திராவிடத்திற்கு எதிரான பாஜகவும், திராவிடம் என்றால் என்ன என்று தெரியாத அதிமுகவும் தமிழ்நாட்டை மீண்டும் கபளீகரம் செய்ய பார்க்கிறார்கள். தமிழ்நாட்டை நாசப்படுத்த துடிக்கும் இத்தகைய கூட்டத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு இன்று (அக்டோபர் 4) நடைபெற்றது.
இதில் பங்கேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், “இந்த விழாவில் மானமிகு சுயமரியாதைக்காரன் என்ற உணர்வோடு பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சி திராவிடர் கழகம் என்றால், திராவிடர் கழகத்தின் நீட்சி தான் திமுக. பகுத்தறிவு சிந்தனை, சமூக நீதி சிந்தனைகள் உள்ளிட்டவை நாம் இன்று பாதுகாக்கிறோம் என்றால் சுயமரியாதை இயக்கம் இந்த மண்ணில் வேர் விட்டது தான் காரணம். இந்த கருப்புசட்டைக் காரர்கள் இந்த தமிழ்நாட்டின் காவலுக்கு சொந்தக்காரர்கள்.
மனமகிழ்ச்சி ஒன்றுதான் நான் அடையும் பலன் என்றார் தந்தை பெரியார். அந்த மனமகிழ்ச்சியுடன் போராட்ட வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் திராவிடர் கழகத்தினர் அனைவருக்கும் எனது சல்யூட்.
அதிலும் 92 வயதிலும் இளைஞர் போல ஓய்வின்றி ஆசிரியர் வீரமணி ஊர் ஊராக பரப்புரை செய்கிறார். அவரது உழைப்பை போற்றும் விதமாக அவருக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு வழங்கியது. பேராசிரியருக்கு பிறகு என்னை வழிநடத்துபவர் கி.வீரமணி. திமுக செல்ல வேண்டிய பாதையை பெரியார் திடல் என்று சொன்னேன்.
திராவிடர் கழகத்திற்கு எதிராக தொடங்கியது அல்ல திமுக. இதுகுறித்து அண்ணா கூறுகையில், ‘திமுக தோன்றியது திகவுக்கு எதிராக அல்ல. திராவிடத்தின் கொள்கையை மேலும் வலிமையாக்கவும், அரசியல் களத்தில் செயல்படுத்தவும் தோன்றியது தான்’ என்று சொன்னார்.
ஆசிரியர் வீரமணி 92 வயதிலும் தொடர்ந்து எழுதுகிறார். அவதூறுகளுக்கு பதிலடி தருகிறார். போராட்ட களங்களில் முதல் மனிதராக நிற்கிறார். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.
கலைஞரும் பேராசிரியரும் நிறைவுற்ற பின், என்னை வழிநடுத்தும் நல்லாசிரியர் இவர். கலைஞரையும், பெரியாரையும் கடந்த பெருவாழ்வை நீங்கள் வாழ வேண்டும். உங்களை ஓய்வெடுங்கள் என நான் சொல்லவில்லை, ‘மாறாக நாங்கள் இருக்கிறோம்… உங்கள் பணிச்சுமைகளை குறைத்துக் கொள்ளுங்கள்’ என்றே சொல்கிறேன்.
பெரியாரின் சிந்தனைகளை அவர் வாழும் காலத்திலேயே நிறைவேற்றியது திமுக. திருச்சியில் உருவாகும் பெரியார் உலகத்துக்கு திமுக சார்பில் எனது ஒரு மாத ஊதியத்தை கொடுக்க முடிவெடுத்தேன். இதுகுறித்து கட்சி தலைமை நிர்வாகிகளுடன் பகிர்ந்துகொண்டேன். அவர்கள், ’நீங்கள் அறிவியுங்கள். திமுகவின் 126 எம்.எல்.ஏக்கள், 31 எம்.பிக்களின் ஒருமாத ஊதியத்தையும் சேர்த்து ரூ.1.50 கோடியை மகிழ்ச்சியுடன் கொடுக்கிறோம்.
நம்மை பற்றி ‘இவர்கள் பவளவிழா கொண்டாடுகிறார்கள், நூற்றாண்டு விழா கொண்டாடுகிறார்கள். ஆனால் ஒன்று மாறவில்லையே’ எனக் கேட்கிறார்கள். அவர்கள் அக்கறையில் அல்ல, ஆணவத்தில் நம்மை நோக்கி கேள்வி கேட்கின்றனர்.
இந்த நூறு ஆண்டுகளில் நாம் மாற்றத்திக்கான விதைகளை தான் விதைத்திருக்கிறோம். பெரியாரோடு சுயமரியாதை இயக்கம் முடிந்துவிடும் என்றார்கள். ஆனால் அதன்பின்னர் அண்ணா, கலைஞர், அவர்கள் வரிசையில் மக்கள் ஆதரவுடன் நான் நிற்கிறேன்.
என்னைப்பற்றி பல வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதைப்பற்றி கவலையின்றி நான் எப்போதும் எனது செயல்களால் மட்டுமே பதிலடி கொடுக்கிறேன்.
சிலர் திமுகவை பிடிக்காது என்பார்கள். அதன்பொருள், அவர்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் படித்து ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் உருவாவது பிடிக்காது. சமத்துவம், சமூகநீதி பிடிக்காது. ஒற்றுமையாக இருப்பது பிடிக்காது. தமிழும் பிடிக்காது, தமிழர்களும் பிடிக்காது; நாம் தலைநிமிர்வதும் பிடிக்காது.
அறிவியலை பின்னுக்குத் தள்ளி பிற்போக்கு தனத்தையும், ஆதிக்கத்தையும் நிலைநிறுத்துவதற்கான சூழ்ச்சி நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது.
இதனை தடுத்து நிறுத்தும் அரண் தான் திராவிட மாடல். அவர்களுக்கு எரியட்டும் என்றுதான் நான் திரும்ப திரும்ப ‘திராவிடல் மாடல்’ என சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.
அடுத்த தேர்தல் தமிழர்களை தற்காக்கும் தேர்தல். திராவிடத்திற்கு எதிரான பாஜகவும், திராவிடம் என்றால் என்ன என்று தெரியாத அதிமுகவும் தமிழ்நாட்டை மீண்டும் கபளிகரம் செய்ய பார்க்கிறார்கள். தமிழ்நாட்டை நாசப்படுத்த துடிக்கும் இத்தகைய கூட்டத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும்.
எனவே 7வது முறையாக திமுக ஆட்சியில் அமர்ந்திட நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். அதற்கு இங்குள்ள கருஞ்சட்டை தோழர்கள் உறுதியேற்கும் இடம் தான் இந்த மாநாடு. தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்று உறுதியேற்போம்” என ஸ்டாலின் பேசினார்.