அதிமுக, பாஜகவை புறக்கணித்துவிட்டோம் : தவெக நிர்மல் குமார் பேட்டி!

Published On:

| By Kavi

2026 தேர்தல் என்பது  தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையிலானதுதான், இதில் பாஜக அதிமுகவை புறக்கணித்துவிட்டோம் என்று நிர்மல் குமார் கூறியுள்ளார். 

சேலம் மாவட்ட தவெக நிர்வாகிகள் கூட்டம் இன்று (பிப்ரவரி 13) சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலையில் உள்ள  தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது. 

ADVERTISEMENT

இந்த கூட்டத்தில் மயங்கி விழுந்து வடமாநில இளைஞர் சூரஜ் உயிரிழந்தார்.  இதுதொடர்பான கேள்விக்கு சேலம் மாவட்ட செயலாளர் பார்த்திபன் பதிலளிக்காமல் சென்றுவிட்டார். 

இந்தநிலையில்,  செய்தியாளர்களுடன் தவெகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். செய்தியாளர்கள் வாகனத்தின் மீது ஏறியும் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தவெகவினரின் வாகனத்தை செய்தியாளார்கள் முற்றுகையிட்டனர். 

ADVERTISEMENT

இதையடுத்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி போலீசார் அனுப்பி வைத்தனர். 

இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக மூத்த நிர்வாகி நிர்மல் குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

ADVERTISEMENT

இதற்கு அவர்,  “சேலத்தில் நிருபர்களுக்கும், தொண்டர்களுக்கும் இடையே ஒரு சிறிய மோதல் சம்பவங்கள் நடந்துள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.  இப்படியொரு சம்பவத்தை நாங்கள் நிச்சயம் விரும்பவில்லை. இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்வோம். பத்திரிகையாளர் சந்திப்பு இங்கு ஏற்பாடு செய்யப்பட்டதால், சேலத்தில் ஒரு சிறிய தவறான புரிதல் இருந்ததாக நான் நினைக்கிறேன். அந்த சம்வத்துக்காக நாங்கள் வருந்துகிறோம்” என்றார். 

மேலும் அவர்,  “தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு எங்களது பலம் பற்றி நன்கு தெரியும். கடந்த ஓராண்டாகவே எங்களுடன் கூட்டணி வைக்கச் சொல்லி அவர்கள் தொடர்ந்து அழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.  

தமிழகத்தின் அனைத்து பாஜக தலைவர்களும் ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பிலும் எங்களை தங்கள் கூட்டணியில் சேருமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர். ஏனென்றால் எங்களது பலம் அவர்களுக்குத் தெரியும். 

ஆனால் எங்கள் தலைவர் தெளிவாக கூறிவிட்டார்.  தமிழகத்தில் எங்களுக்கான போட்டி என்பது தவெக மற்றும் திமுக  ஆகிய இரு கட்சிகளுக்கு இடையேதான்.  மற்ற எந்தக் கட்சியும் போட்டியில் இல்லை.  மக்கள் ஏற்கனவே அவர்களை நிராகரித்துவிட்டார்கள். இந்தத் தேர்தல் நிச்சயமாக தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையிலானதுதான். இதில் அதிமுக  மற்றும் பாஜகவை நாங்கள் புறக்கணித்துவிட்டோம்” என்று கூறியுள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share