கரூர் பெருந்துயர சம்பவத்தில் விஜய் மீது வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசு அச்சப்படுகிறதா என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று (அக்டோபர் 2) கேள்வி எழுப்பி உள்ளார்.
கரூரில் நடிகர் விஜய் கலந்து கொண்ட தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக மாவட்டச் செயலாளர் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் இருவரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் அக்கட்சியின் கட்சியின் தலைவர் நடிகர் விஜய், ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு பதிவு செய்யப்படாதது ஏன் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “கரூர் சம்பவத்தில் தமிழ்நாடு காவல்துறை காட்டும் மெத்தனம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சம்பவத்தில் விஜய் மீது ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை? புஸ்ஸி ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்வதற்கு என்ன முகாந்திரம் இருக்கிறது.. அந்த முகாந்திரம் விஜய்க்கு இல்லையா? புஸ்ஸி ஆனந்த் உடன் இருக்கும் மற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் போது அருண்ராஜ் என்பவர் மீது ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.. ஆதவ் அர்ஜுனா மீது ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை?
தமிழ்நாடு அரசு அச்சப்படுகிறதா? தமிழ்நாடு காவல்துறை அச்சப்படுகிறதா அல்லது வலுத்தவர்கள் மீது வழக்கு போடுவது இல்லை.. இளைத்தவர்கள் மீது தான் வழக்கு போடுவது என்ற நடைமுறை கையாளப்படுகிறதா?
கடந்த 20 வருடங்களுக்கு முன்னால் நான் நயினார் பாளையம் என்ற இடத்தில் பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது புதுச்சேரி பக்கத்தில் நடந்த ஒரு சம்பவத்திற்கு அன்றைய விழுப்புரம் எஸ்.பி.ரவி, என் மீது வழக்கு பதிவு செய்தார். எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. எனக்கு தெரியாத ஒரு நிகழ்வு. என் கட்சிக்காரர்கள் ஏதோ ஒரு சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள் என்றவுடன் சம்பந்தமே இல்லாத என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுபோல் பல வழக்குகள் என் மீது எந்த தொடர்பும் இல்லாத நிலையில் போடப்பட்டது.
கரூர் சம்பவத்தில் காவல்துறையின் இந்த அணுகுமுறை ஏற்புடையது அல்ல. எதற்காக அச்சப்படுகிறார்கள்? யாருக்காக அச்சப்படுகிறார்கள்? எல்லோரும் சமம் என்று பார்க்கிற போது அந்த கட்சியில் சம்பந்தப்பட்டவர்கள், காரணமாக இருந்தவர்கள் அல்லது அலட்சியமாக இருந்து இந்த உயிரிழப்புக்கு காரணமான நிலைப்பாடுகளை எடுத்தவர்கள், வேண்டுமென்றே காலதாமதம் செய்தவர்கள் என்கின்ற வரிசையில் நடிகர் விஜய்யும் தானே வருகிறார். அவர் மீது வழக்கு தொடுப்பதற்கு தமிழ்நாடு அரசுக்கு என்ன தயக்கம்.. அச்சம்” என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
