கடந்த ஆண்டு ஒரு கட்சியை அல்ல, புரட்சியை தொடங்கினார் நம் தலைவர் விஜய். இன்று கோடிக்கணக்கான மக்கள் படையே அவர் முன் நிற்கிறது என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசினார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் 2ஆம் மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் இன்று (ஆகஸ்ட் 21) நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் தவெக கட்சியின் பொதுச்செயலாளார் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், “ஓராண்டுக்கு முன்பு விக்கிரவாண்டியில் நம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடத்தினோம். அன்று நம் மனதில் இருந்த ஆசைகளை தலைவரோடு பகிர்ந்துகொண்டோம்.
நம் தலைவர் அன்று ஒரு கட்சியை அல்ல, புரட்சியை தொடங்கினார். இன்று கோடிக்கணக்கான மக்கள் படையே அவர் முன் நிற்கிறது. இதற்கு பெயர் தான் சத்தமின்றி சாதனை செய்வது.
மதுரை மண்ணில் நடைபெறும் இந்த இரண்டாம் மாநாட்டில் இத்தனை லட்சம் மக்களை பார்க்கும் போது ’வெற்றி நிச்சயம்’ என்று தோன்றுகிறது.
சிலர் வட தமிழ்நாட்டில் கூட்டம் வந்தது. தென் தமிழ்நாட்டில் கூட்டம் வருமா என கேள்வி எழுப்பினர்.
அவர்களிடம் நான் சொன்னது, “தம்பிகளா வருவது தாய்மார்களின் செல்லப்பிள்ளை. வேறு எந்த தலைவரையும் பார்க்க குடும்பம் குடும்பமாக கூட்டம் வராது. விஜய்யின் சிரித்த முகத்தை பார்க்கும்போதெல்லாம் என் நெஞ்சம் ஆனந்தமடைகிறது. இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.
இன்றைய மாநாடு அடுத்து நாம் செய்ய போகும் வேலைகளுக்கு வழிகாட்டியாக அமையும். வலுவான அடித்தளமாக அமையும். அவரது ஆணைகளை நிறைவேற்றுவோம். அவரை நாடாளும் முதலமைச்சர் ஆக்குவோம்” என புஸ்ஸி ஆனந்த் பேசினார்.
