ADVERTISEMENT

விஜயைப் பார்க்கச் சென்ற வடமாநிலத் தொழிலாளி சுராஜி உயிரிழப்புக்கு காரணம் என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

சேலத்தில் விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற வடமாநிலத் தொழிலாளி சுராஜி ஹீட் ஸ்ட்ரோக் (Heatstroke) காரணமாக உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

சேலம் சீலநாயக்கன்பட்டியில் இன்று (பிப்ரவரி 13) தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளைச் சந்தித்து விஜய் பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு சுமார் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமானோர் விஜயைப் பார்க்கத் திரண்டிருந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், நடிகர் விஜயைப் பார்க்க வந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சுராஜி (35) என்ற தொழிலாளி விஜய் பேசிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், கடும் வெயில் மற்றும் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக மயக்கடைந்து அவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, சுராஜின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

உயிரிழந்த சுராஜிக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் வெள்ளிப் பட்டறையில் வேலை செய்து வந்துள்ளார். ஏற்கனவே உடல் நலக்குறைவு காரணமாக அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் உயிரிழந்த சுராஜியின் நண்பர் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவருக்கு எந்த உடல் நல பிரச்சனைகளும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

வடமாநிலத் தொழிலாளிக்கு எப்படி நுழைவுச் சீட்டு (பாஸ்) கிடைத்தது என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

ஏற்கனவே கரூரில் விஜய் கலந்துகொண்ட பரப்புரையின்போது 41 பேர் உயிரிழந்த நிலையில், இன்று (பிப்ரவரி 13) சேலத்தில் சுராஜி உயிரிழப்பு 42-ஆவது மரணமாகப் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து தவெக இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தனது எக்ஸ் பதிவில், “இன்று தவெக சார்பில் சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தைக் காண வந்த சுராஜி என்ற இளைஞர் திடீர் உடல்நலக்குறைவால் மயங்கி உள்ளார் அவருக்கு உடனடியாக முதலுதவி செய்யபட்டு கழக நிர்வாகிகள் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மாரடைப்பால் சூரஜ் மரணமடைந்தது வேதனை அளிக்கிறது.

இளைஞர் சுராஜின் இந்த எதிர்பாராத மரணத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேம்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share