ஸ்டாலினிடம் கேசி வேணுகோபால் பேசியது என்ன? கிரிஷ் சோடங்கர் ’அப்டேட்’- கனிமொழியுடன் சந்திப்பு!

Published On:

| By Mathi

DMK Congress Kanimozhi

சென்னையில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி எம்.பி.யை காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று பிப்ரவரி 23-ந் தேதி சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை உடன் இருந்தார்.

சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை நேற்று இரவு காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், சத்தீஸ்கர் முன்னாள் துணை முதல்வர் தியோ சிங் ஆகியோர் சந்தித்து பேசினர்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து சென்னை சிஐடி காலனியில் கனிமொழி எம்.பி.யை தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரும் காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான கிரிஷ் சோடங்கர் இன்று சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிரிஷ் சோடங்கர், “கனிமொழியுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு.. அவ்வளவுதான், அதற்கு மேல் ஒன்றுமில்லை” என்றார்.

ADVERTISEMENT

அப்போது, ஸ்டாலின் – கே.சி. வேணுகோபால் இடையேயான நேற்றை சந்திப்பில் என்ன பேசப்பட்டது என செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த கிரிஷ் சோடங்கர், ”அந்தச் சந்திப்பில் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. தற்போது வரை அது முடிவடையாத நிலையில் உள்ளது.எத்தனை தொகுதிகள் என்பது குறித்து குறித்து இன்னும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ராஜ்யசபா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் காங்கிரஸுக்கான இடம் உள்ளிட்டவை குறித்தும் இருவரும் விவாதித்தனர். தொகுதிப் பங்கீட்டில் மட்டும் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை”என்றார்.

”திமுகவிடம் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளைக் கேட்கிறது? 30க்கும் அதிகமான தொகுதிகளா?” என்ற கேள்விக்கு, ”நாங்கள் ஏற்கனவே இது குறித்துப் பேசிவிட்டோம். முடிவு எடுக்கப்பட்டவுடன் உங்களுக்குத் தெரிவிக்கிறோம்” என்றார் கிரிஷ் சோடங்கர்.

ADVERTISEMENT

மேலும், “கே.சி. வேணுகோபால் எப்போது மீண்டும் வருவார்? அதிகாரப்பூர்வக் குழு எப்போது திமுக குழுவை சந்திக்கும்?” என்ற கேள்விக்கு, ”விரைவில் எங்கள் குழுவும் திமுக குழுவும் சந்திக்கும். அதற்காகத்தான் காத்திருக்கிறோம்” என்றார்.

”ஆட்சியில் பங்கு” பற்றி பேச்சுவார்த்தை நடத்தவில்லையா?” என்ற கேள்விக்கு “எல்லாவற்றைப் பற்றியும் பேசுகிறோம். முதலில் தொகுதிப் பங்கீட்டை நாம் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். அது மட்டும்தான் தற்போது நிலுவையில் உள்ளது” என்றார் கிரிஷ் சோடங்கர்.

முதல்வர் ஸ்டாலின், கேசி வேணுகோபால் இடையேயான சந்திப்பு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, “மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share