கோத்தகிரி அருகே பாரஸ்ட் ஹில் பகுதியில் பூனையைப் பிடிக்க கேண்டீனுக்குள் நுழைந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் சிறுத்தைகள் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் செல்லப்பிராணிகளை வேட்டையாட வரும் சிறுத்தைகளால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள பாரஸ்ட் ஹில் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் எஸ்டேட் கேண்டினுக்குள் ஒருவர் இருக்கையில் அமர்ந்து தனது செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென டேபிளுக்கு அடியில் படுத்து இருந்த பூனை வேகமாக ஓடியது. இதையடுத்து கேன்டீனுக்குள் திடீரென சிறுத்தை சீறி பாய்ந்து பூனையை வேட்டையாட முயன்றது.
உடனே சிறுத்தையிடமிருந்து பூனை தப்பித்த நிலையில் கேண்டினுக்குள் அமர்ந்திருந்த நபர் சிறுத்தையை கண்டதும் மின்னல் வேகத்தில் ஓட்டம் பிடித்தார். இந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
நல்வாய்ப்பாக சிறுத்தையிடமிருந்து பூனையும், கேன்டினில் அமர்ந்திருந்த நபரும் உயிர் தப்பித்தனர்.