கர்நாடகா மாநிலத்தில் பணிப் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் பாஜக கூட்டணியில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (Karnataka Prajwal Revanna), குற்றவாளி என அம்மாநில சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை கேட்ட போது நீதிமன்றத்தில் பிரஜ்வல் ரேவண்ணா கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா, தற்போது எம.எல்.ஏ.வாக இருக்கிறார். இவரது சகோதரர்தான் மத்திய அமைச்சர் குமாரசாமி.
ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா, ஹாசன் தொகுதி எம்பியாக இருந்தார். 2024-ம் ஆண்டு ஹாசனில் மீண்டும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள் ஹாசன் தொகுதி முழுவதும் கசியவிடப்பட்டன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவரது வீட்டில் பணிபுரிந்த பெண் ஒருவர் ரேவண்ணா மீது பலாத்கார புகார் கொடுத்தார். இந்த புகார் தொடர்பாக கர்நாடகா போலீசார் விசாரணை நடத்திய நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு தப்பி ஜெர்மனுக்கு ஓடிவிட்டார்.
பின்னர் ஜெர்மனியில் இருந்து திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணா, கைது செய்யப்பட்டார். ரேவண்ணா மீதான பாலியல் பலாத்கார வழக்கை எம்பி, எம்.எல்.ஏ.க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. கடந்த 14 மாதங்களாக நடைபெற்ற இந்த வழக்கில் இன்று ஆகஸ்ட் 1-ந் தேதி பிரஜ்வல் ரேவண்ணா ‘குற்றவாளி’என நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை கேட்டதும் நீதிமன்றத்தில் ஆவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இவ்வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கான தண்டனை விவரங்கள் நாளை ஆகஸ்ட் 2-ந் தேதி அறிவிக்கப்படும்.
