வயநாடு நிலச்சரிவு : விசிக சார்பில் ரூ.15 லட்சம் நிதியுதவி!

Published On:

| By christopher

வயநாடு நிலச்சரிவை அடுத்து கேரளா மாநில அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூ.15 இலட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அக்கட்சி தலைவர் திருமாவளவன் இன்று (ஆகஸ்ட் 2) தெரிவித்துள்ளார். 

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடும் நிலச்சரிவு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை நிலவரப்படி 316 பேரின் சடலங்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டுள்ளனர். மேலும் நிலச்சரிவு முதலில் ஏற்பட்டதாக கூறப்படும் முண்டக்கை பகுதியில் தற்போது தான் முழுவீச்சில்  மீட்பு பணிகள் தொடர்ந்து வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துயரத்தை ஏற்படுத்தியுள்ள வயநாடு நிலச்சரிவைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும், திரைபிரபலங்களும் கேரளா மாநில அரசுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் கேரளா மாநில அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூ.15 இலட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று அறிவித்துள்ளார்.

தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, “கேரள மாநிலத்தில் நடந்துள்ள நிலச்சரிவுப் பேரிடரால் 200க்கும் மேற்பட்டோர் உயிருடன் புதையும் பெருந்துயர் நடந்துள்ளது. குடும்பம் குடும்பமாகப் பலியாகியுள்ளனர். புதையுண்டு பலியானோரின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டு வருகின்றன. புதையுண்ட பலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.

இப்பேரிடரை “தேசியப் பேரிடராக” அறிவிக்க வேண்டுமென இந்திய ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

அதன்படி பாதிக்கப்பட்ட பகுதியில் எஞ்சியுள்ளோரின் ‘மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமானம்’ ஆகியவற்றுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம். இப்பேரிடரை எதிர்கொள்ளும் கேரள மாநில அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூ.15 இலட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்” என அதில் குறிப்பிட்டுள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர்  ஜெமா

கலைஞர் நினைவு தினம்: ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

திருச்சி, நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில்… டைமிங் என்ன தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share