தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை இன்று பிப்ரவரி 22-ந் தேதி தொடங்குகிறது திமுக.
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, மநீம, முஸ்லிம் லீக் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இம்முறை தேமுதிகவும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.
பிப்ரவரி 22-ந் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என திமுக ஏற்கனவே அறிவித்திருந்தது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் டிசம்பர் மாதமே பேச்சுவார்த்தை குழுவை அமைத்துவிட்டது. மதிமுக, முஸ்லிம் லீக், சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளும் பேச்சுவார்த்தைக் குழுவை அறிவித்துள்ளன.
திமுகவும் நேற்று தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை குழுவை அறிவித்தது. டி.ஆர். பாலு தலைமையிலான இந்த குழுவில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ. ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
திமுகவின் இந்த குழு இன்று முதல் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்துகிறது.
