கோவையில் 13 வீடுகளில் கொள்ளையடித்த கொள்ளையர்களை போலீசார் சுட்டு பிடித்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டம்பாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 1800 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் அரசு ஊழியர்கள்.
இந்த குடியிருப்பில் பூட்டி இருந்த வீடுகளை குறிவைத்து நேற்று கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
முதலில் அந்த குடியிருப்பை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்கள் வீட்டில் இருந்த நகை பணம் எல்லாம் கொள்ளையடித்திருப்பதாக கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் கவுண்டம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விசாரணை மேற்கொண்ட போது பல்வேறு வீடுகளிலும் நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.
அதாவது ஏ பிளாக்கில் உள்ள மூன்று வீடுகளிலும், சி3 பிளாக்கில் உள்ள 10 வீடுகளிலும் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது.
சுமார் 56 பவுன் நகை, 3 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் வெள்ளி நகைகள் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளனர்.
இதைத்தொடர்ந்து மூன்று காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மோப்ப நாய் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
குடியிருப்பு வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தேடுதல் வேட்டையில் இறங்கினர்
இதில், கொள்ளையர்கள் குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரம் அருகே உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த வீட்டை சுற்றி வளைத்து மூன்று பேரை துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.
அவர்களை பிடிக்க முயன்ற போது போலீசாரை கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பார்த்திபன் என்ற தலைமை காவலருக்கு கையில் காயம் ஏற்பட்டதால் தற்காப்புக்காக அவர்களை சுட்டு பிடித்ததாக கோவை போலீசார் கூறுகின்றனர்.
இந்த மூன்று பேரும் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், இவர்களது பெயர் ஆஷிக் (45), இர்ஃபான்(48), கலில் (60) என்பதும் தெரியவந்துள்ளது.
தற்போது இவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் தேவநாதன் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
ஒரே குடியிருப்பில் 13 வீடுகளில் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதும் கொள்ளையர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்ததும் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
