வீட்டில் கணவனோ அல்லது மனைவியோ இப்படிச் சொல்வதைக் கேட்டிருக்கிறீர்களா? “எனக்கு வாஷிங் மெஷின்ல துணி போடத் தெரியாது… சாயம் போயிரும். நீயே போட்டுடு!” “பாத்திரம் கழுவினா எண்ணெய் பிசுக்கு போக மாட்டேங்குது… நீ கழுவினாதான் பளபளன்னு இருக்கு!” “கடைக்கு போய் என்ன வாங்கணும்னு எனக்குத் தெரியல… நீயே ஆர்டர் பண்ணிடு!”
இதைப் கேட்கும்போது, “பரவாயில்லை, என் துணை என்னை நம்புகிறார்,” என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், உளவியல் நிபுணர்கள் இதை ‘Weaponized Incompetence‘ (ஆயுதமாக்கப்படும் இயலாமை) என்கிறார்கள். அதாவது, ஒரு வேலையைச் செய்யத் தெரியும், ஆனால் தெரியாதது போலவோ அல்லது மோசமாகச் செய்தோ, அந்த வேலையில் இருந்து நிரந்தரமாகத் தப்பிப்பது.
இது ஏன் ஒரு பிரச்சனை? மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு சோம்பேறித்தனமாகத் தெரியும். ஆனால், இது ஒரு வகையான ‘உளவியல் தந்திரம்’ (Manipulation).
- பொறுப்பைத் தள்ளிவிடுதல்: “எனக்குத் தெரியாது” என்று சொல்வதன் மூலம், அந்தப் பொறுப்பு முழுவதுமாக மற்றவர் தலையில் விழுகிறது.
- மோசமாகச் செய்வது: உதாரணத்திற்கு, கணவரிடம் வீட்டைப் பெருக்கச் சொன்னால், வேண்டுமென்றே குப்பையை ஓரமாக ஒதுக்கி வைப்பார். அதைப் பார்க்கும் மனைவி, “இவருக்குச் சொல்லிக் கொடுப்பதற்கு நானே செய்துவிடுவேன்,” என்று வேலையை எடுத்துக்கொள்வார். இதுதான் அந்தத் தந்திரத்தின் வெற்றி!
உறவில் ஏற்படும் விரிசல்: இது தொடரும்போது, எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்யும் துணைக்குக் கடும் மனச்சோர்வு (Mental Load) ஏற்படும்.
- “நான் இவருக்கு அம்மாவா? இல்ல மனைவியா?” என்ற எரிச்சல் வரும்.
- ஒரு கட்டத்தில், இது காதலைக் கொன்று, வெறுப்பை வளர்க்கும். சமமான பங்களிப்பு இல்லாத இடத்தில் காதல் நிலைக்காது.
இதற்குத் தீர்வு என்ன? “பாவம் அவருக்குத் தெரியாது,” என்று நீங்களே எல்லா வேலையையும் செய்வதை முதலில் நிறுத்துங்கள்.
- பொறுமையை இழக்காதீர்கள்: அவர் பாத்திரத்தை எண்ணெய் பிசுக்குடன் கழுவினால், மீண்டும் கழுவச் சொல்லுங்கள். நீங்களே எடுத்துக் கழுவாதீர்கள்.
- தரத்தைக் குறையுங்கள் (Lower Standards): அவர் துணியை மடித்து வைக்கும் விதம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை. அவர் செய்ததே இருக்கட்டும். திருத்த முயற்சிக்காதீர்கள்.
- வெளிப்படையாகப் பேசுங்கள்: “நீ செய்வது எனக்கு உதவியாக இல்லை; எனக்குச் சுமையாக இருக்கிறது,” என்பதைத் தெளிவாகப் புரிய வையுங்கள்.
வீட்டு வேலை என்பது ஒருவரின் கடமை அல்ல; அது அந்த வீட்டில் வாழும் இருவரின் கூட்டுப் பொறுப்பு. “தெரியாது” என்று சொல்வது 2026-ல் ஒரு காரணமே இல்லை… யூடியூப் பார்த்தால் ராக்கெட் கூட விடலாம்!
