நீர் பாதுகாப்பு மற்றும் மக்கள் பங்களிப்புக்காக மத்திய அரசின் 3 விருதுகளை தமிழ்நாட்டின் கோவை, நாமக்கல், ராமநாதபுரம் மாவட்டங்கள் பெற்றுள்ளன.
நீர் பாதுகாப்பு மற்றும் மக்கள் பங்களிப்பு 1.0 முன்முயற்சியின் கீழ் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கான விருதுகளை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் இன்று (நவம்பர் 11) அறிவித்தது. முதல் முறையாக வழங்கப்படும் இவ்விருதுகளை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, டெல்லி விஞ்ஞான் பவனில் 18 அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்குகிறார். அப்போது 6-வது தேசிய நீர் விருதுகளையும் அவர் வழங்குகிறார்.
இந்த இயக்கம் 2024 செப்டம்பர் 06 அன்று குஜராத் மாநிலம் சூரத்தில் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் கீழ் மாநிலங்கள் ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. மாவட்டங்கள் செயற்கை முறையிலும், நீர் சேகரிப்பு முறையிலும் குறைந்தது 10,000 நீர் நிலைகளை அமைக்க ஊக்குவிக்கப்பட்டது. வடகிழக்கு பிராந்திய மற்றும் மலை மாநிலங்களில் உள்ள மாவட்டங்களுக்கு இந்த எண்ணிக்கை 3000 ஆகவும், நாடு முழுவதும் உள்ள நகராட்சிகளுக்கு 10,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
நகர்ப்புற நீர் பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்த வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஜல் சக்தி அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் குறைந்தது 2000 நீர்நிலைகள் கட்ட ஊக்குவிக்கப்பட்டது. இந்த ஆண்டு மொத்தம் 100 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதன்மையாக செயல்பட்டுள்ள 3 மாநிலங்களுக்கும், 67 மாவட்டங்களுக்கும், 6 நகராட்சிகளுக்கும், ஒரு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கும், 2 அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கும், 2 தொழில்துறையினருக்கும், 3 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், 2 கொடையாளர்களுக்கும், 14 பொறுப்பு அதிகாரிகளுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
3 தமிழக மாவட்டங்கள்
மாவட்டங்களின் அடிப்படையில் 3-வது வகைப்பிரிவில் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் 2-வது இடத்தையும், நாமக்கல் 10-வது இடத்தையும், ராமநாதபுரம் 13-வது இடத்தையும் பிடித்துள்ளது.
இதில் கோயம்புத்தூர் 28,147 பணிகளையும், நாமக்கல் 7,057 பணிகளையும், ராமநாதபுரம் 5,269 பணிகளையும் நிறைவு செய்துள்ளன. மாவட்டங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.
6-வது தேசிய நீர் விருதுகள்
2024-ம் ஆண்டுக்கான தேசிய நீர் விருதுகள், சிறந்த மாநிலம், சிறந்த மாவட்டம், சிறந்த ஊராட்சி, சிறந்த உள்ளாட்சி அமைப்பு, சிறந்த பள்ளி அல்லது கல்லூரி, சிறந்த தொழிற்சாலை, சிறந்த நீர்நிலைப் பயன்பாட்டாளர் சங்கம், சிறந்த நிறுவனம் (பள்ளி அல்லது கல்லூரி அல்லாத), சிறந்த சிவில் சமூகம், சிறந்த தனிநபர் என பத்து வகைகளில் வழங்கப்படுகின்றன.
சிறந்த மாநிலம் என்ற வகையில், மகாராஷ்டிரா முதல் பரிசையும், குஜராத் இரண்டாம் பரிசையும், அரியானா மூன்றாம் பரிசையும் பெறுகின்றன.
சிறந்த மாவட்டங்கள் பிரிவில்
- தமிழ்நாட்டின் திருநெல்வேலி
- சிறந்த கிராமங்கள் பிரிவில் திருவள்ளூர் மாவட்டம் பாலாபுரம்
- சிறந்த நீர் பயன்பாட்டாளர் சங்கம் பிரிவில் கோயம்புத்தூரில் உள்ள வேட்டைக்காரன்புதூர் ஓடையகுளம் கிராமம்
- சிறந்த தொழிற்சாலைப் பிரிவில் காஞ்சிபுரத்தில் உள்ள அப்போலோ டயர்ஸ் நிறுவனமும் விருது பெறுகின்றன.
விருது பெறும் ஒவ்வொருவருக்கும் பாராட்டுப் பத்திரமும், கோப்பையும் குறிப்பிட்ட வகைமைக்கு ஏற்ப ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.
