ADVERTISEMENT

ஆட்சியை பிடிக்க முடியாதா? மாநாட்டில் விஜய் சூளுரை!

Published On:

| By Kavi

ஷூட்டிங்கில் இருந்து வந்து ஆட்சியை பிடிக்க முடியாது, விஜய் என்ன செய்ய போகிறார் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஆனால் கோட்டைக்கு போவது உறுதி என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

மதுரையில் தவெக மாநாட்டின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இதில் பேசிய அக்கட்சி தலைவர் விஜய், “விக்கிரவாண்டி வி.சாலையில் நடந்த கொள்கை திருவிழாவுக்கு பின்னர் தவெகவுக்கு எதிராக எத்தனை குரல்கள் எழுந்தன. ஆனால் எந்த குரலும் எனக்கு கேட்காது, மக்கள் குரல் மட்டுமே கேட்கும். அத்தனை கூக்குரல்களையும் சின்ன சிரிப்புடனே கடந்து வந்திருக்கிறோம்

அதுஇல்லாமல் இந்த மாநாட்டில் ஒலிக்கும் குரல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் குரல். சினிமா என்கிற மாபெரும் கலை ஆயுதத்தின் வாயிலாக சாதி, மதம், இனம், மொழி கடந்து இந்த நாட்டின் மூளை முடக்கெங்கிலும் ரசிகர்களாக இருந்து நம்முடன் பயணிக்க தொடங்கியுள்ள அனைவரோடும் இணைந்து ஒலிக்கும் உரிமை குரல்.

ADVERTISEMENT

இந்த குரலுக்கு எதிராக எத்தனை கூக்குரல் எழுந்தாலும் ஓங்கி ஒலிக்குமே தவிர ஒருநாளும் ஓயவே ஓயாது.

நான் அரசியலுக்கு வருவதற்கு முன் இவரெல்லாம் அரசியலுக்கு வரமாட்டார் என்றார்கள். கட்சி பெயர் அறிவித்த போது, பேருதானே அறிவித்திருக்கிறார் மக்களிடம் பேர் வாங்க வேண்டுமே என்றார்கள். ரொம்ப முக்கியமாக, மாநாடு… மாநாடெல்லாம் எவ்வளவு பெரிய விஷயம். ஒற்றை ஆளாக இவரால், புஸ்ஸி ஆனந்தை மட்டும் வைத்துக்கொண்டு மாநாடு நடத்த முடியுமா என்றார்கள்.

ADVERTISEMENT

மழை பெய்து மாநாட்டை கெடுத்துவிடும் என்றார்கள், ஏன் என் கூடவே இருந்தவர்கள் கூட சொன்னார்கள். இப்போது புதிதாக ஒன்றை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

அது என்னவென்றால் ஆட்சியை பிடிக்க முடியாது என்கிறார்கள். இவரு நேரா சூட்டிங்கில் இருந்து வருவாராம்… ஆட்சியை பிடிப்பாராம்… அது எப்படி முடியும். அவருக்கு அத்தனை வருஷம் ஆச்சு, இவருக்கு இத்தனை வருஷம் ஆச்சு என்று சொல்கிறார்கள்.

இன்னொரு பக்கம் கூட்டம் எல்லாம் ஓகேதான், அது எப்படி வோட்டா மாறும் என்று கேட்கிறார்கள். இப்படி கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த அரசியல் ஆய்வாளர்களுக்கு சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், இந்த விஜய் பல லட்சம் பேர் கூடிய கூட்டத்தில் மட்டுமே இருக்கிறார் என்று தப்பு கணக்கு போட்டுவிடாதீர்கள்.

இந்த கூட்டம் வெறும் வோட்டாக மட்டும் மாறாது. மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு நாம் வைக்க வேட்டாக, நம்மை கோட்டைக்கு அனுப்ப போற ரூட்டாக இருக்கும்.

கோடிக்கணக்கானவர்கள் இதயங்களில் நாம்,உயிராக, உறவாக இருக்கிறோம். தவெகவும் மக்களும் எப்படி இருக்கிறார்கள் என எதிரிகளுக்கு தெரியும்.

விஜய் புதிதாக என்ன திட்டம் கொண்டு வந்துவிட போகிறார் என்றும் கேட்கிறார்கள். சொல்கிறேன் தெரிந்துகொள்ளுங்கள்.

பெண் குழந்தைகள், பெண்கள், மற்றும் வயதானவர்களின் பாதுகாப்புதான் நமக்கு முதன்மையானது. அடுத்ததாக உழவர்கள், இளைஞர்கள், உழைப்பாளர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் என யாருக்கெல்லாம் அரசின் சிறப்பு கவனம் தேவையோ அவர்கள் எல்லாருக்கும் ஒரு அரசாங்கத்தை அமைப்பதுதான் நமது இலக்கே.

அரசியல் ஆதாயத்துக்காக தொடங்கப்பட்ட கட்சி அல்ல தவெக. பெரியார், காமராஜர், அம்பேத்கர், அஞ்சலை அம்மாள், வேலுநாச்சியார் ஆகிய கொள்கை தலைவர்களின் வழிகாட்டுதலோடு தொடங்கப்பட்ட கட்சி தவெக.

எங்களுடைய நிலைப்பாட்டில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நம்முடைய ஒரே கொள்கை எதிரி பாஜகதான், அரசியல் எதிரி திமுகதான்.

கீழ்மட்ட ஆதாயத்துக்காக டீல் போட்டுக்கொண்டு, கூட்டணி வைத்து கொண்டு ஊரை ஏமாற்றும் கட்சியெல்லாம் தவெக கிடையாது. மக்கள் அணி அணியாக நமக்காக திரண்டு நிற்கிற போது, அடிமை கூட்டணி நமக்கு எதற்கு? தவெக சுயமரியாதை கூட்டணியாக இருக்கும். ஒருபக்கம் ஆர்.எஸ்.எஸிடம் அடிபணிந்துகொண்டு, இன்னொரு பக்கம் மதச்சார்பற்ற கூட்டணி என சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றும் கூட்டணியாக நம்ம கூட்டணி இருக்காது. இப்போதும் சொல்கிறேன் நம்மை நம்பி வருகிறவர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கொடுக்கப்படும். 2026ல் தவெக மற்றும் திமுகவுக்கு இடையேதான் போட்டி இருக்கும்” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share