“ஃபார்ம் அவுட் ஆகிட்டாரு”, “வயசாகிடுச்சு, இனி அவ்வளவுதான்” என்று விமர்சித்தவர்களின் வாயை அடைக்கும் விதமாக, இந்திய அணியின் ‘ரன் மெஷின்’ விராட் கோலி மீண்டும் தனது விஸ்வரூபத்தை எடுத்துள்ளார். விமர்சனங்களை எல்லாம் பவுண்டரிகளாக மாற்றி, மைதானத்தில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறார் கிங் கோலி.
இன்று (டிசம்பர் 3, புதன்கிழமை) சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், கோலி தனது 53-வது ஒருநாள் சதத்தை விளாசி அசத்தியுள்ளார். ராஞ்சியில் நடந்த முதல் போட்டியில் சதம் அடித்த கையோடு, இந்த இரண்டாவது போட்டியிலும் சதம் (Consecutive Century) அடித்து, எதிரணியைப் பந்தாடிக் கொண்டிருக்கிறார்.
கிளாசிக் இன்னிங்ஸ்: ஆரம்பத்தில் நிதானமாகத் தொடங்கிய கோலி, நேரம் செல்லச் செல்லத் தனது டிரேட்மார்க் ஷாட்களை வெளிப்படுத்தினார். தென்னாப்பிரிக்கப் பந்துவீச்சாளர்களைத் திணறடித்து, 90 பந்துகளில் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். இதில் 7 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடக்கம்.
மைதானத்தில் ‘ரொமான்டிக்’ தருணம்: வழக்கமாகச் சதம் அடித்ததும் ஆக்ரோஷமாகக் கத்தும் விராட் கோலி, இன்று மிகவும் ‘கூலாக’த் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சதம் கடந்ததும் ஹெல்மெட்டைக் கழற்றிவிட்டு, வானத்தைப் பார்த்துவிட்டு, தனது கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியில் கோர்க்கப்பட்டிருந்த திருமண மோதிரத்தை எடுத்து முத்தமிட்டார். எப்போதுமே தனது வெற்றிகளை மனைவிக்குச் சமர்ப்பிக்கும் கோலி, இன்றும் மனைவியின் மீதான அன்பை வெளிப்படுத்திய இந்தக் காட்சி, இப்போது இணையத்தில் ‘செம்ம வைரல்’!
உருகிய அனுஷ்கா சர்மா: கணவர் மைதானத்தில் மோதிரத்தை முத்தமிட, வீட்டில் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்த மனைவி அனுஷ்கா சர்மா உருகிப் போய்விட்டார். டிவி திரையில் விராட் கோலி சதம் அடித்த தருணத்தைப் புகைப்படமாக எடுத்து, உடனே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, ஒரு ‘சிவப்பு ஹார்ட்’ (Red Heart) ஈமோஜியை மட்டும் போட்டுத் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். வார்த்தைகளே இல்லாமல் இருவரும் பரிமாறிக் கொண்ட அன்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இர்ஃபான் பதான் பாராட்டு: முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “ஞாயிற்றுக்கிழமை என்றால் கிங்(King) நிச்சயமாக விளையாடுவார்… ஆனால் வாரநாட்களில்(Weekdays) அவர் உங்கள் திட்டங்களோடு விளையாடுவார். என்ன ஒரு அற்புதமானசதம்!” என்று எதிரணிக்குச் சவால் விடும் வகையில் புகழ்ந்துள்ளார்.
ரேங்கிங்கில் முன்னேற்றம்: தொடர்ந்து இரண்டு சதங்கள் விளாசியதன் மூலம், ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் சுப்மன் கில்லை பின்னுக்குத் தள்ளி 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் கோலி (751 புள்ளிகள்). முதலிடத்தில் இருக்கும் ரோஹித் சர்மாவை நெருங்க இன்னும் 32 புள்ளிகள் தான் தேவை. இதே ஃபார்மில் தொடர்ந்தால், பாகிஸ்தானின் பாபர் அசாமை எல்லாம் பின்னுக்குத் தள்ளி, மீண்டும் நம்பர் 1 சிம்மாசனத்தில் கோலி அமர்வது உறுதி. கிங் ஈஸ் பேக்!
