பாரதிராஜா உடல்நிலை சீராக இருப்பதாக அவர் சிகிச்சை பெறும் எம்.ஜி.எம் மருத்துவமனை கூறியுள்ளது.
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை, தி.நகரில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் கடந்த டிசம்பர் இறுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். இதற்கிடையே அவரது உடல்நிலை குறித்து கவலைக்குரிய வகையில் சில செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.
இந்நிலையில் எம்.ஜி.எம்.மருத்துவமனை அவரது உடல்நிலை குறித்து இன்று (ஜனவரி 5) வெளியிட்ட அறிவிப்பில், ”தீவிர நுரையீரல் தொற்று காரணமாக பாரதிராஜா எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அனைத்துவிதமான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. எங்கள் மருத்துவர்கள் குழுவும் அவரை தீவிரமாக கண்கானித்து வருகிறது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அவரது குடும்பத்தின் சார்பில் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகன் மனோஜ் மறைவால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து மீள, மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்த பாரதிராஜா, சென்னை திரும்பிய சில நாட்களிலேயே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
