அதிமுக ஆட்சிக்கு வருவதில் விஜய்க்கு ஆட்சேபணை இல்லை – கே.பி.முனுசாமி சமாளிப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

vijay

தொழில் ரீதியாக பிரச்சினை வரும்போது அவரும் அவரது தந்தையும் அம்மாவை சந்திப்பார்கள். அம்மா அவர்கள் பிரச்சினையைத் தீர்த்து வைப்பார்கள். அவர் மகிழ்ச்சியாகச் செல்வார். அதுபோல், எடப்பாடி முதலமைச்சராக இருந்தபோது தொழில் ரீதியாக பிரச்சினை ஏற்படும் போது நேரடியாகச் சந்திப்பார். சந்தித்தவுடன் அவருக்கு தேவையான உதவிகளைச் செய்து மன நிம்மதியுடன் அனுப்பி வைப்பார் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பரப்புரை ஆலோசனை கூட்டம் திருமங்கலம் கொடி மகாலில் நடைபெற்றது. பின்னர் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ADVERTISEMENT

அப்போது, இன்று வேலூரில் நடந்த கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் தனக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள் என்று விஜய் பேசியது குறித்த கேள்விக்கு,”அவர் எங்களுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளார். அதற்கு என்ன காரணம் தெரியுமா? நடிகர் விஜய் அவருக்கு சினிமா துறையில் பல்வேறு சோதனைகள் வரும் போதெல்லாம் அதிமுக ஆட்சி பொறுப்பில் இருந்தது. தொழில் ரீதியாக பிரச்சினை வரும்போது அவரும் அவரது தந்தையும் அம்மாவை சந்திப்பார்கள். அம்மா அவர்கள் பிரச்சினையைத் தீர்த்து வைப்பார்கள். அவர் மகிழ்ச்சியாகச் செல்வார்.

அதுபோல், எடப்பாடி முதலமைச்சராக இருந்தபோது தொழில் ரீதியாக பிரச்சினை ஏற்படும் போது நேரடியாகச் சந்திப்பார். சந்தித்தவுடன் அவருக்கு தேவையான உதவிகளைச் செய்து மன நிம்மதியுடன் அனுப்பி வைப்பார். ஆனால் இந்த 5 ஆண்டு காலத்தில் விஜய்க்கு தொழில் ரீதியாக பல்வேறு தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின் அந்தத் துறையில் தயாரிப்பாளராகவும் வினியோகஸ்தராகவும் இருக்கும் நிலையில், இவருடைய திரைப்படங்கள் முழுவதும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின. அதனால் பாதிக்கப்பட்டு, காயப்பட்ட விஜய், ‘நமக்கு உதவி செய்தவர்களை நன்றியுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்; நமக்குத் தொல்லை கொடுத்தவர்கள் தான் எங்களுக்கு எதிரி; அவர்களை ஒழிக்காமல் விடமாட்டேன்’ என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்.

ADVERTISEMENT

யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று சொல்லவில்லை. எதிரிகள் ஒழிந்து விடுவார்கள் என்றார். அப்படியென்றால், ஆட்சிக்கு வருபவர் மீது அன்பு வைத்துள்ள அண்ணா திமுக ஆட்சிக்கு வருவதில் அவருக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share