விஷால் படம் என்றாலே சண்டைக்கு காட்சிகளுக்கு பெரிய முக்கியத்துவம் இருக்கும். அவரது பலமும் அதுதான் பலவீனமும் அதுதான் .
சண்டை காட்சிகளில் விரும்பி நடிக்கும் அளவுக்கு அவர் நல்ல கதை திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பதில்லை . நல்ல கதையும் சண்டைக்கு காட்சிகளும் சேர்ந்து வரும் அவரது படங்கள் ஓடிவிடும் . அவர் கதையுடன் சண்டை போட்டு கதையையே தோற்கடிக்கும் படங்கள் ஓடுவது இல்லை.
அண்மையில் விஷாலுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது , பேச முடியாமல் நிற்க முடியாமல் உடல் நடுங்கி நின்றதைப் பார்த்த எல்லோரும் ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கு இந்த நிலைமையா என்று அதிர்ந்தார்கள். தன்ஷிகா உடனான திருமண அறிவிப்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூட விஷால் முழு உற்சாகமாக இல்லை.
எனினும் சண்டை என்று வந்து விட்டால் விஷால் உற்சாகமாகி விடுகிறார் (சினிமா சண்டை)
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இப்போது விஷால் இயக்கி நடிக்கும் படம் மகுடம் .
இந்தப் படத்துக்காக கடுமையான சண்டைக் காட்சிகளைக் கொண்ட கிளைமாக்சை 17 நாட்கள் தொடர்ந்து மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை 12 மணி நேரம் நடத்தி முடித்திருக்கிறார் விஷால்
இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில், நடிகர், நடிகைகள், நூற்றுக்கணக்கான ஸ்டண்ட், நடன கலைஞர்கள், கணினி கிராபிக்ஸ் வல்லுனர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி இருக்கிறார்கள்
ஸ்டண்ட் இயக்குநர் திலீப் சுப்பராயன், நடன இயக்குனர் அசார் ஆகியோர்கள் நிஜத்தன்மை நிரம்பிய, அதிரடி காட்சிகளை வடிவமைத்துள்ளார்களாம் .
பணியாற்றிய எல்லோரும் பாதுகாப்பாக இருந்தது சந்தோஷம். கதை திரைக்கதையும் படத்துக்குள் பாதுகாப்பா இருந்தா இன்னும் சந்தோஷம்
— ராஜ திருமகன்
