வைஃபை ஆன் செய்ததும் ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
எதுக்கு பூடகம்? நேரடியாகவே சொல்லுமய்யா..
எல்லாம்.. விஜய் நடத்திய மாமல்லபுரம் சந்திப்புதான்..
ஒஹோ…
இந்த ஒரு சந்திப்பை நடத்துவதற்குள் விஜய் கட்சிக்குள் நடந்த ‘சம்பவங்கள்’ இருக்கே.. அடேங்கப்பா ரகம்தான்.. அந்த கட்சியில் ‘ஒருங்கிணைப்பு’ படுமோசம்னு பட்டவர்த்தனமாக சொன்னது..
ஆமாய்யா.. விளக்கமாக சொல்லுங்க
கரூரில் 41 பேரில் பலியான சம்பவம் நடந்து சரியாக ஒரு மாதம் ஆகிடுச்சு.. கரூரில் அடுத்தடுத்து உசுரு போய்க்கிட்டிருந்த நேரத்தில் ‘ஜெட்’ வேகத்தில் சென்னைக்கு ரீச் ஆனார் விஜய். மறுநாள் முழுவதும் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் 2-ம் கட்ட தலைகள் தத்தளிச்சு போயிட்டாங்க..
இன்னொரு பக்கம் போலீஸ் தேடுதுன்னு புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் எல்லாம் தப்பி ஓடிட்டாங்க.. ஜான் ஆரோக்கியசாமியும் என்ன செய்யறதுன்னே தெரியலைன்னு யாரோட போனையும் அட்டெண்ட் செய்யாமல் இருந்தாரு..
ஒருவழியாக மெல்ல வெளியே வந்து, கரூருக்கு விஜய் மீண்டும் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை பார்ப்பதுன்னு முடிவு செஞ்சாங்க..
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் எல்லோரையும் ஒரே இடத்துல சந்திக்கிறதுக்கு ஏதுவான இடத்தை அருண்ராஜ் ரொம்ப தீவிரமாக தேடிகிட்டு இருந்தாரு… பாதிக்கப்பட்டவங்ககிட்டேயும் விஜய் வருவாரு.. உங்களை சந்திச்சு ஆறுதல் சொல்வாருன்னு சொல்லி வெச்சிருந்தாங்க..
அப்பதான் ஜான் பெரிய அணு குண்டை தூக்கிப் போட்டுவிட்டார்.. “எனக்கு கிடைச்ச ரிப்போர்ட் படி, கரூருக்கு நீங்க போனா உங்க உயிருக்கே ஆபத்து.. உங்க மேல மிகப் பெரிய தாக்குதலே நடக்கும்.. திருச்சி ஏர்போர்ட்டில் இருந்து கரூர் வரைக்கும் எந்த இடத்திலும் 50 அல்லது100 பேர் சேர்ந்து கும்பலாக உங்களை வந்து தாக்குவாங்க.. நானும் அந்த ரூட்டில் டீமை அனுப்பி செக் செய்துட்டேன்.. அதனால நீங்க கரூருக்கு போயிடவே கூடாது.. உயிருக்கு ரொம்பவே ஆபத்து”ன்னு கறாரா சொல்லிவிட்டார் ஜான் ஆரோக்கியசாமி.
அதுவரைக்கும் கரூருக்கு போகும் முடிவில் இருந்த விஜய், ஜான் ஆரோக்கியசாமி யின் இந்த ‘அட்வைஸால்’ அப்படியே தலைகீழாக மாறிப் போனார்.
விஜய்யின் முடிவு மாறிப் போனதில் புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ் போன்றவங்க ரொம்ப அப்செட் ஆகிட்டாங்க.. மறுபடியும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தொடர்பு கொண்டு, விஜய்யை வீடியோ காலில் பேச வைத்து நிலைமையை தற்காலிகமாக சமாளிச்சாங்க..
இதுக்கு அப்புறம்தான்.. இன்றைய மாமல்லபுரம் Four Points Sheraton ஐந்து நட்சத்திர ஹோட்டல் சந்திப்பு…
ஓஹோ.. எத்தனை குடும்பத்தினர் வந்திருந்தாங்களாம்
கரூரில் உயிரிழந்தது 41 பேர். வந்தது 37 பேர் குடும்பத்தினராம்..
இந்திய அரசியல் வரலாற்றிலேயே தமது நிகழ்ச்சியால் உயிரிழந்தவங்களை தம்மோட வீட்டுக்கே வரவழைத்து ‘ஆறுதல் வாங்கிய/ சொன்ன’ ஒரே தலைவர் விஜய்தான் போங்க..
அதுவும் சரிதான்..
இந்த ‘ஆறுதல் பெறுதல்’ நிகழ்ச்சிக்கான அத்தனை செலவுகளையும் வழக்கம் போல ஆதவ் அர்ஜூனாதான் செஞ்சாரு.. இந்த குடும்பங்களுக்கு கொடுத்த தலா ரூ.20 லட்சமும் ஆதவ் ஃபண்ட்தான்..
சரிய்யா.. விஜய் என்ன பேசினாரு? விஜய்க்கிட்ட பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் என்ன சொன்னாங்களாம்?
சொல்றேன்.. எல்லோரையும் முதல்ல ஓபன் ஹாலில் உட்கார சொல்லியிருந்தாங்க.. அதுக்கு அப்புறமாக விஜய்யை சந்திக்க ஒவ்வொரு குடும்பமாக அனுப்பி வைக்கப்பட்டாங்க..
விஜய்யை சந்தித்துவிட்டு திரும்பிய குடும்பத்தினரிடம் நாம் பேசுனப்ப, “நாங்க விஜய் உட்கார்ந்திருந்த ரூமுக்குள் போனோம்.. அவர் மட்டும்தான் சேரில் உட்கார்ந்திருந்தாரு.. அவருக்கு முன்னாடி போட்டிருந்த சேர்களில் நாங்க உட்கார்ந்தோம்..
அவரு பேச ஆரம்பிச்சதுல இருந்தே கண்ணீருதான்.. ரெண்டு கண்ணும் ரொம்பவே கலங்கி போயிருந்தாரு.. எங்க கைகளை எல்லாம் பிடிச்சுகிட்டு, ஆறுதல் சொன்னாரு.. ஒரு மாசமா தூக்கமே வரலைன்னும் சொன்னாரு..
அப்படியே எங்க குடும்ப விவரங்களை கேட்டுகிட்டு என்ன உதவி செய்யனும்னும் கேட்டுகிட்டாரு… பிள்ளைக படிப்பு பத்தி விசாரிச்சாரு.,. நாங்களும் அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்தோம்..
விஜய் எங்க கூட பேசுனப்ப அவங்க கட்சிக்காரங்க புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனான்னு யாருமே இல்லை.. ஒன் டூ ஒன் மாதிரி அவரு மட்டும் டேபிளில் இருந்த பேப்பரை பார்த்து சில விவரங்களை எங்க கிட்ட கேட்டுகிட்டாரு” என்றனர்.
இந்த சந்திப்பு பற்றி தவெக நிர்வாகிகளிடம் பேசிய போது, “தளபதியோட இந்த சந்திப்பு தனிப்பட்டதாகவே இருந்துச்சு.. புஸ்ஸி, ஆதவ், அருண்ராஜ், வெங்கட்ராமன்னு யாருமே அவரு கூட அந்த ரூமில் இல்லை.. இந்த சந்திப்புல 2 விஷயங்களை தளபதி செஞ்சிருக்காரு
அதாவது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு Family Health Insurance-க்கான ஃபார்மில் கையெழுத்து வாங்கினாரு,..
அடுத்ததாக, எல்லா குடும்பங்களுக்கு அடுத்த 20 வருஷத்துக்கு மாதம் ரூ 5,000 கிடைக்கும்னு வாக்குறுதி கொடுத்தாரு.. ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20, 25 நிமிஷம் ஒதுக்கி சந்திச்சாரு” என்றனர்
அத்துடன், “இன்றைய சந்திப்பு முடிஞ்ச உடனே புஸ்ஸி, ஆதவ் உள்ளிட்டவங்களை அழைச்சு தீவிரமாக டிஸ்கஷன் நடத்துனாரு தளபதி.. அப்போ, இந்த ஒரு மாசத்துல கட்சி நிர்வாகிகள் எல்லாமே ரொம்பவே அப்செட் ஆகி இருக்காங்க.. நம்ம கட்சியோட செயல்பாடும் முடங்கி போயிருக்கு.. அதனால கட்சியோட பொதுக்குழு கூட்டத்தை உடனே ஏற்பாடு செய்யுங்க.. கட்சிக்காரங்களுக்கு அப்பதான் முழு நம்பிக்கை வரும்.. அங்க சில விஷயங்களை பேசனும்னு ஆர்டர் போட்டிருக்கார் தளபதி” என்றனர்.
ஆக.. விரைவில் தவெக பொதுக்குழு கூட்டம் கூடுகிறது.. சரி.. காங்கிரஸ் கட்சியில் என்ன சலசலப்பாம்?
அதுவா.. சென்னை அண்ணாசாலையில் நடந்த ஒரு சிறு சம்பவம் ‘ஆட்சியில் பங்கு’ கோஷம் வரைக்கும் போயிருக்குப்பா..
என்னய்யா மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுற?
விளக்கமாக சொல்றேன்.. சென்னை அண்ணாசாலையில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜ்குமாரின் கார் போக்குவரத்துக்கு இடையூறாக நின்று கொண்டிருந்ததாம்.. அதனால் காரை வேற இடத்தில் சொல்லி இருக்கிறார் கான்ஸ்டபிள் பிரபாகரன்.
இந்த சம்பவத்தில், எம்.எல்.ஏ. ராஜ்குமார் தன்னை கன்னத்தில் ஓங்கி அறைந்ததாக பிரபாகரன் மேலதிகாரிகளிடம் புகார் சொல்ல உடனடியாக அந்த காரை சீஸ் செய்ய கமிஷனர் உத்தரவிட்டார். அத்துடன் ராஜ்குமார் எம்.எல்.ஏ. மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கு..
சரி.. எம்.எல்.ஏ. ராஜ்குமார் தரப்பு என்ன சொல்கிறது?
“கான்ஸ்டபிள் பிரபாகரன் காரை எடுக்க சொன்னப்போ, அண்ணன் (எம்.எல்.ஏ.) அவர் பேரை கேட்டாரு.. கான்ஸ்டபிள் பதில் சொல்லலை.. அதனால அவரோட பேட்ஜில் இருந்த பேரு நம்பரை பார்க்க கோட்டை விலக்கிவிட்டாரு.. அதைத்தான் அறைஞ்சுட்டாருன்னு கிளப்பிவிட்டாங்க..
அதுக்கு பிறகும் அண்ணன் ரூ.3,500 ஃபைன் கட்டினாரு.. ஆனாலும் காரை லாக் பண்ணிட்டு 2 நாட்கள் கழிச்சுதான் கொடுத்தாங்க” என்றனர்.
அதெப்படி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது கேஸ் போடலாம்னு மயிலாடுதுறை எம்பி சுதா, மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹசன் அலி ஜின்னா எல்லாம் வரிந்து கட்டினார்கள்.. இந்த சம்பவம் பற்றி நம்மிடம் பேசிய தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள், மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜ்குமார், “சிஎம் குடும்பத்துக்கு ரொம்ப வேண்டியவர்தான்.. வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சிஎம் குடும்பத்துல யார் போனாலும் ஏற்பாடுகளை செய்வது ராஜ்குமார் எம்.எல்.ஏ.தான்..
மணிசங்கர் ஐயருடன் இருந்ததால டெல்லியில ராகுல் காந்தி தரப்பு ஆட்களுக்கும் நல்ல நெருக்கமானவர் ராஜ்குமார்..
கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமாரை கூட அண்மையில் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு ராஜ்குமார் அழைச்சுகிட்டு போனாரு.. கர்நாடகா சிஎம் பதவிக்கு முயற்சி செஞ்சுகிட்டு இருந்த டிகே சிவகுமாரை, அதுக்கு முயற்சிக்க வேண்டாம்.. சிக்கல் இருக்குன்னு வைத்தீஸ்வரன் கோவில் ஓலைச் சுவடி ஜோதிடர்கள் சொன்னதால அவரும் அந்த முயற்சியை ஒத்திவைச்சிருக்காரு.. இப்படி செல்வாக்கான எம்.எல்.ஏ. ராஜ்குமார், தன்னுடைய காரை போலீஸ் லாக் செஞ்ச உடனே சிஎம் ஆபீஸ் உட்பட பல இடங்களுக்கும் போனடிச்சாராம்.. ஆனா யாருமே ரெஸ்பான்ஸ் செய்யலைன்னு கோபம்..
இதுலதான் காங்கிரஸ் எம்.பி சுதா, எம்.எல்.ஏ. ஹசன் அலி ஜின்னா எல்லோருமே செம்ம கடுப்பாகி போய் அண்ணாசாலை போலீஸ் ஸ்டேஷனுக்குள் உட்கார்ந்து போராடுவோம்னு கிளம்பினாங்க..
இன்னொரு பக்கம் இதுதான் சந்தர்ப்பம்னு, ‘ கூட்டணி கட்சியாக இருக்கிறதாலதான நம்மை மதிக்க மாட்டேங்குறாங்க.. இதே நாமும் ஆட்சியில பங்கு கேட்டு வாங்கி இருந்தா.. நாமும் அமைச்சர்களாகி இருந்தா நம்ம எம்.எல்.ஏக்களுக்கு இப்படி ஒரு நிலைமை வருமா? போலீஸ்காரங்க நம்மகிட்ட இப்படி நடக்கத்தான் முடியுமா? ‘ எனவும் சிலர் கொளுத்திப் போட அதுதான் இப்போது காங்கிரஸ் கட்சி ஆபீசான சத்தியமூர்த்தி பவன் பக்கம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறதய்யா என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.
