கோவை மாவட்டம் பல்லடம் பகுதியில் அமைக்கப்பட உள்ள புறவழிச்சாலைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 5 வருவாய் கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் NH-81 பல்லடம் புறவழிச்சாலை திட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பல்லடம் வட்டத்திற்கு உட்பட்ட செம்மிபாளையம், சுக்கம்பாளையம், பல்லடம், நாரணாபுரம் மதிப்பூர் ஆகிய 5 வருவாய் கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்கள் வழியாக 1.8 கி.மீ தூரத்திற்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் கண்டம் தெரிவித்து வருகின்றனர்.

70 மீட்டர் அகலத்திற்கு புறவழிச்சாலை அமைக்கப்படுவதால் வீடுகள், நிலங்கள் சிறு குறு தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இந்தத் திட்டத்தை ஊருக்கு வெளியில் 5 கிலோ மீட்டர் கடந்து அமல்படுத்தலாம்.
தற்போது உள்ள படி சாலை திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் 8 கோழி பண்ணைகள், 36 கிணறுகள், விவசாயம், தொழில் என அனைத்து பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதற்கான ஆயத்த பணிகள் துவங்கி உள்ள நிலையில் இன்று கோவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். முன்னதாக அத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி பாதைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.