”உங்களின் இந்த அன்புக்காக, எவ்வளவு பெரிய உயரத்தையும், வசதியையும், வருமானத்தையும் தூக்கி எறிந்து வரலாம்” என தனக்காக நெடுநேரம் காத்திருந்த தனது நோக்கி விஜய் கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி இன்று (செப்டம்பர் 13) திருச்சியில் தனது முதல் பிரச்சார பயணத்தை தொடங்கினார் விஜய். அங்கு தொண்டர்கள் வெள்ளத்தில் விமான நிலையத்தில் இருந்து மெல்ல ஊர்ந்து வந்த அவரது பிரச்சார வாகனம் சுமார் 5 மணி நேர தாமத்திற்கு பிறகு மரக்கடை வந்தடைந்தது. அங்கு ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் குவிந்திருந்தாலும், மைக் பிரச்சனை காரணமாக விஜய்யால் சரியாக பேச முடியவில்லை.
இதனையடுத்து சற்று அதிருப்தியுடன் அங்கிருந்து புறப்பட்ட விஜய், 5 மணி நேர பயணத்துக்கு பிறகு இரவு 9 மணியளவில் அரியலூர் வந்தடைந்தார்.
அங்கு அவர் பேசுகையில், “திருச்சியில் மைக் பிரச்னை இருந்ததால் அங்கு பேசிய ஒரு விஷயத்தை மீண்டும் சொல்ல நினைக்கிறேன். அந்த காலத்தில் போருக்கு முன் குலதெய்வ கோயிலுக்கு செல்வது வழக்கம். அப்படி அடுத்த வருடம் நடக்க உள்ள ‘ஜனநாயக’ போருக்கு தயாராவதற்கு முன், மக்களாகிய உங்களை பார்த்து செல்ல வந்திருக்கிறேன்.
உங்களை இங்கு பார்க்கும்போது, உங்களோட இந்த அன்புக்காக, எவ்வளவு பெரிய உயரத்தையும், வசதியையும், வருமானத்தையும் தூக்கி எறிந்து வரலாம். உங்கள் அன்பு, பாசத்தைவிட உலகில் எனக்கு எதுவுமே பெரிதாக தெரியவில்லை. சாதாரணமாக இருந்த விஜய் இந்த உயரத்திற்கு கொண்டு வந்து, உங்கள் வீட்டில் ஒருவனாக, சொந்தக்காரனாக என்னை ஆக்கியுள்ளனர்.
என்னங்க பெரிய பணம்? போதும் என்ற அளவுக்கு பாத்தாச்சு… அரசியலுக்கு வந்துதான் நான் பணம் சம்பாதிக்க வேண்டுமா என்ன? அதற்கு கொஞ்சம் கூட அவசியமில்லை. எனக்கு எல்லாத்தையும் எல்லாமும் கொடுத்த உங்களுக்காக உழைப்பதைவிட வேற எந்த எண்ணமும், எந்த வேலையும் எனக்கு இல்லை.
’என்னடா இந்த விஜி (விஜய்) தனி ஆளாக இருப்பான் என பார்த்தால், எப்போதும் மக்கள் கடலோடு இருக்கிறானே’ என்று நம் எதிரிகளுக்கு தெரிந்துவிட்டதால், கண்ணாபின்னா என பேசுகிறார்கள். அதாவது நான் மரியாதையாக பேசினால்கூட தவறாக எடுத்துக்கொள்கிறார்கள். யார் என்ன சொன்னாலும், அறிஞர் அண்ணா சொன்னதுபோல ‘வாழ்க வசவாளர்கள்’ என சொல்லி சென்றுவிட வேண்டியதுதான்” என விஜய் பேசினார்.