ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் : எம்எல்ஏ பழனியாண்டி மீது வழக்குப் பதிவு செய்ய விஜய் வலியுறுத்தல்

Published On:

| By Pandeeswari Gurusamy

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வலியுறுத்தி உள்ளார். மேலும் தமிழ்நாடே பாதுகாப்பின்றிப் பதைபதைத்து இருக்கையில், தூக்கத்தில் இருக்கும் முதல்வரால் மக்கள் துயரத்தில் இருக்கின்றனர் என்றும் விமர்சித்துள்ளார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சிவாயம் கிராமத்தில் இயங்கும் கல் குவாரியில் சட்டவிரோதமாக கல்வெட்டுதல் சுற்றுச்சூழல் விதிமுறைகள் மீறல் போன்றவை குறித்து செய்தி சேகரிக்கச் சென்றவர்கள் மீது சுமார் 50 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதில் எம்எல்ஏ பழனியாண்டி கேமராவை பிடுங்கி செய்தியாளர்களை தாக்குவது போன்ற காட்சிகள் வெளியாகி உள்ளது இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

ADVERTISEMENT

தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பதிவில், “ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது.

குவாரி தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24X7 செய்தித் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கொடூரமாகத் தாக்குதல் நடத்திய வீடியோ, அண்மையில் வெளியானது. அதற்குப் பிறகும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்க்கும் நிலையில்தான் முதல்வர் இருக்கிறார் என்பது வெட்கக் கேடானது.

ADVERTISEMENT

பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, பொதுவெளியில் இவ்வளவு மோசமாகச் செயல்படுவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்றாகும்.

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உரிய நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

தமிழ்நாடே பாதுகாப்பின்றிப் பதைபதைத்து இருக்கையில், தூக்கத்தில் இருக்கும் முதல்வரால் மக்கள் துயரத்தில் இருக்கின்றனர். இப்படிப்பட்ட ஆட்சியை மக்கள், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறிவது உறுதி! உறுதி! உறுதி!” என குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share