டித்வா புயல் காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் சென்னைக்கு நீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துர் வட்டத்தில் அமைந்துள்ளது.
ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24,00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும்.
இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், “இந்திய வானில மையம் தற்பொழுது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்த முன்னறிவிப்புகள் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் 28.112025, 29.11.2025 மற்றும் 30.112025 ஆகிய நாட்களில் சென்னை குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கங்களின் நீர் பிடிப்பு பகுதியில் மழையின் அளவு கூடுதலாக இருக்கும் எதிர்பார்க்கப்படுவதாலும் முன்னெச்சரிக்கையாக நீர்த்தேக்கங்களின் தற்போதைய கொள்ளளவை குறைக்கும் நடவடிக்கையாக (Pre Empty) ஏரியிலிருந்து 29.11.2025 நண்பகல் 12.00 மணி அளவில் வினாடிக்கு 1200 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக இன்று பிற்பகல் 2 மணி அளவில் வினாடிக்கு 2000 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நீர் வெளியேற்றம் படிப்படியாக காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் புயலின் நகர்வினை பொறுத்து அதிகரிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோன்று புழல் ஏரியில் உபரி நீர் திறப்பு 1,000 கனஅடியில் இருந்து 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் உபரி நீர் திறப்பு 3000 கன அடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
