விஷ்ணு விஷால் நடிப்பில் பிரவீன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கும் ஆர்யன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று (அக்டோபர் 23) நடைபெற்றது.
”ஒரு கேரக்டருக்கு அமீர்கானை நடிக்க அழைத்து அவர் வராததால் இயக்குனர் செல்வராகவனை நடிக்க வைத்தீர்களாமே?” என்று ஒரு நிருபர் கேட்க, அதிர்ந்தார் விஷ்ணு விஷால். சலனமில்லாமல் அமர்ந்து இருந்தார் செல்வராகவன்.
“அப்படி இல்ல.. அப்படி இல்ல… இந்தக் கேரக்டருக்கு செல்வராகவன் சாரை ஆரம்பத்திலேயே பிக்ஸ் செய்து விட்டோம்.
அந்த சமயத்தில் நானும் இயக்குனர் பிரவீனும் ஒரு வெப் சீரிஸ் விசயமாக மும்பை போனபோது அமீர்கானை சந்தித்தோம். என்ன படம் போகிறது என்று அவர் கேட்க, நான் இந்த ஆர்யன் கதையை சொன்னேன். உடனே அவர் ‘இந்தக் கதையில் இந்தியில் வில்லனாக நான் நடிக்கிறேன். நீங்களே ஹீரோவாக நடியுங்கள்’ என்றார்.
ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போக, இந்திப் படம் கை விடப்பட்டது. மற்றபடி ஆர்யன் தமிழ் படத்துக்கு செல்வராகவன் சார் தான் வில்லன் பிரம்மாதமாக நடித்துள்ளார் ” என்று சொல்லி முடிப்பதற்குள் அடுத்த கேள்வி!
”ஆர்யன் திராவிடத்துக்கு எதிரான படமா?”
” என் மகன் பேரு ஆர்யன். அதனால் படத்துக்கு அந்தப் பெயர் வைத்தேன். மற்றபடி இந்தப் பெயர் வச்சது கூட நான் இல்லை. எனது முதல் மனைவியும் என் மகனின் அம்மாவுமானவர்தான் (ரஜினி நடராஜ்) வைத்தார். எனக்கென்று சில கருத்துகள் இருக்கு. ஆனால் ஆர்யன் என்று பெயர் வைத்ததற்கு திராவிட எதிர்ப்பு எல்லாம் காரணமில்லை ” என்றார்.
தீபாவளி முடிந்தும் பட்டாசு முடியலையே !
