தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மூன்றாவது சனிக்கிழமையான இன்று (செப்டம்பர் 27) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
இதையொட்டி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தார் விஜய். அங்கு தொட்டியம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரச்சார வாகனம் மூலம் நாமக்கல் வந்தடைந்தார்.

காலை 8.45 மணிக்கு கே.எஸ்.திரையரங்கம் முன்பு பிரச்சார உரையாற்ற விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தொண்டர்கள், ரசிகர்களின் கூட்டத்தால் விஜய்யின் பிரச்சார வாகனம் ஊர்ந்து வந்து கே.எஸ்.திரையரங்கம் பகுதிக்கு மதியம் 2.35 மணியளவில் தான் வந்தடைந்தது.
இதையடுத்து தொண்டர்களுக்கு மத்தியில் பேசிய விஜய், “லாரிகளுக்கு பாடி கட்டுவது தொடங்கி பல்வேறு தொழில்கள் நடக்கும் ஊர் நாமக்கல். அதுமட்டுமல்ல நாமக்கல்லை ‘முட்டை நகரம்’ (egg city) என்று கூட சொல்வார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு சத்தான உணவை கொடுக்கக்கூடிய ஊர் மட்டுமல்ல உணர்ச்சியை ஊட்டும் மண்தான் நாமக்கல்.
தமிழன் என்று சொல்லடா… தலை நிமிர்ந்து நில்லடா… நாடி நரம்பெல்லாம் ரத்தம் பாயுமளவுக்கு இந்த வரிகளை எழுதியது யாரென்று தெரியுமா… (விஜயகாந்த் என்று தொண்டர்கள் கத்த) விஜயகாந்த் சார் சொன்னாரு… ஆனால், கேப்டனுக்கு மட்டுமல்ல நமக்கும் சேர்த்து இந்த வரிகளை யார் எழுதியது தெரியுமா… நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மேகனூரில் பிறந்த நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை தான்.
தமிழ்நாட்டு மக்களுக்கு இட ஒதுக்கீடு உரிமையை வழங்கியதும் இதே நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருச்செங்கோடு பகுதியில் பிறந்த ஒருவர்தான்… நம்ம சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த சுப்புரையான் தான் அது.
தமிழ்நாட்டு மக்களுக்கு இட ஒதுக்கீட்டு உரிமையை வழங்கியதில் இவருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. கம்யூனல் ஜிஓ- 1071-ஐ கொண்டு வந்து பட்டியலின மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இதை வழங்கினார்.
முதல் தமிழர் முதல்வராக பொறுப்பேற்ற பெருமை கொண்ட அவருக்கு மணிமண்டபம் கட்டுவோம் என்று வாக்குறுதி 456ல் சொன்னது யாரு…
சொன்னாங்களே செஞ்சாங்களா… ஒரு படத்தில் வடிவேல் சார் எம்ட்டி பாக்கெட்டை எடுத்து காட்டுவார் தெரியுமா… அதுபோல ஒவ்வொரு வாக்குறுதியையும் படித்துவிட்டு எம்ட்டி பாக்கெட்டை காட்ட வேண்டியதுதான்.
நாமக்கல் மாவட்டத்துக்கு பல வாக்குறுதிகள் கொடுத்தார்கள்.
ஒவ்வொரு ஒன்றியத்திலும் தானிய சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும். இவை உலர் களங்களுடன் கூடிய கொள்முதல் நிலையங்களுடன் இணைக்கப்படும். கொப்புரை தேங்காயை அரசே கொள்முதல் செய்து அதிலிருந்து எடுக்கப்படும் தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடைகள் மூலம் விற்க நடவடிக்கை எடுக்கப்படும். நியாயவிலை கடைகளில் வெள்ளம், நாட்டு சர்க்கரை விற்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல போக்குவரத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்றெல்லாம் சொன்னார்களே செஞ்சாங்களா…
நாமக்கலில் நாளொன்றுக்கு 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இங்கு முட்டை வீணாகாமல் பாதுகாப்பாக வைக்க முட்டை சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும், பாக்டீரியா மற்றும் வைரலாஜிக்கல் பரிசோதனையை மேற்கொள்ள ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையும் பல ஆண்டுகளாக வைக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி இதுவரை ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை” என்று விமர்சித்தார்.