தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக, சிறு பாத்திரங்களில் தலைகாட்டுபவராகத் திகழ்ந்தவர் விடிவி கணேஷ்.
சுதாகர், நீலகண்டன் கணேஷ் என்ற பெயர்களில் வலம் வந்தவருக்கு ‘விடிவி’ என்ற அடைமொழியைத் தந்தது கௌதம் வாசுதேவ் மேனனின் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படம்.
அதில் அவர் பேசிய ‘இங்க என்ன சொல்லுது’ வசனம் இன்று வரை ‘ட்ரெண்டிங்’கில் இருந்து வருகிறது. இளமைத் துடிப்பை வெளிக்காட்டுகிற நடுத்தர வயது மனிதரின் உடல் பாவனைகளோடு அவரது கரகரத்த குரலும் சேர்ந்தபோது ரசிகர்கள் துள்ளி மகிழ்ந்தனர்.
அதன்பிறகு கலகலப்பு 2, சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்தபோதும், அவரை மீண்டும் புகழ் வெளிச்சத்திற்கு இழுத்து வந்த படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கிய அந்தப் படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, டான்ஸ் கொரியோகிராஃபர் சதீஷ் கிருஷ்ணன் எனப் பலரையும் கலாய்த்து வசனம் பேசியிருப்பார் விடிவி கணேஷ்.
‘சாகப்போகிற நேரத்துலயும் இப்படி காமெடி பண்றியேடா. தெய்வீக குழந்தைடா நீ..’ என்று சதீஷை பார்த்துச் சொல்லிவிட்டு ‘த்தூ..’ என்று துப்புவதாக ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
அந்தக் காட்சியில் நடித்ததைப் பார்த்துவிட்டுத் தான் தனக்கு தெலுங்கு பட வாய்ப்புகள் வந்ததாகவும், அதற்காக விஜய்க்கு தான் நன்றி சொல்வதாகவும், சமீபத்தில் நடந்த ‘கிஸ்’ பட பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார் விடிவி கணேஷ்.
“லிப்ட்ல நடக்குற மாதிரி இருந்த அந்த சீன்ல எனக்கு வசனமே இல்லை. எனக்கு ஏதாவது வசனம் கொடுன்னு டைரக்டர் நெல்சன்கிட்ட கேட்டேன். உடனே, விஜய் சாரும் ‘இவருக்கு வசனம் கொடுப்பா’ன்னு சொன்னார். அதுக்கு, நீயே ஏதாவது பேசிக்கோன்னு நெல்சனும் சொன்னார்.
நானா எப்படி பேசுறது? அப்போதான் என் முன்னாடி இருந்த இந்த டான்சர்கிட்ட ‘நீ ஏதாவது சொல்லு, நான் அதுக்கு கவுண்டர் கொடுக்கறேன்’னு சொன்னேன். இந்த படத்துல தான் அவர் டைரக்டர். அப்போ, அவர் டான்ஸ் மாஸ்டர் தான்” என்று சொல்லிவிட்டு, தான் பேசிய வசனத்தைச் சொல்லிக் காட்டினார்.
ஒருமுறை விமானநிலையத்தில் ஒரு நபர் அந்த வசனத்திற்காகவே ‘பீஸ்ட்’ படத்தை 20 முறை பார்த்ததாகச் சொன்னதாகக் குறிப்பிட்டார் விடிவி கணேஷ்.
”குறிப்பாக, அந்த ‘த்தூ’ங்கற வார்த்தை தான் அவருக்கு ரொம்ப பிடிச்சுப் போனதா சொன்னார்” என்றார்.
2023இல் ‘பகவந்த் கேசரி’ படத்தில் பாலகிருஷ்ணா உடன் நடித்த விடிவி கணேஷ், பின்னர் ‘தி பேமிலி ஸ்டார்’, ‘பலே உன்னாடே’, ‘டாக்கு மஹாராஜ்’, சங்கராந்திக்கு வஸ்துனாம்’ என அரை டஜன் படங்களில் தலைகாட்டிவிட்டார்.
தற்போது சிரஞ்சீவி படம், நாகசைதன்யா படம், பூரி ஜெகன்னாத் – விஜய் சேதுபதி படம் என்று சுமார் பத்து தெலுங்கு படங்களில் நடித்து வருவதாக, அந்த விழாவில் பேசியபோது குறிப்பிட்டார் விடிவி கணேஷ்.
‘ஓவர் நைட்’ல ஸ்டார் ஆகிடுற மாதிரி, ஒரு வார்த்தையால பட வாய்ப்புகளும் வந்திடும் போல..!