கரூரில் 41 பேரை அடித்து மிதித்து கொலை செய்துள்ளனர். இதே போல, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யையும் அடித்து கொன்று விடுவார்கள் என்பதற்காகவும், அவரது உயிருக்கு உத்தரவாதம் தேவை எனவும் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர் என தமிழக பாஜக தலைவர் நயினார் நகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று திருநெல்வேலியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ”திமுகவின் நான்கரை ஆண்டு கால ஆட்சிக்கு எதிரான மனநிலை பொதுமக்களிடம் இருந்து வருகிறது. அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். மக்களாக ஒன்று சேர்ந்து ஆட்சி மாற்றத்தை கொண்டு வரப் போகிறார்கள்.. ஒரு குடையின் கீழ் பல கொடிகள் வர வேண்டும் என்பது எனது ஆசை. யார் பாதிக்கப்பட்டார்களோ அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது தான் திமுக அரசு வழக்கமாக வைத்துள்ளது. திமுக ஆட்சியில் 283 சதவீதம் போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளது. 55 சதவீதம் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகமாகியுள்ளது” என்று குற்றம் சாட்டினார்.
தேர்தல் ஆணையம் குறித்த கே.என்.நேரு விமர்சனம் குறித்த கேள்விக்கு, ”தேர்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்பு. ஐந்து ஆண்டுகள் முடிந்தால் தேர்தலை நிர்ணயம் செய்வது தான் வழக்கம். தேர்தல் தேதிக்கு பிரதமர் பஞ்சாங்கமா பார்க்க முடியும்? 5 ஆண்டுகால விதிப்படி ஏப்ரல் 10க்குள் தேர்தலை நடத்தித்தானே ஆக வேண்டும்” என்றார்.
கரூரில் விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பது குறித்த கேள்விக்கு, ”கரூருக்கு விஜய் சென்றிருந்ததால் அவரது உயிருக்கு யார் உத்தரவாதம் கொடுப்பது? கரூரில் 41 பேரை அடித்து மிதித்து கொலை செய்துள்ளனர். இதே போல, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யையும் அடுத்து கொன்று விடுவார்கள் என்பதற்காகவும், அவரது உயிருக்கு உத்தரவாதம் தேவை எனவும் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்” என தமிழக பாஜக தலைவர் நயினார் நகேந்திரன் தெரிவித்துள்ளார்.