கோவையில் மாணவி கூட்டு பலாத்காரம் செய்த விவகாரத்தில் காவல்துறையினர் உரிய தண்டனை வாங்கி தர வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையரிடம் பாமக பொருளாளர் மற்றும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பாமக நிர்வாகிகள் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக பொருளாளர் திலகபாமா கூறுகையில், “தமிழகம் முழுவதும் எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அரங்கேறியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தவறு நடந்தால் எனது கை இரும்பு கையாக செயல்படும் என்று கூறுகிறார். ஆனால் தற்பொழுது அந்த கை எங்கே போனது என தெரியவில்லை.
தொடர்ச்சியாக அண்ணா பல்கலைக்கழகம், கடலூர், கோவை போன்ற பகுதிகளில் பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறி வருவதாகவும் போதைப் பழக்கத்தினால் இதுபோல குற்றங்கள் நடைபெற்று வருகிறது என குற்றம் சாட்டினார். முதல்வர் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
தீபாவளிக்கு மது விற்பனை செய்வதற்கு தமிழக அரசு டார்கெட் வைத்துள்ளது. அதேபோல சட்ட ஒழுங்கை சீர் செய்ய என்ன டார்கெட் வைத்துள்ளார்கள் என கேள்வி எழுப்பினார். சம்பவம் நடந்த பகுதியில் மதுபான கடையை நாம் தமிழர் கட்சியினர் அடித்து உடைத்து விட்டனர். இதுவே பொதுமக்கள் செய்தால் மதுபான கடைக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்கிறார்கள்.
கரூர் சம்பவத்தில் சாரி கேட்டது போல அந்த பெண்ணை அழைத்து முதல்வர் சாரி கேட்பாரா?? சுட்டு பிடித்த 3 பேருக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று கேட்பதை விட குற்றவாளிகளை குடி நோயாளியாக மாற்றிய முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன தண்டனை.. யார் தண்டனை கொடுப்பது என்று காட்டமாக விமர்சனம் செய்தார்.
