்சிவசப்பட்ட கடிதம் என்றே சொல்ல வேண்டும். அமெரிக்க அரசாங்கத்தில் செல்வாக்குப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அதிர்ச்சியூட்டும் கிரிமினல் பின்னணி கொண்ட ஒருவருடன் பூரி போன்ற அனுபவம் வாய்ந்த ராஜதந்திரி தொடர்பு வைத்திருந்தது மன்னிக்க முடியாதது. இது அவரது மிக மோசமான முடிவெடுக்கும் திறனையே காட்டுகிறது.

செய்தியாளர் சந்திப்பில் பூரி ஆக்ரோஷமாகவும், திமிராகவும் பேசினார். எப்ஸ்டீனின் குழந்தைப் பாலியல் குற்றங்களைக் குறைத்துக் காட்டியதோடு, சிறார் பாலியல் வன்கொடுமையை “வயது குறைந்த பெண்ணை” அழைப்பது என்பது போன்ற மென்மையான சொற்களால் (Euphemising) மறைக்க முயன்றார்.

நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பிரச்சினையை எழுப்பினர். மோடி அரசு ஏன் பூரிக்கு ஆதரவாக நிற்கிறது, அமைச்சரிடம் ஏன் விளக்கம் கேட்கப்படவில்லை, அவர் ஏன் பதவி விலக வற்புறுத்தப்படவில்லை என்று எம்பிக்கள் கேள்வி எழுப்பினர்.

பிரிட்டனாக இருந்தாலும் சரி, அமெரிக்காவாக இருந்தாலும் சரி, உலகம் முழுவதிலும் உள்ள சர்வதேச ஊடகங்கள் எப்ஸ்டீனுடன் தொடர்புள்ள நபர்களிடம் பதில் கேட்டு நெருக்குகின்றன.

எங்கே அந்தக் ‘கண்காணிப்பு நாய்’?

ஊடகங்களை watch dog என்று சொல்வார்கள். தவறுகளைத் துல்லியமாக மோப்பம் பிடித்துவிடும் என்னும் பொருளில் அப்படிச் சொல்வதுண்டு. அந்தத் திறன் இப்போது எங்கே போனது? ஒரு காலத்தில் துணிச்சலாக இருந்த, எப்போதுமே எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டிய இந்திய ஊடகங்களின் குரல் எங்கே? ஏன் எதிர்க்கட்சிகளும் எதிர்க்கட்சி எம்பிக்களும் மட்டுமே கேள்விகளை எழுப்புகிறார்கள்?

2024இல் நான் மாநிலங்களவை உறுப்பினராகச் சேர்ந்தபோது, ‘ThePrint’ இதழில் நான் ஏன் இதழியலிலிருந்து எதிர்க்கட்சிக்கு மாறினேன் என்பது குறித்து ஒரு கட்டுரை எழுதினேன்: ஏனென்றால், துணிச்சலான டிஜிட்டல் ஊடகங்கள், சமூக ஆர்வலர்களைத் தவிர, மோடி அரசிடம் கேள்வி கேட்கும் அல்லது பொறுப்புக்கூறக் கோரும் ஒரே அமைப்பாக எதிர்க்கட்சி மட்டுமே தற்போது உள்ளது.

அந்தக் கட்டுரை மீண்டும் மீண்டும் உண்மையாகிவருகிறது. இன்று அரசியல் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வேலை செய்வது மட்டுமல்லாமல், ஊடகங்களின் வேலையையும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் வித்தியாசம் அப்பட்டமாகத் தெரியும். அந்த ஆண்டுகளில், பிரதமர் மன்மோகன் சிங் மீது பாஜக வீசிய ஒவ்வொரு சிறு கல்லும் இதே ஊடகங்களால் ‘பிரேக்கிங் நியூஸ்’ ஆகவும், விவாதங்களாகவும், தலைப்புச் செய்திகளாகவும் மாற்றப்பட்டன.

இப்போது, அதே ஊடகங்கள் மோடிக்கு நிரந்தர நற்சான்றிதழ்களை வழங்கவும், மலை போன்ற சர்ச்சைகளைப் புறக்கணிக்கவும், அவருக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞர்களாகச் செயல்படவும் பாடுபடுகின்றன. ஐமுகூ காலத்தின் சிறு தவறுகளைக்கூட தேசிய அவதூறுகளாக மாற்றிய அதே ஊடகங்கள், இப்போது வளைந்து கொடுக்கின்றன. ஐமுகூ ஆட்சியில் ஒவ்வொரு வாரமும் ‘கொள்கை முடக்கம்’ பற்றிய விசாரணைகள் நடந்தன. இன்று, கோழைத்தனமான, அடிமைத்தனமான மௌனம் மட்டுமே நிலவுகிறது.

மில்லியன் கணக்கான மக்களைத் துயரத்தில் ஆழ்த்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கையிலிருந்து, அதிகாரப்பூர்வமாக மறைக்கப்பட்ட கோவிட் மரணங்கள் வரை; பிரதமர் கேர்ஸ் (PM CARES) நிதியின் வெளிப்படைத்தன்மையின்மை முதல், பாஜக ஆளும் மாநிலங்களில் நிலவும் ஊழல் புகார்கள் வரை பெரும்பாலான தொலைக்காட்சி ஊடகங்கள் இந்த ஊழல்கள் இருப்பதே தெரியாதது போல நடிக்கின்றன.

பெகாசஸ் (Pegasus) மென்பொருள் மூலம் குடிமக்களின் தனியுரிமை பறிக்கப்பட்டபோது கூர்மையான கேள்விகள் இல்லை. சீன ஊடுருவலால் இந்திய நிலப்பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டபோது, நீடித்த கோபமோ, முறையான விசாரணையோ, வெளிப்படைத்தன்மைக்கான கோரிக்கையோ எழவில்லை.

பொறுப்பை ஏற்கும் கோரிக்கை இல்லை

சமீபத்தில் அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்திற்கு வெளியே வெற்றிகரமான செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். ஆனால் அவைக்குள் அது குறித்து விவாதிக்கத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இது நாடாளுமன்ற உரிமையை அப்பட்டமாக மீறுவதாகும்.

சங்கடமான கேள்விகள் காணாமல் போய்விடுகின்றன. தொலைக்காட்சி ஊடகங்கள் அரசாங்கத்தின் விளம்பர உத்திகளில் சிக்கிக்கொள்கின்றனவே தவிர, அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தையோ, இந்திய விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் ஏற்படப்போகும் நீண்டகாலப் பாதிப்புகளையோ ஆராயத் தவறிவிடுகின்றன. நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் அரசியலமைப்பு உரிமை எதிர்க்கட்சிகளுக்கு  மறுக்கப்படுகிறது. 

பிரதமர் செய்தியாளர் சந்திப்புகளை நடத்த மாட்டார். பிரதமர்களின் அந்த ஜனநாயக மரபு இப்போது இந்தியாவில் அழிந்துவிட்டது. நரேந்திர மோடி அதைத் தெளிவாகக் கூறிவிட்டார்: முன் தயாரிப்பு இல்லாத நேர்காணல்கள் இல்லை; கேமராக்களுக்கு முன்னால் பொறுப்புக் கூறுதல் இல்லை.

தொலைக்காட்சி ஊடகங்கள் கேள்வி கேட்க அஞ்சுகின்றன. அதற்குப் பதிலாக, அவர்களின் முழு கவனமும் எதிர்க்கட்சியை நோக்கியே உள்ளது. எதிர்க்கட்சியின் நம்பகத் தன்மையைக் குலைப்பதும், அவர்களின் தலைவர்களைக் கேலி செய்வதும், அரசாங்கத்தின் ஒவ்வொரு தோல்விக்கும் அவர்களையே குற்றம் சாட்டுவதும் தொடர்கிறது.

அரசியலுக்குப் புதிய எரிபொருள் தேவைப்படும்போது, இந்து-முஸ்லிம் மதப் பிரச்சினை தொலைக்காட்சிகளில் கொதிக்க விடப்படுகிறது. வெறுப்புணர்வு பரவும் வரை மதவெறித்தனமான குரல் இடைவிடாமல் ஒளிபரப்பப் படுகிறது. சமூகத்தைப் பிளந்து பார்ப்பது என்பது தற்செயலானது அல்ல; அது தொலைக்காட்சி ஊடகங்களின் ஒரு உத்தி. அது திசை திருப்பல் ஆயுதம்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் போன்றவை மிக மெதுவாகவே பேசப்படுகின்றன. ஏன் தேர்தல் ஆணையத்திடம் யாரும் பொறுப்புக்கூறக் கோருவதில்லை? ஒரு எதிர்க்கட்சி மாநில முதல்வர் ஏன் தில்லிக்கு வந்து போராட வேண்டியுள்ளது?

நிகில் குப்தா வழக்கு பற்றி என்ன சொல்கிறீர்கள்? அமெரிக்க மண்ணில் ஒருவரைக் கொலை செய்ய இந்திய அரசு அதிகாரி ஒருவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு இது. இது ஏதோ சாதாரண சதி அல்ல; இது ராஜதந்திர பூகம்பம். ஆனாலும் அரசாங்கம் எந்த ஒரு தீவிரமான கேள்வியையும் எதிர்கொள்ளவில்லை. எந்த ஒரு தொலைக்காட்சி சேனலும் கடினமான கேள்விகளைக் கேட்கவில்லை.

ஆனால் கேள்விகள் மறைந்துவிடப் போவதில்லை. அவற்றை கேட்க மறுத்தது யார் என்பதை எதிர்கால சந்ததியினர் அறிந்துகொள்வார்கள்.

சாகரிகா கோஷ், அகில இந்திய திருணமுல் காங்கிரஸின் மாநிலங்களவை எம்பி. 

நன்றி: தி பிரிண்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share