கரூர் கொடுந்துயர சம்பவத்தில் விஜய் மீது தவறு இருக்கிறது என்று அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் சொன்னால் தமிழ்நாடு அரசின் காவல்துறை நடிகர் விஜய்யை கைது செய்யும் என்று டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கரூரில் நடிகர் விஜய் கலந்து கொண்ட தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக மாவட்டச் செயலாளர் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் இருவர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு விஜய் மீது வழக்கு பதிவு செய்ய அஞ்சுகிறதா என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதைத்தொடர்ந்து திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் பேசுகையில், “கரூர் நெரிசல் சம்பவத்தை பொறுத்தவரை, புஸ்ஸி ஆனந்த் அங்கேயே இருந்து அந்த நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார். விஜய் அந்த நிகழ்ச்சிக்காத்தான் வருகிறார். அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது வழக்கு செய்வதுதான் முறை என்ற அடிப்படையில் அதை செய்துள்ளனர்.
ஒரு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையம் முழு விசாரணை செய்து வழங்கும் அறிக்கை அடிப்படையில் இதற்கு மேற்படி நடவடிக்கைகள் அமையும். என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் “இந்த விஷயத்தில் வெளிப்படையாக பாஜகவே தங்களை வெளிப்படுத்திக் கொண்டார்கள். உடனடியாக ஒரு எம்பிக்கள் குழுவை அனுப்பினர். அந்த குழு இங்கு வந்து விசாரிக்கிறது. இது போன்ற எம்பிக்கள் குழுவை மணிப்பூருக்கு அனுப்பினார்களா? அவர்கள் ஆட்சி நடக்கும் மணிப்பூருக்கு பிரதமரோ, உள்துறை அமைச்சரோ சென்று விசாரித்தார்களா.. இன்று வரை போகவில்லை என்பது நமக்கு தெரியும்.. இப்படி எம்பிக்கள் குழுவை அனுப்பியதன் மூலம் நாங்கள் தான் விஜய்யை இயக்குபவர்கள் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் பொருள்” என்றார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வீடியோவில் விஜய் முன் வைத்த தமிழக முதல்வர் மீதான விமர்சனம் குறித்து பேசுகையில், ”12 மணிக்கு அங்கு வருவதாக சொன்னவர் ஏன் 8 மணிக்கு வந்தார் என்ற கேள்விக்கு இதுவரை அவர் பதில் சொல்லவில்லை. முதலில் அவர் அதற்கான பதிலை சொல்லட்டும். விசாரணை ஆணையம் என்ன முடிவெடுக்கிறது என்று பார்க்கலாம். விசாரணை ஆணையம் விஜய் மீது தவறு இருக்கிறது. அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று சொன்னால் தமிழக அரசின் காவல்துறை அந்த கடமையை செய்யும்” என்றார்.