”கரூர் துயர சம்பவத்திற்கு விஜயை மட்டும் கார்னர் செய்வது தவறு. விஜயை முதல் குற்றவாளி என்பதை ஏற்க முடியாது. திமுக அரசு தான் முதல் குற்றவாளி” என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கரூரில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களை அரசு மருத்துவமனையில் பார்த்த பிறகு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ”கரூர் துயரச்சம்பவத்தில் 40 அப்பாவிகளை பறிகொடுத்துள்ளோம். இன்னும் கவலைக்கிடமாய் சிலர் உள்ளனர். எங்கு பார்த்தாலும் அழுகுரல் மட்டுமே கேட்கிறது.
விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் இன்னும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. போன உயிர்கள் திரும்ப வரப்போவதில்லை. தமிழக அரசும், சம்பந்தப்பட்ட கட்சியினரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் இதற்கு முன் இப்படி நடந்ததில்லை. இனியும் நடக்கக்கூடாது.
இதை கருத்தில் கொண்டு கரூர் பாஜக சார்பில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் கொடுக்கப்படும். மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கும் உதவ தீர்மானித்துள்ளோம்.
தமிழ்நாட்டில் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு சரியான இடம் ஒதுக்கப்படுவதே இல்லை. சரியான அளவில் காவல்துறை பாதுகாப்பு கொடுக்கப்பட்டு கூட்டங்கள் கட்டுப்படுத்தப்படுவதும் இல்லை.
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள், மெரினா Airforce Show இறப்பு தொடங்கி, தற்போது கரூர் தவெக கூட்டநெரிசல் வரை பல இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவறு நடந்து கொண்டே உள்ளது.
அதனால் எங்கள் முதல் குற்றச்சாட்டு மாநில அரசு மீது வைக்கிறோம். முதல் தவறு மாவட்ட நிர்வாகம், காவலர்கள் மீதுதான். சரியான இடத்தை கொடுப்பது அரசின் கடமை. ஆனால் கட்சியினர் சரியான இடத்தை தேர்ந்தெடுக்கவில்லையென்றால் அனுமதியே கொடுக்காதீர்கள். அப்படி கொடுக்க வேண்டிய அவசியமில்லை. வேலுச்சாமிபுரத்தில் கூட்டம் நடத்த வாய்ப்பே இல்லை. முக்கியமான விவிஐபிக்கு அந்த இடத்தில் ஏதாவது நடந்தால் கூட அங்கு ஆம்புலன்ஸ் செல்ல வாய்ப்பே இல்லை. அது தெரிந்தபோதும் ஏன் அனுமதி கொடுக்கவேண்டும்?
தமிழக பொறுப்பு டிஜிபி 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்ததாக சொல்கிறார். உண்மையில் 500 பேர் எல்லாம் இல்லை. Striking Force, Guard, வண்டிக்குள் இருந்தவர்களெல்லாம் கணக்கில்லை. களத்தில் 100 பேர்கூட இல்லை. போக்குவரத்து காவலர்களோ, சட்டம் ஒழுங்கு காவலர்களோ போதுமான அளவு களத்தில் இல்லை. கூட்டம் வருமென தெரியும்… அது 10,000-ஓ 20,000-ஓ, 50,000-ஓ… விடுங்க… அதற்கேற்றபடி கீழே களத்தில் எத்தனை பேர் இருந்தனர்? 500 பேர் எனச் சொல்லி மழுப்புகின்றனர்.
இந்த துயர சம்பவத்திற்கு கரூர் மாவட்ட ஆட்சியர் மீதும், காவல் கண்காணிப்பாளர் மீதும் பம்மாத்துக் காட்டாமல் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் மற்ற மாவட்ட அதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.
தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்துவது எப்படி என்பதை இந்த 4 ஆண்டுகாலத்தில் திமுக எதையும் கற்றுக்கொள்ளவில்லை. இதற்கெல்லாம் பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும்.
கரூர் விவகாரத்தில் ஒரு நபர் ஆணையம் தேவையில்லை. சிபிஐ விசாரணைதான் வேண்டும்.
இந்தக் கூட்டத்தில் விஷக்கிருமிகள் யாரேனும் நுழைந்தார்களா? ஆம்புலன்ஸ் எதற்காக நுழைந்தது? மின்தடை எதற்கு ஏற்பட்டது? போலீசார் எதற்கு லத்தி சார்ஜ் செய்தனர்? இந்த எல்லா விஷயத்தையும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
ஒரு கூட்டத்தில் தங்கள் தலைவனை பார்க்க வரும் நபர்கள் தங்களது தலைவன் மீது செருப்பை வீச மாட்டார்கள். வெளி ஆட்கள்தான் இவ்வாறு செருப்பு வீசுவார்கள். எனவே இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும்.
கடைசியாக எங்கள் குற்றச்சாட்டு விஜய் மீது உள்ளது. ஒரு நடிகர் வருகிறார் என்றால் பெரம்பலூர், கரூர், திருவாரூருக்கு கிராமத்து மக்கள் அங்கு கூடத்தான் செய்வார்கள். ஒரு நடிகனை பார்க்க கிராம மக்கள் அதிகளவில் வருவார்கள்தான்.
அதுவும் மொத்த மாவட்டத்துக்கு ஒரேயொரு பாயிண்ட்டில்தான் அவர்களை சந்திக்கின்றீர்கள். பிற அரசியல் கட்சிகள், ஒரு மாவட்டத்துக்கு 5 பாயிண்ட் வைப்பார்கள் நீங்கள் ஒரேயொரு பாயிண்ட்டில், அதிலும் சனிக்கிழமை பார்த்து சந்திக்கும்போது, விடுமுறை தினமென ஆசையில் குழந்தைகளோடுதான் மக்கள் வருவார்கள். வார நாட்களில் இந்த கூட்டம் நடந்திருந்தால் மக்கள் யாரும் குழந்தைகளை கூட்டத்திற்கு அழைத்து வந்திருக்க மாட்டார்கள். விஜய் போன்றோர் இதை யோசித்து செயல்பட வேண்டும்.
எந்த ஒரு தலைவரும் தன்னை சந்திக்க வரும் மக்கள் இறக்க வேண்டும் என நினைக்க மாட்டார்கள். விஜயை பார்க்க பொது மக்களுக்கும், மக்களை சந்திக்க விஜய்க்கும் முழு உரிமையும் உள்ளது. இருப்பினும், நம்மால் இடையூறு உள்ளதா என விஜய் பார்க்க வேண்டும். ஒரு தலைவனாக விஜய் இதை உணர வேண்டும்.
கூட்டங்களை ஒருங்கிணைக்க தமிழக வெற்றி கழகத்தில் முறையான தலைவர்கள் இல்லை. அக்கட்சியில் தற்போதுதான் இரண்டாம் கட்ட தலைவர்கள் உருவாகி வருகின்றனர். அவர்களை தயார்படுத்த வேண்டுமென்பதை விஜய் உணர வேண்டும். அதுவரை Weekend, சனிக்கிழமை பயண வடிவத்தை விஜய் மாற்ற முயற்சி எடுக்க வேண்டும்.
சரியான இடத்தில் விஜய் கூட்டத்திற்கு அனுமதி தர வேண்டும். அதற்கு காவல்துறை பாதுகாப்பும் தர வேண்டும். இந்த விவகாரத்தில் விஜயை மட்டும் கார்னர் செய்வது தவறு. விஜயை முதல் குற்றவாளி என்பதை ஏற்க முடியாது. விடுமுறை நாளில் பிரச்சார கூட்டம் நடத்தியதை தவிர விஜய் வேறு எந்த தவறும் செய்யவில்லை. இந்த விவகாரத்தில் விஜய்க்கு சரியான இடத்தில் அனுமதி இல்லை. வந்த மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. திமுக அரசு ஒருதலைபட்சமாக நடந்துள்ளது. திமுக அரசு தான் இதில் முதல் குற்றவாளி. இதற்கு அரசு வெட்கி தலை குனிய வேண்டும்.
விஜய் இன்று பெரும் வருத்தத்தில் இருப்பார். நாம் எல்லோரும் சேர்ந்து அவரை கார்னர் செய்ய வேண்டாம். இதிலிருந்து அவர் மீண்டு வரவேண்டும் எல்லா மக்களுக்கும் ஆறுதலாக விஜய் இருக்க வேண்டும். அவர்கள் நிற்க ஆரம்பித்திருக்கிறார்.
இறுதியாக இது போன்ற பாதுகாப்பு இல்லாத இடத்திற்கு செல்வோர் உங்கள் குடும்பத்தை பற்றி யோசித்து பார்க்க வேண்டும்.
நாம் வளர்ந்த மாநிலம் என்கிறோம். ஆனால் நடவடிக்கை எல்லாம் அப்படியாக இருக்கிறது.
ஆனால் ஒரு வாகனம் வரும்போது, எதற்கு அதன் பின்னாடி செல்ல வேண்டும்? உங்கள் தலைவனை ஆனந்தமாய் பாருங்கள்… ஆனால் பாதுகாப்பாய் பாருங்கள். ஆனால் கோயில், சர்ச், மசூதி, ட்ரான்ஸ்ஃபார்மர் மீதெல்லாமா ஏறி நின்று பார்ப்பது?
அரசு, காவல்துறை, விஜய் என இன்று நாம் யார் மீது வேண்டுமானாலும் குறை சொல்லலாம். ஆனால் கூட்டத்திற்கு வருவோர்தான் யோசிக்க வேண்டும்.
தலைவர்களுக்கு 10 லட்சத்தில் நீங்கள் ஒருவர்தான். ஆனால் உங்கள் குடும்பத்துக்கு நீங்கள் மட்டும்தான். உங்களை இழந்துவிட்டால் அவர்களுக்கு தான் வாழ்நாள் பாதிப்பு.
நான் சொல்வதெல்லாம் பாஜக கூட்டத்திற்கும் பொருந்தும். பாதுகாப்பு இருக்காதென உணர்ந்தால் நீங்கள் எங்கும் செல்லாதீர்கள். டிவியில், யூட்யூபில் பார்த்து ஆனந்தப்படுங்கள்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.