”இந்தி மொழியை மட்டுமே படித்த காரணத்தால் வட இந்தியர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தமிழ்நாட்டுக்கு கட்டிட தொழிலாளியாக, டேபிள் துடைக்கிறவராக, பானிபூரி விற்பவராக வருகிறார்கள்” என்று தமிழக வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியதை வட இந்திய ஊடகங்கள் சர்ச்சையாக்கி உள்ளன.
வட இந்தியர்களை தமிழக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இழிவாகப் பேசிவிட்டதாக வட இந்திய ஊடகங்கள் பரப்புரை செய்து வருகின்றன.
மதுராந்தகத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது: வடக்கே உள்ளவன் இந்தி பேசறதுனால, இந்தியை மட்டும் அவன் படிச்ச காரணத்தாலே வேலைவாய்ப்பு இல்லாம கட்டிடத் தொழிலாளியாக, டேபிள் துடைக்கின்றவனாக, பானிபூரி விக்கின்றவனாக வர்றான்.
நம்ம பசங்க எல்லாம் எங்க போயிருக்காங்க? வெளிநாட்டுக்கு போயிருக்கான். அங்க வெளிநாடுகள்ல போய் கோடி கோடியாக சம்பாதிக்கக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைச்சது.. ஏன்னா இருமொழிக் கொள்கையில் ஆங்கிலம் படித்ததுதான். எல்லா கிராமத்தைச் சார்ந்தவர்களும் வெளிநாடு சென்று வேலைவாய்ப்பு பெறக்கூடிய கம்ப்யூட்டர் படிக்கும் வாய்ப்பை கலைஞர் உருவாக்கிக் கொடுத்தார்.
அவர் கிராமம் தோறும் மின்சாரத்தைக் கொடுத்தார். இப்ப கிராமம் தோறும் மின்சார வசதி பெற்றிருக்கிறோம் என்றால் நம்முடைய கலைஞர் முதலமைச்சரான காலத்திலிருந்துதான். பாதுகாக்கப்பட்ட குடிநீர் குடிக்கிறோம் என்றால் கலைஞர் வாட்டர் டேங்க் கட்டிக் கொடுத்தது. முன்னெல்லாம் குளம், குட்டைகளிலே குடிப்பாங்க, வயசானவங்களுக்குத் தெரியும். குளம் குட்டையில உள்ள தண்ணியைதான் முதல் நாள் புடிச்சு வெச்சுட்டு மறுநாள் குடிப்போம். மாடும் குளிக்கும், மனுஷனும் குளிப்பான் எல்லாம் செய்வாங்க. ஆனா பாதுகாக்கப்பட்ட குடிநீரைக் கொடுத்தது கலைஞர்தான்.
இப்ப நம்முடைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒவ்வொரு கிராமம் தோறும் 1 கோடியே 34 லட்சம் குடும்பத்திற்கு மாதம் மாதம் பணம் வருகிறது. பல திட்டங்கள் மூலமாக கிட்டத்தட்ட 2 கோடியே 14 லட்சம் குடும்பத்திற்கு மாதம் மாதம் பணம் போய்க்கொண்டு இருக்கிறது. அந்த சாதனையை புரிந்தது நம்முடைய முதலமைச்சர்தான். இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார்.
