நா.மணி
வே. சிவசங்கர்
2026- 27 வரவு செலவு அறிக்கை கவர்ச்சிகரமான கூறுகளை உள்ளடக்கி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ‘வளர்ச்சி அடைந்த இந்தியா’ ‘வாக்கு வங்கி அரசியலை தாண்டிய மக்கள் நலன்’ ‘இளைய தலைமுறைக்கான இனிய பட்ஜெட்’ எனப் பல வார்த்தைகளில் பட்ஜெட் வர்ணிக்கப்படுகிறது.
‘உயர் வளர்ச்சிக்கான உத்திரவாதம்’, பட்ஜெட் தாள்கள் முழுவதும் நிரம்பிக் கிடக்கிறது. ‘நிதி ஒழுங்காற்று ( Fiscal Discipline) நடவடிக்கை சிறப்பு’, ‘அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் அருமை’. ‘பொது முதலீடுகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு’ எனப் பரவலாக பேசப்படுகிறது.ஆனால், ஏழை எளிய மக்களுக்கு, உழைப்பாளி மக்களுக்கு, பட்ஜெட்டில் என்ன கிடைக்கும்? சாதாரண தினக் கூலிகளுக்கு என்ன வாழ்வாதார ஒதுக்கீடு இருக்கப் போகிறது?முறைசாரா தொழிலாளர்களுக்கு முறையாக ஏதேனும் சென்று சேருமா? என்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
உழைப்பாளி மக்களையும் வளர்ச்சியையும் தொடர்புபடுத்தி பார்க்கிறோமா?

இந்திய உழைப்பாளி மக்களில் 90 விழுக்காடு முறைசாரா தொழிலாளர்கள். வளர்ச்சி என்றால், வார்த்தைக்கு வார்த்தை, ஜிடிபி எனப் பேசுகிறோம் . அந்த மொத்த தேசிய உற்பத்தி மதிப்பில், முறைசாரா தொழிலாளர்களுக்கும் பங்கு உண்டு என்பதைக் கூட பல நேரங்களில் நாம் மறந்து விடுகிறோம். பங்குச் சந்தை பரிவர்த்தனை, அதன் ஏற்ற இறக்கங்கள் குறித்து வாய் வலிக்கும் வரை பேசுவோம். அதுவே வளர்ச்சியை தீர்மானிக்கிறது என்று நினைக்க வைக்கிறோம். உழைப்பாளி மக்களுக்கும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதையும் கூட பல நேரங்களில் நினைவில் கொள்வதில்லை. ஓடி ஓடி உழைக்கும் உழைப்பாளி மக்கள், ஒரு நாள் படுத்துக் கொண்டால் கடனாளி. தொடர்ந்து சில நாட்கள் படுக்க நேர்ந்தால் நிரந்தர கடனாளி. இதனைக் கருத்தில் கொண்டு பட்ஜெட் தயார் செய்யப்பட்டுள்ளதா? வேலை இல்லை என்றால் சோறு இல்லை. அப்படியான மக்களுக்கு ஏதேனும் சமூகப் பாதுகாப்பு திட்ட உருவாக்கம் உண்டா? விலைவாசி உயர்வுகளிலிருந்து நிவாரணம் உண்டா? இந்தக் கேள்விகளுக்கு பட்ஜெட் முகம் கொடுத்துள்ளதா? என்பதற்கான பகுப்பாய்வு இது.
வளர்ச்சியே ஆனால் வேலை இல்லை
2026 பட்ஜெட் உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கு பெரும் முன்னுரிமை அளித்துதிருக்கிறது. உள்கட்டுமானம், சேவைத் துறை, மின் அணுவியல் துறை, போக்குவரத்து, பாதுகாப்புத் துறை உற்பத்தி, போக்குவரத்தின் சீரான மேம்பாடு, அதிவேக ரயில்கள் ஆகியவற்றுக்கு பொது முதலீடுகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 12 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த முதலீடுகள் பெரும்பாலும் முதலீட்டு செரிவான தொழில்களுக்கே பயன்படும். உழைப்பு சார்ந்த தொழில்களுக்கு அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வகை முதலீட்டின் விளைவாக, கார்ப்பரேட் தொழில் நிறுவனங்களின் லாபம் பெருகும். ஒப்பந்ததாரர்கள் நல்ல பலன் அடைவார்கள். நிதி நிறுவனங்களின் லாபம் பெருகும். ஆனால், உழைப்பாளி மக்களுக்கு வேலை வய்ப்பு குறைவாகவே கிடைக்கும். பொது முதலீடுகள் அதிகரிக்கும் போது, முறைசாரா தொழிலாளர்களுக்கு இத்தனை விழுக்காடு வேலைவாய்ப்பு என்ற உத்தரவாதம் வழங்கப்படுவதில்லை. இதனைத் தாண்டி, சிறு தொழில்கள், குறுந்தொழில்கள், கட்டுமானம், விசைத்தறி, கைத்தறி, சில்லறை வியாபாரம், மொத்த வியாபாரம் ஆகியவற்றுக்கான பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பது ஒரு பெரும் கேள்விக்குறி.
அத்துவான தொழிலாளிகள் (Gig workers)

வளர்ந்து வரும் ஜிக் தொழிலாளர்கள், ‘செயலிகள்’ (App) வழியாக இன்று எண்ணற்ற பொருட்களை நுகர்வோருக்கு கொண்டு சேர்கிறார்கள். தொழில் புரட்சி காலத்தை போல் 16 மணி நேர வேலை வாங்கப்படுகிறார்கள். ஜூமோட்டா, ஸ்விகி தொழிலாளிகள், ஓட்டுநர்கள் என பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கால நேரமின்றி வேலை செய்கிறார்கள். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது. இவர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை. விபத்துக் காப்பீடு இல்லை. குறைந்தபட்ச பாதுகாப்பு விதிகள் வகுக்கப்படும் என்ற உத்தரவாதம் கூட தரப்படவில்லை. குறைந்தபட்ச ஊதிய உத்திரவாதம் உண்டா? ஜிக் வேலையாட்கள் தொழில் முனைவோர் போல் நடத்தப்படுவார்கள் என்ற சொல்லாடல்களால் மட்டுமே அவர்களது வாழ்க்கை முன்னேறி விடாது. ஆதீத சுரண்டல்கள், கால நேரமில்லாத வேலை, நிச்சய மற்ற வருவாய், உழைப்பாளர் உரிமை என்று ஏதுமில்லாத நிலை ஆகியவற்றுக்கு வரவு செலவு அறிக்கை ஆழ்ந்த மௌனமே சாதிக்கிறது.
முறைசாரா தொழிலாளர்கள்:
2026-27 பட்ஜெட் 1.5 லட்சம் தொழில் முறை பராமரிப்பு பணி ( care givers) செய்பவர்களுக்கு பயிற்சி அளிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மனநலம் குறித்த மையங்கள் அமைக்கப் போவதாக பேசுகிறது. அவசர உதவி மையங்கள் நிறுவ இருப்பதாக சொல்கிறது. இவை அனைத்தும் வரவேற்கப்படக் கூடியது. என்றாலும், இவை முறைசாரா தொழிலாளர்களின் உரிமை சார்ந்தது அல்ல. முறைசாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம், திடீர் பணி நீக்கத்தை கேள்வி கேட்கும் உரிமை, அல்லது தடுக்கும் உரிமை. என எந்தவித குறைந்தபட்ச உத்திரவாதமும் இல்லை. தொழிலாளர் சட்ட சீர்திருத்தம், தொழிலாளர் சட்டங்களை எளிமைப்படுத்துதல் என்ற வார்த்தையில் கூறப்பட்டிருந்தாலும், அதன் வழியாக உழைப்பாளர் சிக்கல் தீர்ந்துவிடவில்லை. ஏற்கனவே இருந்த சட்டங்களை நீர்த்துப்போக செய்ததாகவே இந்த சட்ட திருத்தங்கள் அமைந்துள்ளது என்பதை மக்கள் புரிய தொடங்கி உள்ளனர்.
சிறுதொழில் துறையை சார்ந்த தொழிலாளர்கள்

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்கு ரூபாய் 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடன் வசதிக்கு வழிவகை கூறப்பட்டுள்ளது. இவை பதிவு செய்யப்பட்ட சிறு தொழில்களில் நிறுவனங்களுக்கே பொருந்தும். ஆனால் பெரும்பகுதி உழைப்பாளி மக்கள் இவ்வாறு பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்களில் வேலை செய்யவில்லை. இது தவிர, சுயதொழில், குடும்பம் சார்ந்த பாரம்பரிய தொழில்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பயன்பெற ஏதுமில்லை. கடன் வசதி செய்து கொடுத்தால் மட்டுமே கூலி உயராது. பணிப் பாதுகாப்பு மேம்படாது. தொழிலாளர் நல சட்டங்கள் இன்றி, கூலி உத்தரவாத திட்டமின்றி, மேலே குறிப்பிட்ட நன்மைகள் ஏழை உழைப்பாளி மக்களுக்கு சென்று சேராது.
விவசாய தொழிலாளர்கள்

விவசாய தொழிலாளர்களுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட பழைய உத்தரவாதம், புதிய பெயர்களில் புதிய மொழியில் மீண்டும் வழங்கப்படுகிறது. மீனவர்கள், தோட்டத் தொழிலாளர்கள், தென்னை சாகுபடி, முந்திரி சாகுபடி இப்படி பலவற்றுக்கு AI-ஐ பயன்படுத்தி பயனடைய வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் விவசாய தொழிலாளர்களின் அடிப்படை சிக்கல்கள் அப்படியே நீடிக்கிறது. கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலை, குறைந்த பட்ச ஓய்வூதியம், அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு போன்றவற்றிற்கு பட்ஜெட்டில் எந்த ஏற்பாடும் இல்லை. கிராமப்புற சிக்கல்களுக்கு தீர்வாக தொழில்நுட்பம் திட்டங்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் விவசாயிகள் கடன் சுமை இன்றி வாழ, அமைப்பு ரீதியான மாற்றங்களுக்கு எந்த முன்னெடுப்பையும் அரசு மேற்கொள்ளவில்லை. விவசாய விலைகளே ஒரு விபத்தாக அதன் பாதிப்புகளை விவசாயிகள் மீது நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது. அடுத்து பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகள் காத்திருக்கிறது. அதற்கும் எந்த முன்னேற்பாடுகளும் நிதி ஒதுக்கீடும் இல்லை.
அதிகரிக்க இருக்கும் தாக்குதல்

நிதி பற்றாக்குறையை 4.3 விழுக்காட்டோடு நிறுத்தி விட வேண்டும். ‘ஜிடிபி கடன் விகிதம் 2030 ஆம் ஆண்டில் 50 விழுக்காடு’ என்ற கட்டுக்குள் வந்து விட வேண்டும் என்ற முனைப்போடு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், பொதுச் செலவை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்து குறைக்க இருக்கிறோம். மானியங்களை வெட்ட இருக்கிறோம். மறைமுக வரியை, ஜிஎஸ்டி யை அதிகரிக்க இருக்கிறோம். ஏழைகள் இன்னும் அதிகமாக வரி செலுத்த வேண்டிய சூழல் வரும். ஏழைகள் இப்போது இருப்பதை காட்டிலும் இன்னும் நிறைய இழக்க வேண்டியது இருக்கும். பணக்காரர்களுக்கு பல சலுகைகள் இதன் வழியாக கிடைக்கும் என்பதை பட்ஜெட் சொல்லாமல் சொல்கிறது. இந்த பட்ஜெட் வளர்ச்சியை மையப்படுத்தியது. ஆனால், அந்த வளர்ச்சி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானது. நிதித்துறை தாராளமயமாக்களுக்கு ஆதரவானது. உற்பத்தி திறனை அதிகரிக்க உழைப்பு ஒரு கருவி. ஆனால் உழைப்பாளி மக்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட சமூக பாதுகாப்பு, குறைந்தபட்ச வேலை உத்தரவாதம், அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம், புலம்பெயர தொழிலாளர்களுக்கு வீடுகள் போன்றவற்றில் பட்ஜெட்டின் பங்கு பெருமளவு இல்லை என்றே கூற வேண்டும்.
கட்டுரையாளர்கள்
நா.மணி

*மேனாள் தலைவர் தமிழ் நாடு அறிவியல் இயக்கம்
வே. சிவசங்கர்
**பேராசிரியர் பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகம்
