தாய்லாந்து- கம்போடியா நாடுகளிடையே 6 இடங்களில் கடுமையான யுத்தம் நடைபெறுவதாகவும் எல்லை கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. Thailand Combodia
தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து – கம்போடியா இடையேயான எல்லை தகராறு நூற்றாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

மோதல் வெடித்தது ஏன்?
தாய்லாந்து எல்லையில் உள்ள டா மோன் தோம் -Ta Moan Thom ஆலயத்துக்கு அருகே கம்போடியா ராணுவம் முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியது என்பது அந்நாட்டு ராணுவத்தின் குற்றச்சாட்டு. அத்துடன் கம்போடியாதான் எல்லையில் ராணுவக் குவிப்பை அதிகப்படுத்தியது என்கிறது தாய்லாந்து. மேலும் கம்போடியாவின் கண்ணிவெடித் தாக்குதலில் 3 தாய்லாந்து வீரர்கள் படுகாயமடைந்தனர் என்றும் அந்நாட்டு ராணுவம் குற்றம் சாட்டியது.
ஆனால் தாய்லந்து ராணுவம்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது; தற்காப்புக்காகவே பதிலடி கொடுத்தோம் என்கிறது கம்போடியா.
தாய்லாந்து- கம்போடியா யுத்தம்- நடப்பது என்ன?
- தற்போது தாய்லாந்து நாட்டின் எல்லையில் 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் காலி செய்யப்பட்டுள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த 50,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
- கம்போடியா, தாய்லாந்து இரு நாடுகளுமே தங்களது தூதர்களை பாதுகாப்பாக திரும்ப அழைத்துக் கொண்டன. அதேபோல கம்போடியாவில் இருந்து தாய்லாந்து நாட்டு மக்கள் அனைவரும் உடனே வெளியேறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- சர்வதேச சட்டங்களின்படியே கம்போடியா செயல்பட வேண்டும் என்கிறார் தாய்லந்தின் தற்காலிகப் பிரதமர் பும்தாம் விசாயசாய்.
- தங்களது நாட்டின் இரு மாகாணங்களை தாய்லாந்து போர் விமானங்கள் மூர்க்கமாக தாக்கின என்கிறார் கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹுன் சென்.
- கம்போடியாவின் எல்லையில் தாய்லாந்து விமானப் படையின் எஃப்-16 ரக போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
- தாய்லாந்து- கம்போடியா இடையேயான அனைத்து எல்லைகளும் மூடப்பட்டுவிட்டன.
- இரு நாடுகளிடையே 6 இடங்களில் யுத்தம் நடைபெற்று வருகிறது
- தாய்லந்தின் சூரின் எல்லையில் கம்போடியாவின் ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
- கம்போடியா ராணுவம் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக குற்றம்சாட்டுகிறது தாய்லாந்து.
- தற்போதைய தகவல்களின்படி இருதரப்பிலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர்; 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
- தாய்லாந்தின் போர் விமானத்தை கம்போடியா சுட்டு வீழ்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.