தூத்துக்குடி ‘நிர்பயா’வுக்கு நீதி கிடைப்பதை அதிமுக உறுதி செய்யும்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

Published On:

| By Pandeeswari Gurusamy

eps

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க அதிமுக தொடர்ந்து போராடும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த 10-ஆம் தேதி மாலை இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது மாயமானார். உறவினர்கள் தேடிய நிலையில், நேற்று முன்தினம் முட்புதர் ஒன்றில் அச்சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
காவல்துறை மீது குற்றச்சாட்டு

சிறுமி காணாமல் போனது குறித்து புகார் அளிக்கச் சென்றபோது, விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீனா அலட்சியமாகச் செயல்பட்டதாக உறவினர்களும் கிராம மக்களும் குற்றம் சாட்டியுள்ளனர். காவல்துறையின் இந்த மெத்தனப் போக்கிற்கு எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில், “விளாத்திக்குளம் வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை – கொலை நாட்டையே உலுக்கியுள்ளது.

ADVERTISEMENT

பாதிக்கப்பட்டு உயிரிழந்த அச்சிறுமியின் குரலாக நீதிகேட்டு பாராளுமன்றம் முதல் நீதிமன்றம் வரை ஒலித்து வருகிறது அதிமுக.

களத்தில் உறவினர்கள் – ஊர்மக்கள் போராட்டமும் வலுப்பெற்று வருகிறது. திமுக அரசின் சாக்கு போக்குகளை நம்பத் தயாராக இல்லை என்பதற்கு, பொம்மை முதல்வரின் தங்கையும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழியை மக்கள் விரட்டி அனுப்பியதே சாட்சி!

ADVERTISEMENT

இவ்வளவு கொடூரமான வழக்கில் குற்றவாளியைக் கண்டறிய முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய கேவலம் மு.க.ஸ்டாலின் அவர்களே?

காவல்துறை சிஸ்டத்தை நீங்கள் எந்த அளவிற்கு சீரழித்து உள்ளீர்கள் என்பது இப்போதாவது உங்களுக்குப் புரிகிறதா?

இது இத்தோடு நிற்கப் போவது இல்லை. வரும் 17.03.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று தமிழகப் பெண்களின் பாதுகாப்பை நிர்கதியாக்கிய உங்கள் அரசுக்கு முடிவுரை கட்டப் போகும் மாபெரும் போராட்டத்தின் மூலம் வருவாய் மாவட்ட வாரியாக மக்கள் மன்றத்தில் களம் காண உள்ளது அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி.

தூத்துக்குடி Nirbhaya-விற்கு உரிய நீதி கிடைப்பதை அஇஅதிமுக உறுதி செய்யும்!

விரைவில் அமையப்போகும் அதிமுக அரசு, எப்படி ஜெயலிலிதா தாய் போல பெண்களைக் காத்தார்களோ, அதேபோல, ஒரு தமையனாக நின்று தமிழகப் பெண்களை அரண் போல் காக்கும்” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share