கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பது தொடர்பாக மா.செ.க்களுடன் தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. திமுக, அதிமுக என முக்கிய கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன.
ஆனால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சியான நடிகர் விஜய்யின் தவெக இன்னும் யாருடனும் கூட்டணி அமைக்கவில்லை.
காங்கிரஸ் தவெகவுடன் செல்லும் என்று கூறப்பட்ட நிலையில் திமுகவுடனான கூட்டணியை உறுதி செய்தது.
இந்தசூழலில் தவெகவுடன் மீண்டும் என்.டி.ஏ தலைமை பேசி வருகிறது. ‘ரெண்டரை வருஷம் நீங்க சிஎம்.. எடப்பாடி ரெண்டரை வருஷம் சிம்”னு விஜய்யிடம் டீல் பேசியிருக்கிறார்கள். இதுபற்றி மின்னம்பலத்தில் திடீர் திருப்பம்…ஆளுக்கு இரண்டரை வருடம்…விஜய் – எடப்பாடியிடம் டீல் பேசும் அமித்ஷா -பவன் கல்யாண் என்ற தலைப்பில் வெளியான டிஜிட்டல் திண்ணையில் கூறியிருந்தோம்.
இதற்கு விஜய் ரியாக்ஷன் என்ன? எடப்பாடி ரியாக்ஷன் என்ன? என்பது குறித்து ‘YES’ சொன்ன விஜய்.. ‘NO’ சொன்ன எடப்பாடி.. திணறும் அமித்ஷா என்ற தலைப்பில் வெளியான டிஜிட்டல் திண்ணையில் சொல்லியிருந்தோம்.
தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட இன்னும் ஒரு சில தினங்களே இருக்கும் நிலையில் யாருடன் கூட்டணி என்பது தொடர்பாக இன்று (மார்ச் 13) தவெக தலைமை ஆலோசனையில் ஈடுபட்டது.
காணொளி காட்சி வாயிலாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், 132 மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசனை செய்துள்ளார்.

இதுதொடர்பாக கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட செயலாளர்களிடம் நாம் கேட்டபோது, ‘கூட்டணி யாரோடு வைக்கலாம்… கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கலாமா… அல்லது தனித்து நிற்கலாமா என பொதுச்செயலாளர் கேட்டார். இதற்கு பெரும்பாலான மா.செ.க்கள் கூட்டணியில் இருந்தால்தான் வெற்றி பெற முடியும்… தனித்து இருந்தால் வெற்றி பெறுவது கஷ்டம் என கூறினர். பொதுச்செயலாரும் கூட்டணி வைத்து போட்டிட விரும்புவது போலத்தான் தெரிகிறது. தளபதிகிட்ட பேசிவிட்டு நல்ல முடிவை எடுப்போம் என சொன்னார்’ என்றனர்.
வரும் மார்ச் 15ஆம் தேதி விஜய் கரூர் பெருந்துயரம் தொடர்பான விசாரணைக்கு டெல்லி சிபிஐ முன் ஆஜராக உள்ளார். அப்போது விஜய் பாஜகவினரை சந்திக்க வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள் தவெக வட்டாரத்தில்.
