திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுடன் நேற்று சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் கருத்து தெரிவித்துள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை திமுக கூட்டணியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னைக்கு நேற்று வந்த கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு பொறுப்பாளர் தியோ சிங் ஆகியோர் ஸ்டாலினை சந்தித்து பேசினர். இச்சந்திப்பின் போது, முதல்வர் ஸ்டாலினுடன் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி உடன் இருந்தார்.
இந்நிலையில் கேரளா மாநிலம் கொச்சியில் இன்று பிப்ரவரி 23-ந் தேதி கே.சி. வேணுகோபாலிடம் ஸ்டாலின் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “திமுக தலைவர் ஸ்டாலினுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவுக்காக காத்திருக்கிறோம். இதை நாங்கள் உங்களுக்கு பின்னர் தெரியப்படுத்துவோம்” என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் தியோ சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக மிக விரைவில் உங்களுக்கு முழுமையான விவரம் தெரியவரும். தேர்தலுக்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை, தி.மு.க- காங்கிரஸ் இடையேயான உறவு மிகவும் வலுவாக உள்ளது, இது காலம் கடந்தும் நீடிக்கும் உறவு.
கொள்கை- சித்தாந்த ரீதியாக மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையிலும் இரு கட்சிகளும் மிகவும் இணக்கமாக இருப்பதாகவே நான் கருதுகிறேன். இரு கட்சிகளிடையேயான உறவு என்பது அரசியல் உறவை விட குடும்ப உறவைப் போன்றது” என்றார்.
