ஜல்லிக்கட்டுக் காளையும்.. சின்ன பையனும்.. விஜய் சொன்ன குட்டி கதை!

Published On:

| By Pandeeswari Gurusamy

vijay

வேலூர் அகரம்சேரியில் தவெக நிர்வாகிகளை இன்று (பிப்ரவரி 23) விஜய் சந்திக்கும் நிகழ்ச்சியில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் கலந்து கொண்டு பேசினார்.
ஒரு குட்டி கதையில் இருந்து ஆரம்பிப்போமா என தனது பேச்சை தொடங்கிய விஜய், “ஒரு பெரிய ஊரில் நான்கு சாலைகள் இணையும் ஜங்ஷன். ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் ஏரியா. அங்கு ஒரு முரட்டு ஜல்லிக்கட்டுக் காளை ஒன்று காலால் மண்ணை வீசி, சீறிக்கொண்டு நின்றிருக்கிறது. யாரும் அதன் பக்கத்தில் போக முடியவில்லை. அந்தக் காளையை அடக்கி அமைதிப்படுத்தினால் மட்டுமே அந்த இடம் மீண்டும் பழைய நிலைக்குத் (back to normal) திரும்பும். ஆனால் அந்த ஊரில் ஒரு சிலருக்கு மட்டுமே அந்தக் காளை அடங்கும். அவர்கள் யாரும் அங்கு இல்லை.

கூட்டத்தில் இருந்த சிலர் – ஏற்கனவே அந்தக் காளையை அடக்கியவர்களோடு இருந்தவர்கள் – “எங்களுக்கு இல்லாத அனுபவமா? நாங்கள் பார்க்காத காளையா? நாங்கள் பார்க்காத மாடா? நாங்களே போய் அடக்குகிறோம்” என்று சொல்லிக்கொண்டு உள்ளே போகிறார்கள். ஆனால் ஒருவரால் கூட அந்தக் காளையைத் தொடக்கூட முடியவில்லை. எல்லோரையும் அடித்து வீசி, தூக்கி எறிந்துவிட்டது.

ADVERTISEMENT

இப்போது கூட்டத்தை விலக்கிவிட்டு ஒரு சின்னப் பையன் உள்ளே நுழைகிறான்.“டேய், எங்களாலேயே முடியலையே… நீ என்னத்தைப் போய் கிழிக்கப் போற? எங்களுக்கு அவ்வளவு அனுபவம் இருக்கு. நாங்களே அடிபட்டு ஓரமா படுத்துக்கிட்டிருக்கோம். இவன் விளையாட்டுத்தனமா ஏதோ பண்ணிட்டிருக்கான். பாவம், அந்தக் காளையிடம் போய் அடிபட்டு சாகப் போறான்” என்று ஏளனமாகப் பேசினார்கள்.

இன்னொரு பக்கம் சிலர் பரிதாபப்பட்டு, “ஐயோ பாவமே… இப்படி தனியா போய் அந்தக் காளையிடம் மாட்டிக்கிட்டானே… என்ன பண்ணப் போறானோ” என்று பேசினார்கள். ஆனால் அந்தச் சின்னப் பையன் எதையும் காதில் வாங்காமல், இரண்டு பாக்கெட்டிலும் கையை விட்டுக்கொண்டு ஸ்டைலாக, கெத்தாக, தில்லாக உள்ளே நடக்கிறான். ஒரு ஸ்டெப் எடுத்து வைக்கிறான் – காளை சீறிக்கொண்டு நின்றிருக்கிறது.

ADVERTISEMENT

இன்னொரு ஸ்டெப் எடுத்து வைத்தான் – காளை சீறிக்கொண்டே முன்னால் வந்தது.
மக்கள் எல்லோரும் பதற்றத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். இன்னொரு ஸ்டெப் எடுத்து வைத்தான். காளை முட்ட வரும் தருணத்தில், அவன் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த இரண்டு புல்லுக்கட்டுகளைக் காட்டினான். காளை அப்படியே நின்று, மூடு மாறி, அந்தப் புல்லுக்கட்டுகளைச் சாப்பிட ஆரம்பித்துவிட்டது.

அந்தச் சின்னப் பையனும் காளையைத் தடவிக்கொண்டே வருகிறான். காளையும் குழந்தை மாதிரி அடக்கமாகப் பக்கத்தில் நடந்து வருகிறது. பக்கத்தில் இருக்கும் வயல்வெளியில் அந்தக் காளையை மேய விட்டுவிட்டு அவன் திரும்பி வருகிறான். மக்கள் எல்லோரும் ஆச்சரியத்தோடு அந்தப் பையனைப் பார்க்கிறார்கள். அடிபட்டுக் கிடந்த அந்த அனுபவசாலிகள் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு நிற்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் பேசிய பேச்சு “வாய் இருக்கு என்பதற்காக” நக்கல், நையாண்டியாக நசநசவென்று பேசியதற்கு இப்போது என்ன செய்வது? தலைகுனிந்து நின்றுகொண்டிருக்கிறார்கள்.

ADVERTISEMENT

அப்போது ஒரு பெரியவர் வந்து, “எப்படிப்பா, இப்படி ஒரு முரட்டுக் காளையை அடக்கினாய்?” கேட்டார்
“ஐயா, எனக்கு அந்தக் காளை கோபமா இருக்குற மாதிரி தெரியல. அது பசியோடு இருக்குற மாதிரிதான் தெரிஞ்சுது. அதனாலதான் புல்லுக்கட்டை காட்டின உடனே, ‘ஓகே, நமக்கு தேவையானது கிடைச்சுடுச்சு’ன்னு நினைச்சு, நம்மோடு ஜாலியா வாக்கிங் வந்துடுச்சு.”

இதைக் கேட்ட பெரியவர் சொன்னார்.. “சின்னவர்கள், பெரியவர்கள், அனுபவம் உள்ளவர்கள், அனுபவம் இல்லாதவர்கள் – இதெல்லாம் விஷயமே இல்லை. யாராக இருந்தாலும், அந்தச் சூழலுக்கு ஏற்றவாறு என்ன செய்து பிரச்சினையைத் தீர்க்கிறான் என்பதுதான் விஷயம். அதுதான் மெயின் மேட்டர்.”

சோ, நீ சூப்பர்பா! என்ன பிராப்ளம் வந்தாலும் நீ சால்வ் பண்ணிருவே அப்படின்னு முதுகுல தட்டிக் கொடுத்துட்டு அந்தப் பெரியவர் போறாரு. இப்ப அந்தக் கதையில அந்த முரட்டு ஜல்லிக்கட்டு காளை தான் நம்ம தமிழ்நாட்டு அரசியல் களம். அந்தப் பெரியவர்தான் நம்ம தமிழக மக்கள். அந்தப் பாக்கெட் உள்ள ஸ்டைலா தில்லா கெத்தா ஒருத்தன் உள்ள வந்தான் பாருங்க. அவன்தான். நான் இல்லங்க. நான் இல்ல. நான், நீங்கள், நாம எல்லாருமா சேர்ந்து மாபெரும் மக்கள் சக்தியா இருக்கக்கூடிய நம்ம டிவி கே. அதுதான் அந்தச் சின்னப் பையன். என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share