மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ அதிர்ச்சி தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். இந்த கோவிலுக்கு வந்த பேராசிரியர் நிகிதா தமது நகைகளை காணவில்லை என கொடுத்த புகாரின் அடிப்படையில் அஜித்குமாரை போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணையில் கொடூரமாக தாக்கப்பட்டு அஜித்குமார் மரணமடைந்தார்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர காவல்நிலைய மரணம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் 10 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நடைபெற்று வரும் இவ்வழக்கு, நேற்று நீதிபதி ஸ்ரீமதி முன்பாக விசாரணைக்கு வந்தது. கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 போலீசாரின் ஜாமீன் மனு மீது நேற்று விசாரணை நடந்தது.
அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகைதீன் பாஷா, அஜித்குமார் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் 10 போலீசாருக்குமே தொடர்பு உள்ளது. ஆகையால் 10 போலீசாருக்கும் ஜாமீன் தரக் கூடாது” என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த விசாரணையின் போது, “அஜித்குமார் மீதான நகை திருட்டு புகார் உண்மைதானா?” என நீதிபதி ஸ்ரீமதி கேள்வி எழுப்பினார். இதற்கு சிபிஐ தரப்பில், “நகை திருட்டு புகாருக்கு முகாந்திரம் எதுவுமே இல்லை. அதனாலேயே நகை திருட்டு புகார் என்பது முடித்தும் வைக்கப்பட்டுவிட்டது” என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, “ஒன்றுமே இல்லாத விஷயத்துக்காக ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளாரே” என நீதிபதி ஸ்ரீமதி வேதனை தெரிவித்தார். அத்துடன், ”இந்த கொலைக்கு காரணமான புகார்தாரர் (பேராசிரியர் நிகிதா) மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே?” என்று கூறிய நீதிபதி ஸ்ரீமதி, இருதரப்புக்கும் முன்விரோதம் ஏதும் இருந்ததா? எனவும் கேள்வி எழுப்பினார். இதற்கு சிபிஐ தரப்பில், அஜித்குமார் மற்றும் நிகிதா தரப்புக்கு இடையே எந்த முன்விரோதமும் இல்லை. நகை திருடு போய்விட்டதாக புகார் கொடுக்கப்பட்டது; இதற்காகவே மானாமதுரை டிஎஸ்பி விசாரணை நடத்த உத்தரவிட்டார். அந்த விசாரணையில்தான் அஜித்குமார் கொல்லப்பட்டார்” எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் புகார் தொடர்பான ஆவணங்களை நீதிபதி ஸ்ரீமதி கேட்டார். அதற்கு, இது தொடர்பாக விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாக சிபிஐ வழக்கறிஞர் முகைதீன் பாஷா கூறினார். இந்த வழக்கின் விசாரணை வரும் 16-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
