காஸா மீது இதுவரை குண்டுவீசி இஸ்ரேல் ராணுவம் கொன்ற 18,500 பாலஸ்தீன குழந்தைகளின் பெயர் பட்டியலை வாஷிங்டன் போஸ்ட் இன்று (ஆகஸ்ட் 1) வெளியிட்டது. இது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக தற்போது வரை காசாவில் தொடர்ச்சியான வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

காசா சுகாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, 2023 அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய இந்தப் போரில் இதுவரை 60,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் கிட்டத்தட்ட 30 சதகிவிதம் குழந்தைகள் என்பது மனதை உலுக்கும் உண்மை. இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் உலக நாடுகள் இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும் வலியுறுத்தி வருகின்றன.

இதுவரை 1,47,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் 1,000க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி மாயமானவர்களாகக் கருதப்படுகின்றனர்.
போரின் விளைவாக, உணவு மற்றும் மருத்துவ உதவிகள் தடைபடுவதால், காசாவில் பஞ்சம் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை அமைப்புகள் இதை “உலகின் மிக மோசமான பசி நிலை” என காஸாவின் நிலைமையை சுட்டிக்காட்டியுள்ளன.
கொத்து கொத்தாக கொல்லப்படும் பாலஸ்தீன குழந்தைகள்!
இந்த நிலையில் தான் அமெரிக்காவின் புகழ்பெற்ற வாஷிங்டன் போஸ்ட் இதழ், இஸ்ரேல் – பாலஸ்தீன் போரில் கொல்லப்பட்ட 18,500 பாலஸ்தீனியக் குழந்தைகளின் பெயர்களை வெளியிட்டுள்ளது. இந்தக் குழந்தைகள் பலர் தங்கள் வீடுகளில் அல்லது விளையாடும்போது கொல்லப்பட்டனர் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
யூனிசெஃப் (UNICEF) அமைப்பு, “காசா, குழந்தைகளுக்கு உலகின் மிக ஆபத்தான இடம்” என்று கூறியுள்ளது. இந்த வெளியீடு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து, போரின் மனிதாபிமான அழிவை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
உலக அரங்கில், ஜி7 நாடுகள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இஸ்ரேலுக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. அவர்கள் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி, ஹமாஸ் தாக்குதல்களை கண்டித்துள்ளனர். அதேசமயம் காசாவில் உதவிகள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
ஜனவரி 2025இல் G7 தலைவர்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஆதரித்தனர். ஆனால் அதையும் மீறி இஸ்ரேல் அவ்வப்போது காசா மீது கண்மூடித்தனமான கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது.
குறிப்பாக உணவுக்காக கையேந்தி நிற்கும் கூட்டத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல், மருத்துவமனைகள், முகாம்கள் மீது குண்டுவீச்சு என இஸ்ரேல் ராணுவம் தனது ’பயங்கரவாத’ தாக்குதலை அரங்கேற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் செப்டம்பர் 2025இல் ஐ.நா. பொதுச் சபையில் பாலஸ்தீனை ஒரு தனி நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளார். இது ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய நாட்டின் முடிவாகக் கருதப்படுகிறது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்து, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளும் இதே கருத்தை வெளிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.